108. மறம் பய மலைந்தவர்- பாடல் 3

எண்ணிலடங்கா பிறப்புகளை
108. மறம் பய மலைந்தவர்- பாடல் 3

  
பாடல் 3: 

    விரிந்தனை குவிந்தனை விழுங்கு உயிர் உமிழ்ந்தனை 
    திரிந்தனை குருந்தொசி பெருந்தகையும் நீயும்
    பிரிந்தனை புணர்ந்தனை பிணம் புகு மயானம்
    புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்

விளக்கம்:

மகா சங்கார காலத்தில் உலகப் பொருட்களும் உலகத்தில் உள்ள உயிர்களும் முற்றிலும் அழிவதில்லை; அவை இறைவனிடத்தில் ஒடுங்குகின்றன. அவ்வாறு ஒடுங்கும் பொருட்களும் உயிர்களும், இறைவன் உலகத்தை மீண்டும் படைப்பதற்கு திருவுள்ளம் கொள்ளும் போது இறைவனால் விரிக்கப்படுகின்றன. உமிழ்தல்=வெளிப்படுத்துதல்; இதையே விரித்தல் குவித்தல் மற்றும் உமிழ்தல் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.  பெருமான் அத்தகைய செயல்கள் செய்வதை, விரிந்தனை குவிந்தனை உமிழ்ந்தனை என்று இங்கே குறிப்பிடுகின்றார். 

இவ்வாறு இறைவன் பிரளய காலத்தில் உயிர்களை ஒடுக்கியும் பின்னர் விரித்தும் உலகத்தை படைத்தும் அருள் புரிவதை அப்பர் பிரான் ஆலம்பொழில் தலத்து திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.86.6) கூறுகின்றார். இந்த பாடலில் வியன் பிறப்போடு இறப்பானானை என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு உயிரும் எண்ணிலடங்கா பிறப்புகளை எடுக்கின்றன. எனவே தான் வியன் பிறப்பு என்று, விரிந்த பிறப்புகளின் தன்மையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மேலும் அந்த பிறப்புகள் பின்னர் இறப்பிற்கு காரணமாகவும் இருக்கின்றன. இவ்வாறு உடல்கள் பிறப்பதற்கும் இறப்பதற்கும் மூல காரணனாக இருப்பவன் பெருமான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. வேத வித்து=வேதங்கள் வெளிவருதற்கு காரணமாக இருந்தவன்; அரிந்தான்= இரு கூறாக பிளந்தான்.

    விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு
         இறப்பாகி நின்றான் தன்னை
    அரிந்தானைச் சலந்தரன் தன் உடலம் வேறா ஆழ்கடல்
         நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்யப்
    பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான்
         சிலை மலை நாண் ஏற்றி  அம்பு
    தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய
          திருவாலம்பொழிலானை சிந்தி நெஞ்சே.

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (6.60.7) பெருமானின் இந்த செயல்களை, உலகின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமாக இறைவன் திகழ்வதை, அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். 

    பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் தன்னைப் பாரானை
        விண்ணாய் இவ்வுலகம் எல்லாம்
    உண்டானை உமிழ்ந்தானை உடையான் தன்னை ஒருவரும் தன்
        பெருமை தனை  அறிய ஒண்ணா
    விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும் வெவ்வழலில்
        வெந்து பொடியாகி  வீழக்
    கண்டானைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக்
        கண்ணாரக் கண்டேன்  நானே

மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் உயிர்கள் மிகவும் களைத்து விடுகின்றன. இவ்வாறு களைப்படைந்த உயிர்களுக்கு இளைப்பாற்றல் தேவைப்படுகின்றது. இதனையே மணிவாசகர் சிவபுராணத்தில், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் என்று கூறுகின்றார். இளைப்பாறும் வாய்ப்பினைத் தான் இறைவன் மகா சங்கார காலத்தில் உயிர்களுக்கு அளிக்கின்றான். உயிர்களை ஒடுக்கி தனது வயிற்றினில் அடக்கிக் கொள்ளும் இறைவன், உலகத்தினை மீண்டும் படைக்க திருவுள்ளம் கொள்ளும் போது, தனது வயிற்றினில் ஒடுங்கிய உயிர்களை மீண்டு வெளிக்கொணர்வதை, விழுங்கு உயிர் உமிழ்தல் என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தனது வயிற்றில் ஒடுங்கிய உயிர்கள் அனைத்தும் ஆணவ மலத்துடன் பிணைந்து இருப்பதால், அந்த உயிர்களுக்கு தங்களுடன் பிணைந்துள்ள மலத்தின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, உலகினை தோற்றுவிப்பதற்கு பெருமான் விரும்புகின்றார். இவ்வாறு மீண்டும் மீண்டும் அழிந்த உலகினை தோற்றுவிப்பதால் பெருமானுக்கு ஏதும் இலாபம் இல்லை. உயிர்கள் தாம், தங்களது வினைகளை கழித்துக் கொண்டு முக்தி நிலை பெறுவதற்கு  மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெறுவதால், பயன் அடைகின்றன.      

விரிந்தனை குவிந்தனை என்ற தொடருக்கு எங்கும் இறைவன் பரந்து இருக்கும் நிலையினையும் மிகவும் நுண்ணியமாக இருக்கும் நிலையினையும் குறிப்பிடுவதாக சிலர் பொருள் கூறுகின்றனர். இந்த தொடரை அடுத்து விழுங்குயிர் உமிழ்ந்தனை என்று கூறவதால் முதலில் கூறியுள்ள பொருளே, தோற்றுவிப்பது மற்றும் ஒடுக்கும் செயல்களை குறிப்பிடுகின்றது என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. 

