தினம் ஒரு தேவாரம்

114. உரையினில் வந்த பாவம் - பாடல் 1

என். வெங்கடேஸ்வரன்

பின்னணி:

ஓமாம்புலியூர் வழியாக கடம்பூர் சென்ற திருஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு திருநாரையூர் தலம் செல்கின்றார். காம்பினை வென்ற மென் தோளி என்று தொடங்கும் பதிகத்தின் (3.102) பாடல்களில் நலம் தாங்கு நாரையூர் என்றும் நலமோங்கு நாரையூர் என்றும் இந்த தலத்தை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். அருளாளர்களின் வாக்கு மெய்வாக்கு என்பதை உணர்த்தும் பொருட்டு, இந்த தலத்து பதிகங்கள் சம்பந்தர் பாடிய பின்னர் சுமார் முன்னூறு ஆண்டுகள் கழித்து, நாரையூர் தலத்தில் அவதரித்த நம்பியாண்டார் நம்பி அவர்களின் மூலம் தேவாரப் பாடல்களை வெளிக் கொணர்வதற்கு இறைவன் திருவுள்ளம் கொண்டதை நாம் அறிவோம். நலம் திகழ் நாரையூர் என்ற தொடரை உள்ளடக்கிய பெரிய புராண பாடலில், சம்பந்தர் திருநாரையூர் சென்றதை சேக்கிழார் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காண்போம். 

    நம்பரை நலந்திகழ் நாரையூரினில்
    கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய
    வம்பலர் செந்தமிழ் மாலை பாடி நின்று
    எம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார் 

இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய மூன்று பதிகங்களும் (2.86, 3.102, 3.107) அப்பர் பிரான் அருளிய இரண்டு பதிகங்களும் (5.55, 6.74) கிடைத்துள்ளன. உரையினில் வந்த பாவம் என்று தொடங்கும் இந்த பதிகத்தின் பாடல்களில் நாரையூர் நம்பனைத் தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. பதிகத்தின் முதல் பத்து பாடல்களும் நாரையூர் கை தொழவே என்று முடிகின்றன. இந்த தலம் சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி செல்லும் பாதையில் பன்னிரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் பெயர் சௌந்தரேஸ்வரர், நாரையூர் நம்பி; இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி; தலத்து விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவர் தான் இன்றைய சைவ உலகம் தேவாரப் பதிகங்களை அறிந்து கொள்வதற்கு பிள்ளையார் சுழி இட்டவர். தேவாரப் பதிகங்கள் தில்லைச் சிற்றம்பலத்து பிராகாரத்தில் இருக்கும் இடத்தை,  நம்பியாண்டார் நம்பிக்கு சுட்டிக் காட்டியவர் இவரே. இவரை பொள்ளாப் பிள்ளையார் என்று அழைக்கின்றனர். பொள்ளாத என்றால் உளியால் செதுக்கப் படாத என்று பொருள். பிள்ளையார் சன்னதியின் உள்ளே திருமுறை கண்ட வரலாறு வண்ணப்பட சித்திரங்களாக உள்ளன. இந்த தலத்து விநாயகர், ஆறு படை வீடுகளில் ஒன்றாக கருதப் படுவதில் வியப்பு ஏதுமில்லை. முருகனுக்கு இருப்பது போன்று விநாயகருக்கும் ஆறு படை வீடுகள் உள்ளன. நாரையூர், அண்ணாமலை, முதுகுன்றம், கடவூர், மதுரை மற்றும் காசி. அண்ணாமலையில் செந்தூரப் பிள்ளையார், முதுகுன்றத்து ஆழத்துப் பிள்ளையார், கடவூரின் கள்ள வாரணப் பிள்ளையார், மதுரை தலத்தின் முக்குறுணிப் பிள்ளையார், காசியின் துண்டீர விநாயகர் மற்றும் நாரையூரின் பொள்ளாப் பிள்ளையார் ஆகியோர்களை இணைத்துக் கூறும் ஒரு பழைய தமிழ் பாடல் உண்டு.

கூறு திருவருணை கூப்பா முதுகுன்றம் 
வீறு கடவூர் விண் முட்டும் தேரு தமிழ்
மாமதுரை காசி மருவு திருநாரையூர்
வேழமுகத்து ஆறு படைவீடு. 
        

