109. நூலடைந்த கொள்கையாலே - பாடல் 2

அழகிய அணிகலன்களை
109. நூலடைந்த கொள்கையாலே - பாடல் 2


பாடல் 2:

    நீறு அடைந்த மேனியின் கண் நேரிழையாள் ஒரு பால்
    கூறு அடைந்த கொள்கை அன்றிக் கோல வளர் சடை மேல் 
    ஆறு அடைந்த திங்கள் சூடி அரவம் அணிந்து என்னே
    சேறு அடைந்த தண்கழனி சேய்ஞலூர் மேயவனே

விளக்கம்:

சேறு அடைந்த என்று தலத்தின் நீர்வளம் குறிப்பிடப்படுகின்றது. நேரிழை=அழகிய அணிகலன்களை அணிந்தவள். இங்கே பார்வதி தேவி; கோலம்=அழகு. கங்கை நங்கை பிறைச் சந்திரன் மற்றும் பாம்பு ஆகிய மூன்றையும் ஒருங்கே சடையில் வைத்துள்ள தன்மை வியப்புக்கு உரியது என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் திருவாரூர் பாடல் (4.53.2) ஒன்றினை நினைவூட்டுகின்றது. நங்கை=பார்வதி தேவி: மஞ்ஞை=மயில்: வேழம்=யானை: ஆகம்=உடல்: நிமிர்தல் செய்யா=நிமிர்ந்து நில்லாமல் வளைந்து காணப்படும் பிறை கொண்ட சந்திரன்: உரிவை= தோலாடை:

    நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று
    வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து
    பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி
    ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே

சடையில் சந்திரனைக் கண்ட நாகம், சந்திரனை விழுங்கக் கருதி மிகவும் வேகமாக வருகின்றது அந்த சமயத்தில், மயில் போன்ற சாயலை உடைய கங்கையை  கண்டு, தன்னைக் கொத்தித் தின்ன மயில் வந்து விட்டதோ என்ற அச்சத்தில், தனது வேகத்தைத் தவிர்க்கின்றது. இதனிடையே, பாம்பினைக் கண்டு பயந்த, சந்திரன் பெருமான் அணிந்திருக்கும் யானைத் தோலின் அடியில் புகுந்து கொள்வதும், பாம்பு சென்று விட்டதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அடிக்கடி வெளியே எட்டிப் பார்கின்றது. அவ்வாறு எட்டிப் பார்க்கும் பொழுது, சந்திரன் முழுமையாகத் தெரியாமல், மேகத்தின் இடையே தோன்றும் மின்னல் கீற்று போன்று காணப்படுவதால், மின்னல் என்று நினைத்து, பாம்பு அடங்கி விடுகின்றது. வானத்தில் மின்னல் தோன்றினால், மயில்கள் மிகவும் மகிழ்ந்து நடமாடும். எனவே மின்னலும் இடியும், மயில்கள் வெளியே வந்து நடமாடும் செய்கைக்கு அறிகுறி என்று கருதி பாம்பு ஒதுங்கியது என்று உணர்த்துகின்றார். இயல்பாக பாம்பினைக் காணும் எவரும் அச்சம் கொள்வார்கள் அல்லவா. அது போன்று உமையும் அச்சம் கொண்டதாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்டு இருத்தல் தான், இவர்கள் மூவரும் அடங்கிக் கிடக்கும் நிலையை ஏற்படுத்தியது என்று நகைச்சுவையாக கூறினாலும், இறைவனின் சன்னதியில் பகைமை உணர்ச்சி நீங்கப் பெற்று, கங்கை எனும் நங்கை, பாம்பு, சந்திரன் ஆகியவை பகையின்றி சிவபெருமானின் சடையில் உலாவும் தன்மையை நமக்கு உணர்த்துகின்றார்

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (4.10.8), பெருமானது சடையில் உள்ள பொருட்களின் மீது தனது கற்பனையை ஏற்றி, அந்த காட்சியைக் காணும் தலைமாலை நகைக்கின்றது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைகின்றது: சடையில் அடக்கி வைக்கப்பட்டுள்ள கங்கை அசைகின்றது: அந்த கங்கை நீரினில் தோய்ந்த சந்திரன் ஆடுகின்றது. அவரது தலை மாலையில் உள்ள மண்டையோடு தனது பற்களை இழந்த நிலையில் சிரிப்பது போன்று காட்சி அளிக்கின்றது. இந்த காட்சிகளைக் காணும் அப்பர் பிரானின் கற்பனை விரிகின்றது. அந்த கற்பனைக் காட்சி தான் இந்த பாடலில் விளக்கப் படுகின்றது. 

    கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுறக்
    கிடந்த பாம்பு அவளையோர் மயில் என்று ஐயுறக்
    கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே 
    கிடந்தது தான் நகு தலை கெடில வாணரே

சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைவதைக் கண்டு, அருகில் இருக்கும் கங்கை நங்கை அச்சம் அடைகின்றாள். அச்சத்தால் அவள் உடல் நெளியவே, அவளது கரிய கூந்தல் ஆடுவதைக் கண்ட பாம்பு, அவளை மயில் என்று தவறாக நினைத்து பயப்படுகின்றது. தங்களது பகைமையை அடக்கி, தன்னையும் பாம்பையும் தனது சடையில் இறைவன் ஏற்றதால் அந்நாள் வரை அச்சமின்றி சடையில் உலாவிய சந்திரன், தனது பகைவனாகிய பாம்பு அசைவதைக் கண்டு, ஒரு கால் பாம்பு தன்னை விழுங்குவதற்காக வருகின்றதோ என்று பயம் கொள்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொள்வதைக் கண்ட, தலை மாலையில் உள்ள மண்டையோடு சிரிக்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்ட சூழ்நிலையை உருவாக்கி, அந்த சூழ்நிலையைக் கண்டு நகைக்கும் மண்டையோட்டினை மாலையாக அணிந்துள்ள கெடில வாணரின் தோற்றம் மிகவும் வியப்புக்கு உரியது என்பதே மேற்கண்ட அப்பர் பிரானின் பாடலின் திரண்ட கருத்து.   

பொழிப்புரை:

திருநீறு பூசப்பட்ட திருமேனியின் ஒரு பாகத்தில் அழகிய அணிகலன்களை அணிந்துள்ள உமை அன்னையை தனது உடலில் ஏற்றுக் கொள்வதை ஒரு கொள்கையாகக் கொண்டு அதனை கடைப்பிடிக்கும் பெருமான் அழகாக நீண்டு வளர்ந்த சடையில் கங்கை ஆற்றினையும் தன்னிடம் சரண் அடைந்துள்ள பிறைச் சந்திரனையும் பாம்பினையும், இந்த மூன்றினுக்கு இடையே இருந்த பகையினைத் தீர்த்து ஒருங்கே சூடிக் கொண்டுள்ள தன்மை பெரிதும் வியப்புக்கு உரியது. இத்தகைய பெருமான் சேறு நிறைந்து குளிர்ந்து காணப்படும் வயல்கள் உடைய சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com