பங்குனி மாத பிரம்மோற்ஸவம் சிறப்புபெற்ற கபாலீஸ்வரர் கோவில், திருமயிலை (சென்னை)

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்கள் வரிசையில் 23-வது தலமாக இருப்பது திருமயிலை.
பங்குனி மாத பிரம்மோற்ஸவம் சிறப்புபெற்ற கபாலீஸ்வரர் கோவில், திருமயிலை (சென்னை)

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்கள் வரிசையில் 23-வது தலமாக இருப்பது திருமயிலை. நலம் தரும் பரிகாரத் தலங்கள் என்ற இத்தொடரின் மூலம் பல சிவஸ்தலங்களை தரிசித்துவந்த நாம், இன்று சற்று மாறுபட்டு, இந்தப் பங்குனி மாதத்தில் சிறப்பாக திருவிழா கொண்டாடும் தலங்களில் ஒன்றான திருமயிலை தலத்தைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் காண்போம். 

இறைவன் பெயர்: கபாலீஸ்வரர்

இறைவி பெயர்: கற்பகாம்பாள்

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. இறந்துபோன ஒரு பெண்ணின் எலும்பை வைத்து பதிகம் பாடி உயிருள்ள பெண்ணாக மாற்றி அருளிய சிறப்புபெற்ற பதிகம்.

எப்படிப் போவது

சென்னை நகரின் மத்தியில் மயிலாப்பூரில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் திருமயிலைக்கு நகரப் பேருந்து வசதிகள் உண்டு. திருமயிலை புறநகர் ரயில் நிலையம், கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில்,
மயிலாப்பூர்,
சென்னை - 600 004.
இவ்வாலயம், காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு 
கிழக்கு, மேற்கு திசைகளில் கோபுரங்களைக் கொண்ட இவ்வாலயம், சென்னை நகரின் மையப் பகுதியான மயிலாப்பூரில் அமைந்திருக்கிறது. கிழக்கில் உள்ள கோபுரமே ராஜகோபுரமாகும். 7 நிலைகளும் சுமார் 120 அடி உயரமும் உடையது. ஒரு விசாலமான வெளிப் பிராகாரமும், முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிராகாரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காண்பது கிழக்கு வெளிப் பிராகாரம். இதில் வரிசையாக அண்ணாமலையார், நர்த்தன விநாயகர், ஜகதீசுவரர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தெற்குப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கிய நவராத்திரி மண்டபமும், மேற்கு நோக்கிய சிங்காரவேலர் சந்நிதியும் அமைந்துள்ளன. 

மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிராகாரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். இதைக் கடந்தவுடன் சுவாமி சந்நிதி நுழைவு வாயிலின் முன்னுள்ள மண்டபத்தில், இடதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கற்பகாம்பாள் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதிக்குள் நுழைந்தவுடன், இத்தலத்தின் இறைவன் கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நாம் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.

தலப் பெயர் வரலாறு 

சிவனைப்போலவே பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால், தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டு, அவர் ஆணவத்துடன் இருந்தார். பிரம்மா, ஒவ்வொரு யுகம் அழியும்போது அழிந்துவிடுவார். மீண்டும் புது யுகம் உண்டாகும்போது, புதிதாக ஒரு பிரம்மா படைக்கப்படுவார். ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால், அவர் நிலையில்லாதவர் ஆகிறார். சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல் பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்த சிவபெருமான், அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார். எனவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார். தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது.

மேற்கு வெளிப் பிராகாரத்தில் அருணகிரிநாதரின் திருவுருவம் ஒரு சிறிய சந்நிதியில் சிங்காரவேலர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வடக்கு வெளிப் பிராகாரத்தில் தலவிருட்சம் புன்னை மரமும், அதன் அருகில் புன்னைவனநாதர் சந்நிதியும் உள்ளது. அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டி தவம் இருந்தபோது, சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார். புன்னைவனநாதர் சந்நிதிக்குப் பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறது. இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது. 

வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சனி பகவான் அருள் புரிகிறார். தெற்குப் பிராகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் சிங்காரவேலர் என்ற பெயருடன் 6 திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மேற்கு நோக்கி மயில் மீது எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் யானை மீது அமர்ந்து காட்சி தருகின்றனர். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 10 பாடல்கள் உள்ளது. 

தல வரலாறு 

1. பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அவ்வேளையில் மயில் ஒன்று நடனமாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை, உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பார். இப்போது குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற என்று மயிலாக மாறும்படி செய்துவிட்டார்.

அம்பிகை தன் குற்றத்துக்கு விமோசனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி, அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.

2. திருமயிலை தலத்தில் சிவநேசர் எனபவர் வாழ்ந்துவந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்குப் பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர், தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். அவ்வாறு இருக்கையில், ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக்கொண்டு இருந்தபோது பாம்பு தீண்டி இறந்துபோனாள். மகள் இறந்துவிட்டபோதிலும், அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர, மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு புது மண்பாண்டத்தில் இட்டு பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.

திருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர், அவரை வலம் வந்து தொழுதார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டுவந்து சம்பந்தர் முன் வைத்து, பூம்பாவை பற்றிய விவரங்களைச் சொல்லி அழுதார். சம்பந்தர், திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை" என்று தொடங்கும் பதிகம் பாடினார். பதிகம் பாடி முடித்ததும், குடத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்த பூம்பாவை, சம்பந்தரை வணங்கினாள். சிவநேசர், சம்பந்தரை வணங்கி பூம்பாவையை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததன் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறி, சிவநேசரின் கோரிக்கையை சம்பந்தர் நிராகரித்துவிடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டுசெய்து, பின் முக்தி அடைந்தாள்.

இக்கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பிரம்மோற்ஸவத்தின் 8-ம் நாள் காலையில் நடக்கிறது. அப்போது சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவமூர்த்திகள், கபாலி தீர்த்தத்துக்கு எழுந்தருள்கின்றனர். ஒரு கும்பத்தில் அஸ்திக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாகச் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அறுபது, எண்பதாம் திருமணம் செய்ய ஏற்ற தலம் இது. 

63 நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் அவதாரம் செய்த தலம் என்ற சிறப்பு பெற்றது மயிலாப்பூர். ராமர், மாகவிஷ்ணு முதலியோர் பூஜித்த பெருமையுடைய தலம். இராமபிரான் இத்தலத்தில இறைவனை வழிபட்டு, ஐப்பசி ஓண நாளில் பிரம்மோற்ஸவம் நடத்துவித்தார். முருகர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு வேலாயுதம் பெற்ற புராண வரலாற்றை உடைய தலம் இதுவாகும். சுக்கிர பகவானும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.

பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது, இக்கோயிலில் நடக்கும் பன்னிரு திருமுறை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவின் 8-ம் நாளில், 63 நாயன்மார்களும் வீதியுலா செல்கின்றனர். இது, அறுபத்து மூவர் விழாவாகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோல், மாசி மாத பிரம்மோற்ஸவத்தின்போது பௌர்ணமியில் இங்கு நடக்கும் கடலாட்டு விழாவும் பிரசித்திபெற்றது. அப்போது, சிவன் கடலுக்குச் சென்று தீர்த்த நீராடி வருகிறார். சம்பந்தர் தனது பதிகத்தில் 6-வது பாடலில் கடலாட்டு விழாவைப் பற்றியும், பக்தர்கள் கடலாடுவதை இறைவன் பார்த்தபடி இருப்பதையும் குறிப்பிடுவதால், தேவார காலத்தில் இத்தலம் கடலருகே இருந்தது என்பது தெரியவருகிறது. 

சென்னை நகரின் இன்றைய சாந்தோம் என்ற பகுதியில் பழைய ஆலயம் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. “பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசி மக நாளில் பக்தர்கள் கடலில் புனித நீராடிவதைக் கண்டு களிப்போடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?” என்று தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மூவரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களில், சுவாமி மற்றும் தலத்தின் பெருமைகளை குறிப்பிட்டுத்தான் பெரும்பாலும் பதிகம் பாடப்பட்டுள்ளது. ஆனால், இத்தலம் வந்த சம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பிக்க இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்களின் சிறப்புகளைக் குறிப்பிட்டு 11 பதிகங்கள் பாடினார். சம்பந்தர் பாடிய பதிகத்தில் திருமயிலை கோவிலைப் பற்றியும், இங்கு சிறப்பாக நடக்கும் விழாக்களைப் பற்றியும் குறிப்பிட்டு, இவற்றை எல்லாம் பார்த்து அனுபவிக்காமல் நீ இறந்துபோகலாமா பூம்பாவை என்று தன் பதிகத்தில் பாடுகிறார். இவ்வாறு திருவிழா குறித்து பதிகம் பெற்ற பெருமையுடைய தலம் இது.

1. மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். 

நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ? என்று இப்பாடலில் கூறுகிறார்.

2. மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.

இத்தலத்தில் நடைபெறும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவ முனிவர் அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வது முறையோ? என்று 2-வது பாடலில் கூறுகிறார்.

3. வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

கார்த்திகை மாதத்தில் நடைபெறும் விழாக்களின்போது சாந்தணிந்த இளமகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? என்று 3-வது பாடலில் கூறுகிறார்.

4. ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். 

கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ? என்று 4-வது பாடலில் கூறுகிறார்.

5. மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். 

இத்தல இறைவனுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய் ஒழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ? என்று 5-வது பாடலில் கூறுகிறார்.

6. மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடலானே றூரும் அடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். 


மயிலாப்பூரில் மாசி மக நாளில் கடலாட்டுக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ரிஷப வாகனத்தில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? என்று 6-வது பாடலில் கூறுகிறார்.

7. மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய். 

கபாலீச்சரம் என்னும் கோயிலில் அருள்பாலிக்கும் இறைவனது பலி அளிக்கும் விழாவாகப் பங்குனி உத்தர நாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக் காணாது செல்வது முறையோ? என்று 7-வது பாடலில் கூறுகிறார்.

8. தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய். 

சித்திரை அஷ்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டு மகிழாது செல்வது முறையோ? என்று 8-வது பாடலில் கூறுகிறார். அஷ்டமி விழா முற்காலத்தில் நடைபெற்றுவந்தது என இப்பாடலின் மூலம் தெரியவருகிறது. இன்றைய நாளில் சித்திரை பௌர்ணமி நாள் கொண்டாடப்படுகிறது.

9. நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய். 

கபாலீச்சரம் அமர்ந்து உறையும் பெருமானுக்கு நிகழும் ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக் காணாது செல்வது முறையோ? என்று 9-வது பாடலில் கூறுகிறார்.

10. உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய். 

கபாலீச்சரத்தானுக்கு நிகழும் நல்ல பெருஞ்சாந்தி விழாவைக் காணாது செல்வது முறையோ? என்று 10-வது பாடலில் கூறுகிறார் பெருஞ்சாந்தி என்பது குடமுழுக்கு வைபவத்தைக் குறிக்கிறது. இதை பவித்திரோற்ஸவம் என்றும் குறிப்பிடுவதுண்டு.

11. கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே. 

தனது இப்பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர், வீடுபெற்ற சிவகணத்தவரோடு கூடி நிலைத்து வாழ்வர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் முடிவில் குறிப்பிடுகிறார்.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் இரா. குமரகுருபரன்

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் குமாரவயலூர் பாலச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com