குருந்தொசிப் பெருந்தொகை என்று குருந்த மரத்தினை வளைத்து ஒடித்த கண்ணனை (திருமாலை) சம்பந்தர், குறிப்பிடுகின்றார். திருமாலின் அவதாரமாகிய மோகினியுடன் பிச்சைப் பெருமானாக இறைவன் தாருகாவனம் சென்றதையும் இங்கே குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. திருமால் அன்னையின் ஒரு அம்சம் என்பதை நாம் மறக்கலாகாது. சக்தி ஒன்றே ஆயினும் பயன் பொருட்டு நான்கு வடிவங்கள் எடுப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன. மனைவியாகும் போது பவானியாகவும் (பார்வதி தேவி) கோபம் கொள்ளும் போது காளியாகவும், போர் செய்யும் போது துர்கையாகவும், ஆணுருவம் கொள்ளும் போது திருமாலாகவும் வடிவம் எடுப்பதாக ஆகமங்கள் உணர்த்துகின்றன என்று மூவர் தமிழ் மாலை புத்தகத்தில், இந்த பாடலுக்கு விளக்கம் அளிக்கும் ஆங்க்ரீச வெங்கடேச சர்மா அவர்கள் கூறுகின்றார். அரியலால் தேவி இல்லை என்ற திருவையாறு பதிகத்தில் அப்பர் பிரான் கூறுவதையும் இந்த கருத்துக்கு ஒரு சான்றாக கூறுகின்றார். பாற்கடலில் தோன்றிய அமுதத்தினை தேவர்கள் மட்டும் உண்ணும் பொருட்டு மோகினியாக உருவம் எடுத்த திருமாலோடு பெருமான் புணர்ந்ததால் ஐயனார் அவதரித்தார் என்று ஸ்காந்த புராணம் உணர்த்துகின்றது. மேலும் தாருகாவனம் சென்ற பெருமான், மோகினியையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. 

சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.21.2) திருமாலுடன் ஒன்றி நின்று காத்தல் தொழிலைப் புரிபவர் பெருமான் என்று கூறுவதும் நமது நினைவுக்கு வருகின்றது. சம்பந்தர், திருமாலாக சிவபிரான் உறையும் பதி என்று சிவபுரத்தை குறிப்பிடுகின்றார். பாற்கடலில் துயில்வது போல் திருமால் காட்சி அளித்தாலும், உலகில் நடக்கும் அனைத்துச் செயல்களும் அறிந்து கொள்ளும் வல்லமை படைத்தவர் என்பதால், அவரது தூக்கத்தை அறிதுயில் என்று ஆழ்வார்கள் குறிப்பிடுவது போன்று, சம்பந்தரும் அறிதுயில் என்று குறிப்பிடுவதை நாம் இங்கே காணலாம். மலைகள் மிகுந்த இந்த மண்ணுலகில் வாழும் மனிதர்களும், விண்ணில் வாழும் தேவர்களும், மற்ற உலக உயிர்கள் அனைத்தும் நிலைபெற்று வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் பாற்கடலில் துயிலும் திருமால் என்று இங்கே திருமால் செய்யும் படைத்தல் தொழிலினை சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். திருமாலுடன் பிரிந்தனை என்பதற்கு பிரளய காலத்தினில், அந்நாள் வரை திருமாலுடன் கூடி நின்று அவரை இயக்கிய பெருமான், அவரிடமிருந்து வேறாக பிரிந்து சங்காரத் தொழிலில் ஈடுபட்டு, திருமால் பிரமன் உட்பட அனைத்து உயிர்களும் தன்னிடம் ஓடுங்கும் வண்ணம் செயல் புரிவதை குறிப்பிடுகின்றது என பொருள் கொள்வதும் பொருத்தமே.


    மலை பல வளர் தரு புவியிடை மறை தரு வழி மலி மனிதர்கள்
    நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலை பெறுவகை நினைவொடு மிகும்
    அலைகடல்  நடு அறிதுயில் அமர் அறி உரு இயல் பரன் உறை பதி  
    சிலை மலி மதிள் சிவபுர நினைபவர் திருமகளொடு  திகழ்வரே  

பொழிப்புரை:

உலகெங்கும் பரந்து நிற்பவனும், பிரளய காலத்தில் அனைத்து உயிர்களையும் தனது வயிற்றில் ஒடுக்குபவனும், அவ்வாறு ஒடுக்கும் உயிர்களை தக்க சமயத்தில் வெளிப்படுத்தி மீண்டும் அந்த உயிர்கள் தங்களது மலங்களை கழித்துக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கும் வண்ணம் அவற்றின் வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப தகுந்த உடலுடன் இணைப்பவனும், தாருகவனத்தில் பிச்சை ஏற்கவும் தனது அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு வேறுவேறு வேடங்களில் வேறுவேறு இடங்களில் திரிந்தவனும், குருந்த மரத்தினை ஒடித்த கண்ணனாகிய தோன்றிய திருமாலோடு இணைந்தவனும், பின்னர் அந்த திருமாலிடமிருந்து பிரிந்தவனும், பிணங்கள் புகுகின்ற மயானத்தில் விருப்பமுடன் மகிழ்ச்சியுற நடனம் புரிபவனும் ஆகிய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்ந்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com