பரிகாரத் தலங்கள்

அனைத்து நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய தலம் - ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் (பகுதி 1)

என்.எஸ். நாராயணசாமி

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 19-வது தலமாக இருப்பது திருவொற்றியூர். திருமணத் தடை நீங்க, புத்திர பாக்கியம் பெற 27 நட்சத்திரங்களின் பெயரில் இத்தலத்தில் அமைந்துள்ள சிலலிங்கங்களில் தங்கள் நட்சத்திரத்துக்கு உரிய சிவலிங்கத்தை வழிபாடு செய்வதன் மூலம் பலன் பெறலாம்.

இறைவன் பெயர்: ஆதிபுரீஸ்வரர், படம்பக்கநாதர், தியாகராஜர்

இறைவி பெயர்: வடிவுடைஅம்மன், திரிபுரசுந்தரி

இத்தலம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம். இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஐந்து, திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் இரண்டு என மொத்தம் 8 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது

இத்திருத்தலம், சென்னை மாநகரின் வடக்குப் பகுதியில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சென்னை நகரின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகள் திருவொற்றியூருக்குச் செல்கின்றன. புறநகர் ரயில் நிலையமும் திருவொற்றியூரில் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில்,

திருவொற்றியூர்,

சென்னை600 019.

இவ்வாலயம், வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், பெளர்ணமி நாள்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் தல வரலாறு

முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்துக்குப் பின் புதிய உலகத்தைப் படைக்க பிரம்மா கேட்டபோது, சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய வெள்ளத்தை ஒற்றச் செய்து புதிய உலகைப் படைக்க பிரம்மாவுக்கு அருள் புரிந்ததால், இத்தலம் ஒற்றுயூர் எனப் பெயர் பெற்றது. அந்த வெப்பக் கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. மற்றொரு காரணமாக, இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக்கொண்டதால் (ஒற்றிக்கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு இத்தலம் ஒற்றியூர் எனவும் அழைக்கப்பட்டது.

ஒரு காலத்தில் சூரிய குலத்தைச் சார்ந்த மாந்தாதா என்ற மன்னன், சிவஸ்தலங்கள் உள்பட எல்லா ஊர்களுக்கும் இறை விதித்து சுற்றோலை அனுப்பினான். அப்போது, அவனுக்கும் ஓலை எழுதிய நாயகத்துக்கும் தெரியாதபடி வரி பிரிந்து ‘இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க’ என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததைப் படித்து வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், பெருமானுக்கு எழுத்தறியும் பெருமான் என்றும் பெயரிட்டு மாந்தாதா மன்னன் இறைவனை வழிபட்டான்.

பிரளயத்துக்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால், இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்று பூஜித்த வாசுகி என்ற பாம்புக்கு அருள்புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். அப்பாம்பின் வடிவத்தை இறைவர் திருமேனியில் இன்றும் காணலாம்.

புற்று மண்ணால் ஆன இந்த லிங்கத் திருமேனி வருடத்தில் மூன்று நாள்களைத் தவிர மற்ற நாள்களில் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சார்த்தப்பட்டு மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்படும். பெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். தொடர்ந்து 3 நாள்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்திவிடுவர். இந்த 3 நாள்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இறைவன் இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர்.

27 நட்சத்திரங்கள் இங்கு வந்து, நட்சத்திரங்களின் நாயகனான சிவபெருமானை வழிபட்டு ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி முக்திபெற்று பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றன. அந்தந்த நட்சத்திரக்காரரகள் தாங்கள் பிறந்த நாளில் அந்த நட்சத்திர லிங்கத்தை வழிபடுவது இத்தலத்தில் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. தெற்கு வெளிப் பிராகாரத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் வரிசையாக உள்ளன.

சுந்தரர் திருமணம்

சுந்தரர், திருவொற்றியூர் இறைவனைத் தரிசிக்க வந்தபோது, இறைவனுக்குப் பூமாலை கட்டித் தரும் தொண்டினை செய்துவந்த சங்கிலி நாச்சியாரைக் கண்டார். அவளை மணந்துகொள்ள விரும்பி, இறைவனை அவளிடம் காதல் தூது செல்லும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி, சங்கிலி நாச்சியாரின் கனவில் இறைவன் தோன்றி சுந்தரரை மணந்துகொள்ளும்படி கூறினார். சுந்தரர் ஏற்கெனவே திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்துகொண்டிருந்தார். அதனால், சுந்தரர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவாரே என்று சங்கிலி நாச்சியார் கூறினார். இறைவன் இதை சுந்தரரிடம் கூறினார். அதற்கு சுந்தரர், இறைவனிடம், ஊர் ஊராகச் சென்று இறைவனைப் பாடும் நான் ஒரே ஊரில் இருப்பது இயலாத காரியம் என்றும், இறைவன் முன் சங்கிலி நாச்சியாரிடம் உன்னைப் பிரியமாட்டேன் என்ற சத்தியம் செய்து கொடுத்தால் அதை மீற முடியாது என்பதாலும், சத்தியம் செய்யும் சமயத்தில் சந்நிதியில் இல்லாமல் மகிழ மரத்தடியில் ஒளிந்துகொள்ளும்படியும் கூறினார்.

இந்த விவரத்தை இறைவன் சங்கிலி நாச்சியாரிடம் போய் கூறிவிட்டார். எனவே, திருமணம் நடக்கும் சமயம், சங்கிலி நாச்சியார் சுந்தரரிடம் மானிடராகிய நாம் தெய்வ சந்நிதானத்தில் சத்தியம் செய்வது முறையல்ல என்று கூறி மகிழ மரத்தடியில் சத்தியம் செய்து கொடுக்கும்படி கேட்டிக் கொண்டார். சுந்தரரும் வேறு வழியின்றி மகிழ மரத்தடியில் ஒளிந்து இருந்த இறைவனை மூன்று முறை வலம் வந்து ‘என்றும் உன்னைப் பிரியமாட்டேன்’ என்று சத்தியம் செய்து சங்கிலி நாச்சியாரை மணந்துகொண்டார். இந்த மகிழ மரம் வடக்கு வெளிப் பிராகாரத்தில் உள்ளது. இந்தச் சபத நிகழ்ச்சி இன்றும் மாசிப் பெருவிழாவின்போது ‘மகிழடி சேவை’ விழாவாக நடைபெறுகிறது.

இவ்வாலயத்தின் மற்ற சிறப்புகளைப் பற்றியும் ஆலயத்தின் அமைப்பைப் பற்றியும் அடுத்த பகுதியில் காணலாம்.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மீது இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. சங்கிலி நாச்சியாரிடம்  உன்னை விட்டுப் பிரியேன் என்று சத்தியம் செய்து திருமணம் செய்துகொண்ட சுந்தரர், சிறிது காலத்துக்குப் பிறகு திருவாரூர் தியாகேசர் நினைவு வர திருவொற்றியூரை விட்டுப் புறப்பட்டார். சத்தியத்தை மீறியதால், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் அவரது இரு கண்களிலும் பார்வையை இழந்தார். கண்களில் பார்வையை இழந்த சுந்தரர், இத்தலத்து இறைவனை நோக்கி இப்பதிகத்தைப் பாடி தனது தவறை மன்னித்து ஆட்கொள்ளும்படி வேண்டுகிறார்.

அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்

அதுவும் நான்படற் பாலதொன் றானால்

பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்

பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன்

வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்

மற்று நான்அறி யேன்மறு மாற்றம்

ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

கட்ட னேன்பிறந் தேனுனக் காளாய்க்

காதற் சங்கிலி காரண மாக

எட்டி னால்திக ழுந்திரு மூர்த்தீ

என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்

பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்

பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை

ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே

கட்டி யேபலர்க் குங்களை கண்ணே

அங்கை நெல்லியின் பழத்திடை யமுதே

அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்

சங்கும் இப்பியுஞ் சலஞ்சல முரல

வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி

ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றால்

யாவ ராகில்என் அன்புடை யார்கள்

தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற்

சொல்லு வாரையல் லாதன சொல்லாய்

மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்

கொள்வ தேகணக் குவ்வழக் காகில்

ஊன்று கோலெனக் காவதொன் றருளாய்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்

உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்

சுழித்த லைப்பட்ட நீரது போலச்

சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளம்

கழித்த லைப்பட்ட நாயது போல

ஒருவன் கோல்பற்றிக் கறகற விழுக்கை

ஒழித்து நீஅரு ளாயின செய்யாய்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

மானை நோக்கியர் கண்வலைப் பட்டு

வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்

தேனை ஆடிய கொன்றையி னாய்உன்

சீல முங்குண முஞ்சிந்தி யாதே

நானு மித்தனை வேண்டுவ தடியேன்

உயிரொ டுந்நர கத்தழுந் தாமை

ஊன முள்ளன தீர்த்தருள் செய்யாய்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

ற்றுத் தேவரை நினைந்துனை மறவே

னெஞ்சி னாரொடு வாழவு மாட்டேன்

பெற்றி ருந்து பெறாதொழி கின்ற

பேதை யேன்பிழைத் திட்டதை யறியேன்

முற்று நீயெனை முனிந்திட அடியேன்

கடவ தென்னுனை நான்மற வேனேல்

உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

கூடினாய் மலை மங்கையை நினையாய்

கங்கை யாயிர முகமுடை யாளைச்

சூடினாய் என்று சொல்லிய புக்கால்

தொழும்பனே னுக்குஞ் சொல்லலு மாமே

வாடி நீயிருந் தென்செய்தி மனமே

வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி

ஊடினால் இனி ஆவது ஒன்று உண்டே

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

மகத்திற் புகது ஓர் சனி எனக்கு ஆனாய்

மைந்தனே மணி யே மணவாளா

அகத்திற் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால்

அழையல் போ குருடா எனத் தரியேன்

முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்

முக்கணா முறையோ மறை ஓதீ

உகைக்குந் தண்கடல் ஓதம் வந் உலவும்

ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

ஓதம் வந்து உலவும் கரை தன்மேல்

ஒற்றியூர் உறை செல்வனை நாளும்

ஞாலந்தான் பரவப்படுகின்ற

நான்மறை அங்கம் ஓதிய நாவன்

சீலம் தான் பெரிதும் மிக வல்ல

சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த

பாடல் பத்து இவை வல்லவர் தாம்போய்ப்

பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே

சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் குமாரவயலூர் பாலசந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT