சூரிய தோஷ பரிகாரத் தலம் - பனங்காட்டீசர் கோவில், புறவார் பனங்காட்டூர்

பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்கள் வரிசையில் 20-வது தலமாக இருப்பது புறவார் மனங்காட்டூர்...
சூரிய தோஷ பரிகாரத் தலம் - பனங்காட்டீசர் கோவில், புறவார் பனங்காட்டூர்

பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்கள் வரிசையில் 20-வது தலமாக இருப்பது புறவார் மனங்காட்டூர் என்ற சிவஸ்தலம். இத்தலம் இந்நாளில் பனையபுரம் என்று வழங்குகிறது. சூரிய பகவான் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க பல தலங்களில் சிவபெருமானை வழிபட்டுள்ளார். இவ்வாறு சிவனை சூரிய பகவான் வழிபட்ட தலங்கள் யாவும் சூரிய தோஷ பரிகாரத் தலங்களாக போற்றப்படுகின்றன. அவ்வகையில், புறவார் பனங்காட்டூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. 

இறைவன் பெயர்: பனங்காட்டீஸ்வரர்

இறைவி பெயர்: சத்தியாம்பிகை, புறவம்மை

எப்படிப் போவது

விழுப்புரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டு - விழுப்புரம் ரயில் பாதையில் உள்ள முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் விழுப்புரம். விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியாக புதுச்சேரி செல்லும் பேருந்தில் சென்றால் கோயில் அருகிலேயே இறங்கலாம். திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் விக்கிரவாண்டியைக் கடந்தவுடன் பண்ருட்டி செல்லும் சாலை இடதுபுறம் பிரியும். அச்சாலையில் சென்றால் பனையபுரம் கூட்டு ரோடு வரும். இங்கு, புதுச்சேரி செல்ல இடதுபுறம் திரும்பினால், மிக அருகிலேயே ஆலயம் உள்ளது. 

ஆலய முகவரி

அருள்மிகு பனங்காட்டீசர் திருக்கோவில்
பனையபுரம் அஞ்சல், முண்டியம்பாக்கம்,
விழுப்புரம் வட்டம்.
விழுப்புரம் மாவட்டம் - 605 603.

இவ்வாலயம், காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


தல வரலாறு

சிவபெருமானை நிந்தித்து தட்சன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அவர்களில் சூரியனும் ஒருவர். அகோர வீரபத்திரர், சிவபெருமான் கட்டளைப்படி தட்சனது வேள்விச்சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தார்.

சூரியன் தான் செய்த தவறுக்கு வருந்தி, சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து, உலகனைத்துக்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றான். சூரியன் வழிபட்ட தலங்களில், புறவார் பனங்காட்டூர் என்ற இத்தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில், ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியக் கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.

கோவில் அமைப்பு 

நான்கு நிலைகளை உடைய ஒரு சிறிய கோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் நுழைந்து உள் சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில், தலமரமாகிய பனை மரங்கள் மூன்று உள்ளன. நவக்கிரக சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் உள்ளது.

உள் வாயில் கடந்து சென்றால் சுவாமி சந்நிதியை அடையலாம். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், அறுபத்துமூவர் மற்றும் பல சிலா ரூபங்கள் உள்ளன. இவற்றில், திருநீலகண்டர் தம் மனைவியுடன் கூடி, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் அமைப்பு காணத்தக்கது. மேலும் உள் சுற்றில் சப்தமாதர்கள், ரிஷபாரூடர், மகாவிஷ்ணு, கஜலஷ்மி, நால்வர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சோமாஸ்கந்தர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

அம்பாள் சந்நிதி, கிழக்கு நோக்கி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி நுழைவாயிலில் துவாரபாலகியர் சுதையில் உள்ளனர். அம்பாள் சத்யாம்பிகை நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.

சிபிச் சக்கரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவை காப்பதற்காக, தன் உடம்பிலிருந்து சதையை அறுத்துக் கொடுத்த செயலுக்காக, இத்தலத்து இறைவன் அவனது கடமை உணர்வைப் பாராட்டி அருள் செய்தார் என்று கூறுவர். 

பனை மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட 5 தலங்களில் பனையபுரம் என்கிற புறவார் பனங்காட்டூர் தலமும் ஒன்றாகும். 

திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்துக்கான பதிகம் 2-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இப்பதிகத்திலுள்ள 10 பாடல்களையும் பாடுவர்கள் சிவலோகம் சேர்வர் என்று தன் பதிகத்தின் 10-வது பாடலில் குறிப்பிடுகிறார்.

1. விண்ண மர்ந்தன மும்ம தில்களை வீழ வெங்கணை யாலெய் தாய்விரி
பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ண மர்ந்தொரு பாக மாகிய பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
கண்ணமர்ந் தவனே கலந்தார்க் கருளாயே.

2. நீடல் கோடல் அலரவெண் முல்லை நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்
தோடி லங்கிய காத யன்மின் துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே.

3. வாளை யுங்கய லும்மிளிர் பொய்கை வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
பூளை யுந்நறுங் கொன்றை யும்மத மத்த மும்புனை வாய்க ழலிணைத்
தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.

4. மேய்ந்தி ளஞ்செந்நென் மென்க திர்கவ்வி மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி யாடும் அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
சாய்ந்தடி பரவுந் தவத்தார்க் கருளாயே.

5. செங்க யல்லொடு சேல்செ ருச்செயச் சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்
கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
அங்கை யாடலனே அடியார்க் கருளாயே.

6. நீரி னார்வரை கோலி மால்கடல் நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்
காரி னார்மலர்க் கொன்றை தாங்கு கடவு ளென்றுகை கூப்பி நாடொறும்
சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே.

7. கைய ரிவையர் மெல்வி ரல்லவை காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி
பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்
மெய்ய ரிவையொர் பாக மாகவும் மேவி னாய்கழ லேத்தி நாடொறும்
பொய்யிலா வடிமை புரிந்தார்க் கருளாயே.

8. தூவி யஞ்சிறை மெல்ந டையன மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
மேவி யந்நிலை யாய ரக்கன தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
ஏவியெம் பெருமான் என்பவர்க் கருளாயே.

9. அந்தண் மாதவி புன்னை நல்ல அசோக மும்மர விந்தம் மல்லிகை
பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.

10. நீண மார்முரு குண்டு வண்டினம் நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
நாண ழிந்துழல் வார்ச மணரும் நண்பில் சாக்கிய ரும்ந கத்தலை
ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே.

11. மையி னார்மணி போல்மி டற்றனை மாசில் வெண்பொடிப் பூசும்                             மார்பனைப்
பைய தேன்பொழில்சூழ் புறவார் பனங்காட்டூர்
ஐய னைப்புக ழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com