108. மறம் பய மலைந்தவர்- பாடல் 10

புனித நூல்
108. மறம் பய மலைந்தவர்- பாடல் 10

பாடல் 10:

    விடக்கு ஒருவர் நன்றென விடக்கு ஒருவர் தீதென
    உடல் குடை களைந்தவர் உடம்பினை மறைக்கும்
    படக்கர்கள் பிடக்கு உரை படுத்து உமையொர் பாகம்
    அடக்கினை புறம்பயம் அமர்ந்த உறவோனே

விளக்கம்:

விடக்கு=ஊன், மாமிச உணவு; படக்கர்கள்=உடை அணிந்தவர்கள்; சம்பந்தர் காலத்தில் புத்தர்கள் புலால் உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருந்தமை இந்த பாடல் மூலம் நமக்கு தெரிய வருகின்றது. புத்தர்களின் புனித நூல் திரிபிடகம் என்று அழைக்கப் படுகின்றது. பிடக நூலினை பின்பற்றும் புத்தர்கள் பிடகர் என்று அழைக்கப் பட்டனர். உடலை களைந்தவர்=உடை ஏதும் உடுத்தாமல் இருந்த சமணர்கள்; படுத்து=தாழ்வு அடையச் செய்து; உறவோன்=வலிமை உடையவன்; சமணர்களின் முக்கிய கொள்கைகளின் ஒன்றாக பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாது இருத்தல் கருதப்பட்டது. எனவே அவர்கள் உயிர்க் கொலையையும், மாமிசம் உட்கொள்வதையும் தவிர்த்தனர். சமண மற்றும் புத்த நூல்கள் முக்தி நெறிக்கு வழிகாட்டாமல், மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்கு வழி வகுப்பதால், பெருமான் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பெரியோர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.   

பொழிப்புரை:

ஊனை உணவாக உட்கொள்ளுதல் நன்று என்று கூறும் புத்தர்களும், ஊனை உட்கொள்ளல் தீயது என்று கூறும் சமணர்களும், உடையினைத் தவிர்த்து திரிந்த சமணர்களும், உடலை மறைக்கும் வண்ணம் துவராடை அணிந்த புத்தர்களும் கூறும் திருபிடகம் முதலான நூல்களின் உரைகளை ஏற்றுக் கொள்ளாது, அந்த உரைகளை தாழ்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றவன் பெருமான். அவன் உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் அடக்கியவனாக புறம்பயம் தளத்தில் அமர்ந்து உள்ளான்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com