பாடல் 1:

    உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம்ம செயல்
         தீங்கு குற்றம் உலகில்
    வரையில் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக
         ஏத்தி நித்தம் நினைமின்
    வரை சிலையாக அன்று மதில் மூன்று எரித்து வளர்
         கங்குல் நங்கை வெருவத்
    திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத் திருநாரையூர்
         கை தொழவே

விளக்கம்:

இறைவன் உயிர்களை அவற்றின் வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப தகுந்த உடல்களுடன் இணைக்கின்றான். அவ்வாறு இணைக்கப்படும் உடல்களில் மனித உடல் உட்பட பல்வேறு ஜீவராசிகளின் உடல்கள் அடக்கம். இவ்வாறு இருக்கையில், மனித உடலைப் பெற்று வாழும் நாம் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் மனித உடலுக்கு தான் இறைவன் முப்பத்தாறு தத்துவங்கள் எனப்படும் கருவிகள் அளித்து உயிர்கள் உய்யும் வழியினைத் தேடிக்கொள்ள வழி வகுத்துள்ளான். ஆனால் இந்த கருவிகளின் உதவியுடன் மெய்ப்பொருளை உணர்ந்து மேலும் வினைகளை சேர்த்துக் கொள்ளாமல் வாழ்ந்து நமது பழைய வினைகளைக் கழித்து வீடு பேற்றை அடைவதை நமது குறிக்கோளாக கொண்டு நாம் செயல்படுவதில்லை. வாக்கினால் வேண்டாத தீமைகளைப் பேசி, மனத்தினால் தீய எண்ணங்களை நினைத்து, உடல் உறுப்புகளால் பல பாவங்களைச் செய்து வினையை பெருக்கிக்கொண்டு, பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை பெற முடியாமல் தவிக்கின்றோம். இவ்வாறு அல்லற்படும் மனிதனுக்கு சம்பந்தர் இந்தப் பதிகத்தின் முதல் பாடலில் அறிவுரை கூறுகின்றார். நாரையூர் பெருமானை ,மனதினால் நினைத்து, வாக்கினால் துதித்து, கைகளால் தொழுது நாம் உய்யும் வகையைக் காட்டும் பாடல் இது. எந்த முக்கரணங்கள் (வாய், மனம், உடல்) தீயனவற்றைச் செய்து வினையை பெருக்கிக் கொள்கின்றதோ, அந்தக் கரணங்கள் தங்களது செயல்களுக்கு பரிகாரம் தேடும் முகமாக என்ன செய்ய வேண்டும் என்று அழகாக கூறும் பாடல் இது. 

உரையினில் வந்த பாவம்=பொய்யான சொற்களை பேசுதல், பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் சொற்களை பேசுதல், கடுமையான சொற்களை பேசுதல், பயனற்ற சொற்களை பேசுதல் என்பன நமது மொழியால் வரும் பாவங்களாக கருதப் படுகின்றன. உணர்=உணர்தற்கு உரிய கருவியாகிய மனம்; உணர் நோய்=மனதினில் தோன்றும் தீய எண்ணங்கள்; மனதினில் தோன்றும் எண்ணங்களே நமது செயல்களாக வடிவம் பெறுகின்றன. சில தீய எண்ணங்களை செயலாக மாற்றும் திறன் இல்லாமையால் நாம் அந்த செயல்களை செய்யாத போதிலும் அத்தகைய தீய எண்ணங்கள் பாவமாக கருதப் படுகின்றன. செயல் தீங்கு குற்றம் என்பதை தீங்கு செயல் குற்றம் என்று மாற்றி வைத்து, பொருள் கொள்ள வேண்டும். உம்ம என்ற சொல்லினை இந்த மூன்று வகையான குற்றங்களுக்கும் பொதுவானதாக கருதி பொருள் கொள்ளவேண்டும்.  

