108. மறம் பய மலைந்தவர்- பாடல் 8

வரங்கள் அளித்தான்
108. மறம் பய மலைந்தவர்- பாடல் 8


பாடல் 8: 

    இலங்கையர் இறைஞ்சு இறை விலங்கலின் முழங்க
    உலம் கெழு தடக்கைகள் அடர்த்திடலும் அஞ்சி
    வலம் கொள எழுந்தவன் நலம் கவின அஞ்சு
    புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்

விளக்கம்:

இலங்கையர்=இலங்கை வாழ் மக்கள்; விலங்கல்=மலை; இறைஞ்சும் என்ற சொல் வணங்கும் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. விலங்கினை=நீங்கினை, விலகினை; உலம்=பெரிய கல், திரண்ட கல்; கெழு=ஒத்த; கவின=அழகு செய்ய; அழகு செய்ய பெருமான் வரங்கள் அளித்தான் என்று இங்கே கூறப்படுகின்றது. சந்திரஹாசம் என்ற பெயர் கொண்ட வாள் பெருமானால் அரக்கனுக்கு அளிக்கப்படுகின்றது. தெய்வத் தன்மை பொருந்திய இந்த வாளினை அணிந்து கொண்ட அரக்கன் மேலும் அழகுடன் திகழ்ந்தான் என்பதை உணர்த்தும் வண்ணம், பெருமான் அளித்த வரங்கள் அரக்கனுக்கு வெற்றி மற்றும் அழகினைச் சேர்த்தன என்று சம்பந்தர் கூறுகின்றார். அஞ்சு புலன்கள்=புலன்கள் தங்களை ஆட்கொண்டு, தங்களது உயிர் விரும்பும் வழியில் செல்லவிடாமல் தடுக்கும் என்பதால் சான்றோர்கள் புலன்களின் செய்கைகளுக்கு அஞ்சுவார்கள். புலன்களை கட்டுப்படுத்தும் தன்மை தங்களுக்கு ஏற்படவேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள். ஆனால் இயற்கையாகவே புலன்களின் கட்டுப்பாட்டிலிருந்து நீங்கிய இறைவன், புலன்களை வென்றவனாக திகழ்கிறான். இந்த செய்தியே அஞ்சு புலன்களை விலங்கினை என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது.   

பொழிப்புரை:

இலங்கை வாழ் மக்கள் வணங்கும் தலைவனாகிய அரக்கன் இராவணன், கயிலாய மலையின் கீழே அகப்பட்டு வருத்தம் தாளாமல் உரத்த குரலில் அலறி தனது பெரிய கற்கள் போன்று வலிமையான அகன்ற கைகள் நசுங்கி விடுமோ என்ற அச்சத்துடன் பெருமானைப் போற்ற, அரக்கனுக்கு வெற்றியும் அழகும் உண்டாகும் வண்ணம் பல வரங்களை அளித்தவன் சிவபெருமான். அத்தகைய பெருமான், மற்றவர்கள் அஞ்சும் வண்ணம் அவர்களுக்கு துன்பம் செய்யும் ஐந்து புலன்களை வென்று, அதன் தாக்கத்திலிருந்து நீங்கியவனாக காணப்படுகின்றான். அத்தகைய இறைவன் புறம்பயம் தலத்தில் அமர்ந்துள்ளான்.     
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com