113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 4

பேணும் அடியார்கள்
113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 4


பாடல் 4:

    பறையோடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர் நெடுமாடம்
    கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர் கடம்பூரில்
    மறையொலி கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும்
    பிறையுடை வார் சடையானை பேண வல்லார் பெரியோரே

விளக்கம்:

பறை=தோல் இசைக்கருவி; இயம்ப=ஒலிக்க; கண்களின் கீழ் பாகத்தில் சிகப்பு நிற கோடுகள் காணப்படுவது உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதை உணர்த்தும். அத்தகைய செவ்வரிகளை வேலில் படிந்துள்ள இரத்தக் கறைகளுக்கு ஒப்பிட்டு, கறை படிந்த வேல் போன்று நீண்டு கூர்மையாக உள்ள கண்களை என்றும் செவ்வரி ஓடிய கண்களை உடைய மகளிர் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார் என பொருள் கொள்வது பாடலின் நயத்தை உணர்த்துகின்றது. கறை என்பதற்கு கண்களுக்கு மை தீட்டி அழகு செய்வதால் ஏற்படும் கறை என்றும் சிலர் பொருள் கொள்கின்றனர். ஆடல் பாடலில் ஈடுபடும் மகளிர், தங்களை அழகுபடுத்திக் கொள்வதை நாம் இன்றும் காண்கின்றோம் என்பதால் இந்த விளக்கமும் பொருத்தமே. பெருமானைப் பேணும் அடியார்கள் பெரியோர்களாக மதிக்கப் படுவார்கள் என்று கூறுவதன் மூலம், பெருமானைப் பேணி போற்றாத மனிதர்கள் பெரியோர்களாக மதிக்கப்பட மாட்டார்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். இந்தக் கூற்று சம்பந்தர் அருளிய ஆமாத்தூர் தலத்து பதிகத்தின்  பாடல்களை நினைவூட்டுகின்றது.

இந்த பதிகத்தின் முதல் பாடலில் (2.44.1), பெருமானின் திருவடிகளைப் போற்றி புகழாத மனிதர்களின் அழகும் ஒரு அழகோ என்று கேள்வி கேட்கின்றார். அம்=அழகிய; பொக்கம்=பொலிவு மற்றும் அழகு: பெய்=உடைய, துன்னம் பெய்=தைக்கப்பட்ட; பிறைச் சந்திரனைத் தனது சடையில் பெருமான் சூடிக் கொண்ட பின்னர், சந்திரன் தான் அழியும் நிலையிலிருந்து தப்பித்து, நாளும் ஒரு பிறை பெற்று வளர்ந்தமையை குறிப்பிட பிள்ளை மதி என்று இங்கே கூறுகினார். 

    துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை
    பின் அம் சடை மேலோர் பிள்ளை மதி சூடி
    அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான் தன்
    பொன் அம் கழல் பரவா பொக்கமும் பொக்கமே

இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் திருஞானசம்பந்தர், ஆமாத்தூர் அடிகளின் திருப்பாதங்களை வணங்காதவர்களின் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையோ என்ற கேள்வியை எழுப்பி, அவர்களது வாழ்க்கை வாழ்க்கையாக மதிக்கப் படாது என்று உணர்த்துகின்றார். கருடனை ஊர்தியாகக் கொண்ட திருமாலும், தாமரையை ஆசனமாகக் கொண்ட பிரமனும் தங்களது மனதினில் தியானிக்கும் பெருமானது தன்மையை அளவிட முடியாது என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். அள்ளல்=சேறு; தலத்தின் நீர்வளமும் நிலவளமும் குறிப்பிடப் படுகின்றன.   

    புள்ளும் கமலமும் கைக் கொண்டார் தாமிருவர்
    உள்ளும் அவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே
    அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் என்
    வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே  

சுந்தரரும் வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில், பெருமானை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப்படாது என்றும், உணராதவர்களின் உணர்வு உணர்வாக கருதப்படாது என்றும், பேசாதவர்களின் பேச்சு பேச்சாக கருதப்படாது என்றும், துதிக்காதவர்களின் துதி துதியாக கருதப்படாது என்றும், பெருமானை குறித்த செய்திகளை கல்லாதவர்களின் கல்வி கல்வியல்ல என்றும், பெருமானை நினையாதவர்களின் நினைவு நினைவல்ல என்றும், பெருமானை நினைத்து மனம் நெகிழாதவர்களின் உருக்கம் உருக்கமல்ல என்றும் கூறுகின்றார். இந்த பதிகத்தின் (7.86) ஒரு பாடலை நாம் இங்கே காண்போம். படிறன்=வஞ்சகன், கள்வன்; மற்றவர்களின் வாழ்நாளை நிர்ணயித்த நாளில், அறுக்கும் காலனின் வாழ்க்கையை அறுத்த இறைவன் என்று சுந்தரர் கூறுகின்றார்.  

    மெய்யன் வெண்பொடி பூசும் விகிர்தன் வேத முதல்வன்
    கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம் அறுத்தான்
    பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் பனங்காட்டூர்
    ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவு என்னே.

திருமணஞ்சேரி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.87.5) அப்பர் பிரான் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து வாழ்த்தி வாழும் மனிதர்களின் வாழ்க்கையே வாழ்வாக கருதப் படும் என்று கூறுகின்றார்.

    துள்ளும் மான்மறி தூ மழுவாளினர்
    வெள்ள நீர் சடை கரந்தார் மேலவர்
    அள்ளலார் வயல் சூழ் மணஞ்சேரி எம் 
    வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே 

வேத ஒலிகளும் கீத ஒலிகளும் இசைக்க ஆடும் பெருமான் என்று சம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு அவர் தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது.  

  ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
  நாடினாய் இடமா நறுங் கொன்றை நயந்தவனே
  பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனிக்கால் கதிர் வெண் திங்கள்
  சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே

பனிகால்=குளிர்ச்சியைத் தரும்; எம=எம்முடைய; நயத்தல்=விரும்புதல்; நாடுதல்=மனம் நாடுதல்; இந்த பாடலில் தில்லை அந்தணர்களுக்கும் பெருமானுக்கும் உள்ள நெருக்கத்தை கூற வந்த சம்பந்தர் அபிஷேகத்தையும் அந்தணர்களையும் பிரியாத சிற்றம்பலம் என கூறுகின்றார். சிவனை அபிஷேகப் பிரியர் என்று கூறுவர். அதே அளவுக்கு தில்லைவாழ் அந்தணர்களும் சிவபிரானுக்கு உகந்தவர் என்பதால் அபிஷேகத்தையும் அந்தணர்களையும் இணைத்து கூறுகிறார். இவ்வாறு கூறுவதன் மூலம் தில்லை வாழ் அந்தணர்களின் பெருமையை சம்பந்தர் உயர்த்துகிறார். சந்திரனின் கொடிய வினையையே தீர்த்த சிவபிரானுக்கு நமது வினைகளை போக்குவது எளிய செயல் அல்லவா. எனவே தான் சந்திரனுக்கு அருளிய தன்மை கூறப்பட்டுள்ளது. பால், நெய், தயிர் முதலியவற்றில் ஆடினாய் என்று சம்பந்தர், இறைவனை குறிப்பிடுகின்றார். பால், நெய், தயிர் என்ற இந்த மூன்றுடன் நிறுத்தி ஆனஞ்சு ஆடுபவன் என்று குறிப்பால் உணர்த்துவது, சைவ நூல்களில் பின்பற்றப்படும் மரபு. கோமயம், கோசலம் ஆகிய மற்ற இரண்டினை தனியாக திருமுறை பாடல்களில் குறிப்பிடுவது இல்லை. எனவே பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு நீராடும் பெருமான் என்று குறிப்பிடுவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும்.

மூவாயிரம் தில்லை வாழ் அந்தணர்களில் பெருமானும் ஒருவராக கருதப் படுவதால், அந்த அந்தணர்களை விட்டு பெருமான் பிரியாது இருப்பவராக கருதப் படுகின்றார். எனவே தான் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் என்று கூறுவதாக சிலர் விளக்கம் கூறுகின்றனர். தொடர்ந்து அந்தணர்கள் பிரியாது பணி செய்யும் சிற்றம்பலத்தில் உறையும் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பல்சடை=பல விதமான தன்மைகள் கொண்டுள்ள சடை. சுருண்டு கிடப்பதால் புன்சடை என்றும், நீண்டு இருப்பதால் நீள்சடை என்றும், பொன் போன்ற நிறத்தில் இருப்பதால் பொன்சடை என்றும், விரிந்து பரந்து இருப்பதால் விரிசடை என்றும், நிமிர்ந்து உயர்ந்து இருப்பதால் நிமிர்சடை என்றும் பெருமானின் சடை பலவிதமாக திருமுறைப் பாடல்களில் குறிக்கப் படுகின்றது. இதனை உணர்த்தும் வகையில் பல்சடை என்று சம்பந்தர் கூறுகின்றார். ஒன்பது சடைகளை உடைய பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் பல்சடை என்று கூறினார் என்றும் பொருள் கொள்ளலாம். பாடினாய் மறை என்பதற்கு சாம வேத கீதங்கள் பாடினார் என்று பொருள் கொள்ள வேண்டும். இசை வடிவத்தில் அமைந்துள்ள வேதம் சாமவேதம் ஒன்று தான் என்பதால் பாடினார் வேதம் என்று குறிப்பிடும் போது, சாமவேதத்தையும் ஓதினார் வேதம் என்று சொல்லும் போது நான்கு வேதங்களையும் குறிப்பிடுவதாக பொருள் கொள்ள வேண்டும். 

ஆடினாய் என்ற சொல்லுக்கு நடனம் புரிதல் மற்றும் நீராடுதல் என்று இரண்டு பொருள்கள் உள்ளன. இரண்டுமே பெருமானுடன் இணைந்த செயல்கள். ஆடவல்லானை குறிக்கும் இந்த பாடலை, ஆடினாய் என்ற சொல்லுடன் நயமாக தொடங்கி, பெருமான் பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு நீராடுவதை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். சம்பந்தரின் சொல்லாட்சியை நாம் இங்கே உணர்கின்றோம்.

பொழிப்புரை:

பறை மட்டும் சங்குகள் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, பல வகையான கொடிகள் கட்டப்பட்டு அழகு செய்யப்பட்ட மாட வீடுகளில், கறையினை உடைய வேல் போன்று செவ்வரிகளுடன் நீண்டு கூர்மையான நுனிகளுடன் உள்ள கண்களைக் கொண்டுள்ள மகளிர் ஆடுவதால் பாடுவதால் ஏற்படும் ஆரவார ஒலிகளுடன் மறையொலி மற்றும் பெருமானின் புகழ் குறித்த பாடல்களின் ஒலி கலந்து ஒலிக்க ஆடுதலை விரும்புகின்ற பெருமானை, பிறைச் சந்திரனை தனது நீண்ட சடையில் சூடியவனை, கடம்பூரில் உறைபவனை பேணவல்ல அடியார்கள் பெரியோர்களாக மதிக்கப் படுவார்கள்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com