பரிகாரத் தலங்கள்

குரு தோஷ பரிகாரத் தலம் தெய்வநாதேஸ்வரர் கோவில், இலம்பையங்கோட்டூர்

என்.எஸ். நாராயணசாமி

தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 13-வது தலமாக விளங்குவது இலம்பையங்கோட்டூர். தற்போது இத்தலம் எலுமியன்கோட்டூர் என்று வழங்கப்படுகிறது. தொண்டை நாட்டு குரு பரிகாரத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. 

இறைவன் பெயர்: தெய்வநாதேஸ்வரர், சந்திரசேகரர், அரம்பேஸ்வரர்

இறைவி பெயர்: கனககுசாம்பிகை, கோடேந்து முலையம்மை

எப்படிப் போவது

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் (திருவிற்கோலம்) சிவஸ்தலத்திலிருந்து தென்மேற்கே 4 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள பெரிய ஊர் திருவள்ளூர். திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம். சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் மார்க்கத்திலுள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று, பின் ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம். 

ஆலய முகவரி

அருள்மிகு தெய்வநாதேஸ்வரர் திருக்கோவில்
எலுமியன்கோட்டூர்,
கப்பாங்காட்டூர் அஞ்சல், எடையார்பாக்கம் வழி
ஸ்ரீபெரும்புதூர் வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் - 631 553.

இவ்வாலயம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய குருக்கள் வீடு அருகிலேயே இருப்பதால், எந்நேரமும் தரிசனம் செய்யலாம்.

தல வரலாறு 

திரிபுர சம்ஹாரத்தின்போது, இறைவன் தேரேறி புறப்பட்டுச் சென்றார். அவருடன் சென்ற தேவர்கள், விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவர் தேரின் அச்சை முறித்தார். தேர் நிலை குலைந்து சாய்ந்தது. தேர் கீழே விழாமல் தாங்கிப் பிடித்தபோது, சிவபெருமான் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை கீழே விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். அந்த இடம்தான் இத்தலம் என்று தல புராணம் கூறுகிறது. 

தேவர்கள் படைக்குத் தலைமை ஏற்று திரிபுர சம்ஹாரம் செய்ததாலும், அவர்களால் வழிபடப் பெற்றதாலும் இத்தல இறைவன் தெய்வநாதேஸ்வரர் என்று பெயர் பெற்றார். மேலும், தேவலோக மங்கையான அரம்பை இத்தல இறைவனைப் பூஜித்து, தனக்கு என்றும் மாறாத இளமை வேண்டுமென்று பிரார்த்தித்தாள். அரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இரம்பை வழிபட்ட இத்தலம் இரம்பைக்கோட்டூர் ஆயிற்று. பிறகு நாளடைவில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி, தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்குகிறது.


ஞானசம்பந்தரை வரவழைத்தது 

ஞானசம்பந்தர் மற்ற தொண்டை நாட்டுத் தலங்களை தரிசித்துக்கொண்டு இத்தலம் வழியே வந்துகொண்டிருந்தார். அப்போது இறைவன் ஒரு சிறு பிள்ளையாகவும், பின் ஒரு முதியவர் போன்றும் தோன்றி வழிமறித்து இக்கோவில் இருப்பதை உணர்த்த, உடன் வந்த அடியார்கள் அதை தெரிந்துகொள்ளவில்லை. பிறகு, இறைவன் ஒரு வெள்ளைப் பசு உருவில் வந்து சம்பந்தர் ஏறி வந்த சிவிகையை முட்டியது. சீர்காழிப் பிள்ளையான சம்பந்தர் வியந்து, அப்பசு காட்டிய குறிப்பின்படி அதைத் தொடர்ந்து செல்ல, இத்தலம் அருகே வந்தவுடன் பசு மறைந்துவிட்டது. அப்போதுதான், இறைவனே பசு உருவில் நேரில் வந்து இத்தலத்தைப் பற்றி உணர்த்தியதை சம்பந்தர் அறிந்தார். பின் இத்தலம் வந்த சம்பந்தர், இறைவனைப் பதிகம் பாடி வழிபட்டார். தனது பதிகத்தின் 3-வது பாட்டில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்.

பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம்
பண்டுவெங்கூற்றுதைத்து அடியவர்க்கருளும்
காலனாம் எனதுரை தனதுரையாகக்
கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனைவண்டு பண்செய்ய
நீர்மலர்க் குவளைகள் தாதுவிண்டோங்கும்
ஏல நாறும் பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்எழில் கொள்வதியல்பே.

இத்தலத்துப் பதிகத்தில், ஞானசம்பந்தர் எனதுரை தனதுரையாக என்ற தொடரை, பாடல்தோறும் அமைத்துப் பாடியுள்ளார். தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தி அருள் புரிபவன் இத்தல இறைவன் என்று சிறப்பித்துப் பாடுகிறார்.

கோவில் அமைப்பு 

இந்த ஆலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகாரநந்தி மண்டபம் உள்ளன. இத்தலத்தில் கொடிமரம் இல்லை. வெளிப்பிராகாத்தில் இடதுபுறம் அரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறையில் இறைவன் தெய்வநாதேஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் காட்சி தருகிறார். ஆலயத்துக்கு ஒரு பிராகாரம் மட்டுமே உள்ளது. பிராகாரம் வலம் வருகையில் குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் மகாவிஷ்ணு, அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர். 

இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோகதட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்துக் காணப்படுகிறார். வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களோடு, பாதத்தில் முயலகன் அழுந்திக் கிடக்க, மிக அமைதியாக அமர்ந்திருக்கின்ற இவரது சிற்பம் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். அம்பாள், கனககுசாம்பிகை என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கியபடி தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார். குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.

இத்தல இறைவன் ஒரு சுயம்பு லிங்கமாகும். மூலவர், தீண்டாத் திருமேனி. பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இவ்வாலயத்துக்கு வெளியே இருபுறமும் திருக்குளங்களாக இத்தலத்தின் தீர்த்தங்களான மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கியுள்ளான். 

வருடத்தில் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலும், செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலும் சூரியனின் ஒளிக்கற்றைகள் சுவாமி மீது படுகின்றன. தேவர்கள் வழிபட்ட தெய்வநாதேஸ்வரரை வணங்கிட தோஷங்கள் நீங்கும். குரு பெயர்ச்சி, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு போன்றவை இக்கோவிலில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்களும் இத்தல இறைவனை வழிபட்டு தலகள் தோஷம் நீங்கப் பெறலாம்.

திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம் ஒன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இலம்பையங்கோட்டூரில் எழுந்தருளியுள்ள இறைவன் மீது தான் பாடிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள், தம் கொடிய துயர்கள் ஓடிக்கெட விண்ணவரோடும் வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப் பெறுவார்கள் என்று இத்தலத்தின் சிறப்பை குறிப்பிடுகிறார்.

மலையினார்பருப்பதந் துருத்திமாற்பேறு மாசிலாச்சீர்மறைக்     காடுநெய்த்தானம்
நிலையினான் எனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந்     தேறியநிமலன்
கலையினார்மடப்பிணை துணையொடுந்துயிலக்     கானலம்பெடைபுல்கிக் கணமயிலாலும் 
இலையினார்பைம்பொழிலிலம்பையங்கோட்டூரிருக்கையாப்பேணி    யென்னெழில்கொள்வதியல்பே.

திருமலர்க்கொன்றையா னின்றியூர்மேயான் றேவர்கடலைமகன்     றிருக்கழிப்பாலை
நிருமலன் எனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன்
கருமலர்க்கமழ்சுனை நீண்மலர்க்குவளை கதிர்முலையிளையவர்     மதிமுகத்துலவும்
இருமலர்த்தண்பொய்கை     யிலம்பையங்கோட்டூ ருக்கையாப்     பேணியென்னெழில் கொள்வ தியல்பே.

பாலனாம்விருத்தனாம் பசுபதிதானாம் பண்டுவெங்கூற்றுதைத்     தடியவர்க்கருளும்
காலனாம் எனதுரை தனதுரையாகக் கனலெரியங்கையி     லேந்தியகடவுள்
நீலமாமலர்ச்சுனை வண்டுபண்செய்ய நீர்மலர்க்குவளைக     டாதுவிண்டோங்கும்
ஏலநாறும்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்     பேணியென்னெழில் கொள்வதியல்பே.

உளங்கொள்வாருச்சியார் கச்சியேகம்ப னொற்றியூருறையுமண்     ணாமலையண்ணல்
விளம்புவான் எனதுரை தனதுரையாக     வெள்ளநீர்விரிசடைத்தாங்கியவிமலன்
குளம்புறக்கலைதுள மலைகளுஞ்சிலம்பக்     கொழுங்கொடியெழுந்தெங்குங் கூவிளங்கொள்ள 
இளம்பிறைதவழ்பொழிலிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்     பேணியென் னெழில்கொள்வதியல்பே.

தேனுமாயமுதமாய்த் தெய்வமுந்தானாய்த் தீயொடுநீருடன்     வாயுவாந்தெரியில்
வானுமான் எனதுரை தனதுரையாக வரியராவரைக்கசைத்     துழிதருமைந்தன்
கானமான்வெருவுறக் கருவிரலூகங் கடுவனோடுகளுமூர்     கற்கடுஞ்சாரல்
ஏனமானுழிதரு மிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்     னெழில்கொள்வதியல்பே

மனமுலாமடியவர்க் கருள்புரிகின்ற வகையலாற்பலிதிரிந்     துண்பிலான்மற்றோர்
தனமிலான் எனதுரை தனதுரையாகத் தாழ்சடையிளமதி     தாங்கியதலைவன்
புனமெலாமருவிக ளிருவிசேர்முத்தம் பொன்னொடுமணிகொழித்     தீண்டிவந்தெங்கும்
இனமெலாமடைகரை யிலம்பையங்கோட்டூ     ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

நீருளான்றீயுளா னந்தரத்துள்ளா னினைப்பவர்மனத்துளா     னித்தமாவேத்தும்
ஊருளான் எனதுரை தனதுரையாக வொற்றைவெள்ளேறுகந்     தேறியவொருவன்
பாருளார்பாடலோ டாடலறாத பண்முரன்றஞ்சிறை     வண்டினம்பாடும்
ஏருளார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்     னெழில்கொள்வதியல்பே.

வேருலாமாழ்கடல் வருதிரையிலங்கை வேந்தனதடக்கைக     ளடர்த்தவனுலகில்
ஆருலான் எனதுரை தனதுரையாக வாகமோரரவணிந்     துழிதருமண்ணல்
வாருலாநல்லன மாக்களுஞ்சார வாரணமுழிதரு மல்லலங்கானல்
ஏருலாம்பொழிலணி யிலம்பையங்கோட்டூ     ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

கிளர்மழைதாங்கினா னான்முகமுடையோன் கீழடிமேன்முடி     தேர்ந்தளக்கில்லா
உளமழை எனதுரை தனதுரையாக வொள்ளழலங்கையி     லேந்தியவொருவன்
வளமழையெனக்கழை வளர்துளிசோர மாசுணமுழிதரு     மணியணிமாலை
இளமழைதவழ்பொழி லிலம்பையங்கோட்டூ     ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

உரிஞ்சனகூறைக ளுடம்பினராகி யுழிதருசமணருஞ்     சாக்கியப்பேய்கள்
பெருஞ்செல்வன் எனதுரை தனதுரையாகப் பெய்பலிக்கென்றுழல்     பெரியவர்பெருமான்
கருஞ்சினைமுல்லைநன் பொன்னடைவேங்கை களிமுகவண்டொடு     தேனினமுரலும்
இருஞ்சுனைமல்கிய விலம்பையங்கோட்டூ     ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

கடலொலியோதங் கானலங்கழிவளர் கழுமலமென்னும்
நந்தியாருறைபதி நான்மறைநாவ னற்றமிழ்க்கின்றுணை     ஞானசம்பந்தன்
எந்தையார்வளநகர் இலம்பையங்கோட்டூர் இசையொடுகூடிய     பத்தும்வல்லார்போய்
வெந்துயர்கெடுகிட விண்ணவரோடும் வீடுபெற்று இம்மையின் வீடு     எளிதாமே.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் மு.இரேமேஷ்குமார் ஓதுவார் சிவகாசி

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் இரா.குமரகுருபரன் ஓதுவார், திருப்பரம்குன்றம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT