113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 5

பிறைச் சந்திரன்
113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 5

பாடல் 5:

    தீ விரியக் கழல் ஆர்ப்பச் சேயெரி கொண்டு இடு காட்டில்
    நாவிரி கூந்தல் நற்பேய்கள் நகை செய்ய நட்டம் நவின்றோன்
    கா விரி கொன்றை கலந்த கண்ணுதலான் கடம்பூரில்
    பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே 

விளக்கம்:

தீ விரிய=செம்பட்டை நிறத்தில் உள்ள சடையினை தீச்சுடர்களுக்கு ஒப்பிடுவர். சேயெரி= சிவப்பு நிறத்தில் கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பு; நாவிரி கூந்தல்=வாய்க்கு வெளியே நீட்டிய நாக்கையும் பரந்த சடையையும்; நவிலுதல்=தொடர்ந்து நடனம் ஆடுதல்; கா=சோலை;    

பொழிப்புரை:

தீக்கதிர்கள் போன்று சிவந்த நிறத்தில் உள்ள சடை விரியவும், காலில் அணிந்துள்ள கழல் ஒலிக்கவும், சிவந்த நிறத்தில் உள்ள தீயினைக் கையில் கொண்டும், இடுகாட்டில் உள்ள பேய்கள் தங்களது நாக்கினை தொங்கவிட்டுக் கொண்டும் கூந்தலை விரித்தும் நகை செய்தவாறு சூழ்ந்து நிற்க தொடர்ந்து நடனமாடும் பெருமான் சோலைகளில் விரிந்து மலர்ந்துள்ள கொன்றை மலர்களைத் தனது சடையினில் பிறைச் சந்திரன் மற்றும் கங்கை நதியுடன் கலந்து வைத்துள்ள பெருமான், தனது நெற்றியில் கண் உடையவன் ஆவான். இத்தகைய தன்மை வாய்ந்த பெருமானை, கடம்பூர் தலத்தில் உறைபவனை, ஓசையின்பம் உடைய பாடல்களை பயிற்சி செய்து பாடும் வல்லமை உடைய அடியார்கள், பழியும் பாவங்களும் தம்மைச் சாராத வண்ணம் வாழ்வார்கள்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com