இந்த பாடலில் பெருமான் நஞ்சு உண்டதைக் கண்டு அம்பிகை அச்சமுற்றதாக சம்பந்தர் கூறுகின்றார். அச்சம் கொண்டதன் காரணம் நஞ்சு உட்கொண்டதால் பெருமானுக்கு கேடு ஏதேனும் ஏற்படுமோ என்ற எண்ணத்தால் அல்ல; பெருமான் உட்கொள்ளும் நஞ்சு பின்னாளில் அவரது வயிற்றினில் ஒடுங்க இருக்கும் உயிர்களுக்கு கேடு ஏதும் விளைவிக்க கூடாது என்ற எண்ணத்தினால் தான். பதினோராம் திருமுறையில் கபில தேவர் அருளிய சிவபெருமான் இரட்டை மணிமாலை என்ற பதிகத்தின் பாடலில், பெருமானுக்கு கேடு ஏதும் விளைவிக்க இயலாத நஞ்சம் என்பதால் பார்வதி தேவி விடம் உட்கொள்வதை தடுக்க வில்லை என்று கூறுகின்றார். கபில தேவ நாயனார் தான் அருளிய சிவபெருமான் இரட்டை மணிமாலை (பதினோராம் திருமுறை) பதிகத்தில் இறைவனை வெண்காட்டு கரும்பு என்று குறிக்கின்றார். சிவபிரானின் வயிற்றினுள் அண்ட சராசரங்கள் அடங்கியுள்ள காரணத்தால், அவற்றை காப்பாற்றும் பொருட்டு, உமையம்மை தனது மென்மையான கரங்களால், சிவபிரானின் கழுத்தினை, அவர் நஞ்சுண்ட போது பிடித்து நஞ்சு கழுத்திலே தங்குமாறு செய்தார்கள் என்று கூறி உமையம்மையின் கருணை இந்தப் பாடலில் விளக்கப்படுகின்றது.

    மிடறு தாழ் கடல் நஞ்சம் வைக்கின்ற ஞான்று மெல்லோதி நல்லாள்
    மடல் தாமரைக் கைகள் காத்திலவே மழுவாள் அதனால்
    அடல் தாதையை அன்று தாள் எறிந்தார்க்கு அருள் செய்த கொள்கைக்
    கடல் தாழ் வயல் செந்நெல் ஏறும் வெண்காட்டு எம் கரும்பினையே 

  
பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சினை சிவபிரான் உட்கொண்ட பின்னர், நஞ்சின் வெம்மையினை குறைப்பதற்காக, அம்பிகை எண்ணெய் அபிஷேகம் செய்ததாக நனிபள்ளி தல வரலாறு கூறுகின்றது. கோயிலின் குளத்திற்கு வடக்கே கருங்கல் செக்கு உள்ளது. இந்த செக்கில் தான் பார்வதி தேவி எண்ணெய் ஆட்டி, அதனைக் கொண்டு இறைவனை நீராட்டியதாக நம்பப்படுகின்றது. சில வருடங்கள் முன்பு கூட இந்த செக்கு பயன்படுத்தப் பட்டு அந்த எண்ணெயைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தனர், ஆனால் தற்போது அவ்வாறு செய்வதில்லை. அந்த செக்கினை பயன்படுத்தாது வேறு எண்ணெய் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் தற்போது நடைபெறுகின்றது. இறைவனின் திருமேனியின் மீது விடப்படும் எண்ணெய் மொத்தமும், இலிங்கத் திருமேனியால் உறிஞ்சப்பட்டு, ஒரு சொட்டு எண்ணெய் கூட கீழே சிந்தாத அதிசயத்தை நாம் இன்றும் காணலாம். எண்ணெய் நீராட்டத்திற்கு பின்னர் சுவாமியின் திருமேனிக்கு இளஞ்சூடு கொண்ட வெந்நீர் தான், இறைவனை நீராட்டப் பயன்படுத்தப் படுகின்றது. மேலும் இறைவனுக்கு நைவேத்தியமாக, மிளகு சீரகம். மற்றும் பசுநெய் கலந்த அன்னம் படைக்கப்படுகின்றது. அம்மையே தைல அபிஷேகம் செய்வதாக கருதப் படுவதால், எண்ணெய்க் கிண்ணம் முதலில் அம்மன் சன்னதியில் வைக்கப்பட்டு, பின்னரே இறைவனை நீராட்ட பயன்படுத்தப் படுகின்றது. மேலும் மொத்த எண்ணெயில் பாதி பங்கு இறைவியின் நீராட்டத்திற்கும் பயன்படுத்தப் படுகின்றது. 

அபிராமி அந்தாதி ஐந்தாவது பாட்டினில் அபிராமி பட்டர் வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை என்று கூறுகின்றார். இந்த பாடலுக்கு விளக்கம் கூறிய கி.வா.ஜ. அவர்களின் உரையின் ஒரு பகுதியை நாம் இங்கே காண்போம். ஆலால சுந்தரர் கொண்டு வந்த நஞ்சினை வாங்கிக் கொண்ட இறைவன், தனது வாயின் அருகே நஞ்சை எடுத்துச் சென்ற போதும் உமையம்மை ஏதும் செய்யவில்லை; இறைவன் பருகிய பின்னர், அந்த நஞ்சு உள்ளே செல்லலாகாது என்ற எண்ணத்துடன், இறைவன் நஞ்சை விழுங்கத் தொடங்கியவுடன், பார்வதி அன்னை இறைவனது கழுத்தினை தனது கைகளால் அணைத்துக் கொள்ள, அந்த கொடிய நஞ்சு கழுத்திலே தங்கிவிட்டது. அம்பிகை தனது திருக்கரத்தினால் தடுத்து நிறுத்திய போது, அவளது கை பரிசத்தினால் (ஸ்பரிசம்) நஞ்சு எந்தவிதமான தீங்கினையும் செய்யாமல், அமுதமாக அங்கே தங்கிவிட்டது என்று கி.வா.ஜ. விளக்கம் அளிக்கின்றார். அம்புயம்=தாமரை: அந்தரி=பராகாச வடிவினளாகிய அம்பிகை: பொருந்திய முப்புரை=திரிபுர சுந்தரி: மருங்குல்=இடை: திருந்திய=அமர்ந்த: 

    பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள்
    வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
    அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்
    திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே 

சுந்தரர் திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலிலும் (7.99.1), பெருமான் விடம் உட்கொண்டபோது தேவி அச்சம் கொண்டதாக கூறுகின்றார். பேழ்க்கணிக்க=அச்சம் கொள்ள; வாள்=ஒளி வீசும்; நுதல்=நெற்றி' பிறையணி=பிறைச் சந்திரன் அணிந்தது போன்று; நிறையணி=உறுதி படைத்த அனுங்க=கலங்க;  

    பிறையணி வாள் நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க
    நிறையணி நெஞ்சு அனுங்க நீல மால் விடம் உண்டது என்னே
    குறையணி கொல்லை முல்லை அளைந்து குளிர் மாதவி மேல்
    சிறையணி வண்டுகள் சேர் திருநாகேச்சரத்தானே

திருவாய்மூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (2.111.5), ஞானசம்பந்தர் பெருமான் விடம் உட்கொண்ட போது தேவி அஞ்சியதாக குறிப்பிடுகின்றார். அஞ்சனம்=மை, மை போன்று கருமை நிறத்து மணி; திமிலம்=பேரொலி;

    அஞ்சன மணி வணம் எழில் நிறமா அகமிடறு அணி கொள உடல் திமில  
    நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறுநுதல் உமை நடுங்க
    வெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுறப் போர்த்த நிறமும் அஃதே
    வஞ்சனை வடிவினொடு இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

 
கங்குல்=இருள்; வளர் கங்குல்=அடர்ந்த இருளின் நிறத்தில், அடர்ந்த கருமை நிறத்தில்; வெருவ=அச்சம் கொள்ள; திரை ஒலி=பேரொலி செய்யும் அலைகளிலிருந்து எழுந்த; செல்வச் செழிப்பு மிகுந்த நகரமாக நாரையூர் காணப்பட்டது என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். சிவன் மேய என்ற தொடரினை அடுத்து செல்வ என்ற சொல் வருவதால், சிவபெருமான் அமர்ந்துள்ள நிலையினை சிறந்த செல்வம் என்று கூறுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. வரை=மலை; சிலை=வில்;       

பொழிப்புரை:

உமது வாக்கினால் வந்த குற்றங்கள்,  உமது மனதினில் எழுந்த தீய எண்ணங்கள், உமது தீய செயல்களால் விளையும் வினைகள் என்று பலவகையாக குற்றங்கள் செய்து அளவிடமுடியாத வண்ணம் சேர்த்துக் கொண்டுள்ள பாவங்கள் தீர வேண்டும் என்றால் நீங்கள் பெருமானை தினமும் நினைத்து புகழ்ந்து வணங்க வேண்டும். மேரு மலையினை வில்லாக வளைத்து பண்டைய நாளில் வானில் திரிந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் எரித்தவனும், அடர்ந்த இருள் போன்று கருமை நிறத்துடன், ஆரவாரம் மிகுந்த அலைகளிலிருந்து எழுந்த நஞ்சினை உமையம்மை அச்சம் கொள்ளும் வண்ணம் உட்கொண்டவனும் ஆகிய பெருமான் பொருந்தி அமர்கின்ற செல்வச் செழிப்பு மிகுந்த திருநாரையூர் நகரத்தினை கை தொழுது வணங்கினால், உங்களது பாவங்கள் அனைத்தும் தீரும்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT