126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 9

தீப்பிழம்பாக நின்றவனே
126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 9


பாடல் 9:

    உருகிட உவகை தந்து உடலின் உள்ளால்
    பருகிடும் அமுதன பண்பினனே
    பொருகடல் வண்ணனும் பூவுளானும்
    பெருகிடும் அருள் எனப் பிறங்கு எரியாய்
    உயர்ந்தாய் இனி நீ எனை ஒண்மலர் அடி இணைக் கீழ்
    வயந்து ஆங்குற நல்கிடும் மதில் புகலிமனே

விளக்கம்:

உருகிட உவகை தந்து=மனம் உருகி தனை வழிபடும் அடியார்களுக்கு, இறைவன் அத்தகைய அடியார்கள் சிவானந்தத்தில் திளைக்கும் வண்ணம் இன்பம் அளித்தல்; வயந்து=விரும்பி; ஆங்குற=திருவடிகளின் கீழே பொருந்தி இருக்கும் வண்ணம்; மன்= தலைவன், அரசன்; பொருதல்=மோதுதல்; பொருகடல்=இடைவிடாது கரையில் மோதும் அலைகள் கொண்ட கடல்; பிறங்கெரி=வெளிப்பட்டு தோன்றும் தீப்பிழம்பு; இந்த பாடலில் பிரமன் மற்றும் திருமாலின் முன்னர் தோன்றிய தீப்பிழம்பு, அளவில் பெருகி நீண்டு உயர்ந்ததை, அவனது அருள் பெருகும் தன்மைக்கு சம்பந்தர் ஒப்பிடுகின்றார். ஒண்=சிறந்த, ஒளிவீசும்;     

தனது அடியார்கள் பருகும் வண்ணம் இறைவன் சிவானந்தத் தேனை அளிக்கின்றார் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுவது அப்பர் பிரானின் திருமருகல் தலத்து பதிகத்தின் முதல் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. பரமாய ஆனந்தம்=மேலான ஆனந்தம். சிவானந்தத்தை விடவும் இனிய ஆனந்தம் வேறதும் இல்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். மருகல் எனப்படும் தலத்தில் உறையும் இறைவனின் திருவடிகளை வாழ்த்திப் பாடி வணங்கினால், தவம் செய்வதால் ஏற்படும் நல்ல பயன்கள் நமக்கு கிடைக்கும்; மேலும் நமது உயிரைப் பிணைத்துள்ள ஆணவ மலத்தினால் நமக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமை நீங்கும்: உண்மையான மெய்ப்பொருளை நாம் உணர்ந்து உலகப் பொருட்களால் நமக்கு ஏற்படும் மாயையிலிருந்து விடுபடலாம்; வேறு ஏதேனும் மாறுபட்ட எண்ணங்கள் நமது மனதினில் இருந்தால் அந்த சிந்தனைகள் நீக்கப்பட்டு நெஞ்சம் தூய்மை அடையும்; பரம்பொருளாகிய சிவபெருமானைத் தியானம் செய்து அதன் மூலம் நமக்கு ஏற்படும் பரமானந்தத்தை, சிவானந்தத் தேனை நாம் பருகலாம் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை. .

    பெருகலாம் தவம் பேதமை தீரலாம்
    திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்
    பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
    மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே

தனது ஊனினை உருக்கிய பெருமான், சிவானந்தத் தேனைத் தான் பருகும் வண்ணம் பெருமான் அருள் புரிந்தார் என்று மணிவாசகர் கூறும் திருச்சதகப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. வான நாடர்கள் அறிந்து கொள்ள முடியாத பெருமானை, மற்ற நாட்டில் உள்ளவர்களும் அறிந்து கொள்ள முடியவில்லை என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். ஆனால் இறைவனின் கருணையால் தான் அவனை அறிந்து கொள்ள முடிந்தது என்று இதே பாடலில் உணர்த்தும் அடிகளார், இறைவனை நாம் அறிந்து கொள்ள அவனது கருணை மிகவும் அவசியம் என்பதை இங்கே உணர்த்துகின்றார். ஊன நாடகம் என்று உயிரினை அதற்கு தகுந்த உடலுடன் பொருத்தி உயிர்கள் வினைகளை அனுபவித்து கழிக்க இறைவன் வழி வகுப்பதை குறிப்பிடுகின்றார். ஞான நாடகம் என்று உள்ளத்தின் அறியாமையை ஒழித்து ஒளியை பெருக்கச் செய்தமை குறிப்பிடப்படுகின்றது.

    வான நாடரும் அறிவொணாத நீ மறையில் ஈறும் முன் தொடரொணாத நீ
    ஏனை நாடரும் தெரிவொணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
    ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனை பருக வைத்தவா
    ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்து உடைய விச்சையே

இவ்வாறு இறைவன் விளைவிக்கும் சிவானந்தத் தேன், அழிவில்லாத ஆனந்தத்தை அளிக்கும் என்று விளக்கும் திருவாசகப் பாடலையும் நாம் இங்கே காண்போம். பிடித்த பத்து பதிகத்தின் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் அடிகளார், தக்க நேரத்தில் தனது குழந்தைக்கு பாலினை நினைந்து ஊட்டும் தாயினும் பரிந்து உதவி செய்பவன் சங்கரன் என்று கூறுகின்றார். குழந்தையின் உடல் உரம் பெறுவதற்காக தாய், தனது குழந்தைக்கு காலம் தவறாமல் பால் அளித்து வளர்க்கின்றாள். அழியக் கூடிய உடலினை விடவும் அழியாத தன்மை படைத்த உயிர் முக்கியம் வாய்ந்தது அல்லவா. அதனால் தான், உயிருக்குத் தேவையான ஞானத்தைத் தரும் பெருமானை, தாயினும் சாலப் பரிந்து உதவி செய்யும் பெருமான் என்று இங்கே கூறுகின்றார். தனது உயிர் உரம் பெறுவதற்காக இறைவன் தனது உள்ளத்தில் இருந்த இருளினை அகற்றி ஞானத்தை ஏற்படுத்தி ஒளி பெருக்கியதாக மணிவாசகர் இங்கே கூறுகின்றார். சிவபெருமான் உள்ளொளி மட்டுமா பெருக்கினான், அவரது ஊனினை உருக்கினான், உள்ளத்தில் அழிவில்லாத ஆனந்தம் ஊறி தேன் போன்று தித்திக்குமாறும் செய்தான். இவ்வாறு அருள் புரிந்த பெருமான், தான் செல்லுமிடமெல்லாம் வந்ததாக மணிவாசகர் கூறுகினார். இவ்வாறு பக்குவபடுத்தப் பட்ட மணிவாசகரின் உள்ளம், அந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றதா என்பதை கண்காணிக்க அவருடனே திரிந்த சிவபெருமானை தான் கண்டு கொண்டு அவரை இறுகப் பிடித்து கட்டியதாக இந்த பாடலில் கூறுகின்றார்.  

    பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ
           பாவியேனுடைய
    ஊனினை உருகி உள்ளொளி பெருக்கி உலப்பிலா
           ஆனந்தமாய
    தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே
            சிவபெருமானே
  யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு
             எழுந்து அருளுவது இனியே 

பொழிப்புரை:

உள்ளம் கசிந்து தன்னை வழிபடும் அடியார்களுக்கு சிவானந்ததை அளிக்கும் பெருமானே, அத்தகைய அடியார்களின் உள்ளம் அந்த சிவானந்தத் தேனை பருகும் வண்ணம், அமுதம் போன்று இனிய செயலைப் புரியும் பெருமானே, இடைவிடாது கரையில் மோதும் அலைகளை உடைய கடலின் நிறம் கொண்ட திருமாலும் தாமரைப் பூவினில் அமரும் பிரமனும் தனது அடியையும் முடியையும் காணமுடியாத வண்ணம் நீண்ட தீப்பிழம்பாக நின்றவனே, அவ்வாறு தீப்பிழம்பாக நெடிது உயர்ந்தபோது, பெருமானே, உனது அருள் மிகுந்து பெருகுவது போன்று மிகவும் வேகத்துடன் தீப்பிழம்பாக இருந்த உனது உருவமும் மேலும் மேலும் உயர்ந்தது; அத்தகைய கருணையினை உடைய உனது சிறந்த திருவடிகளை மிகவும் விரும்பும் அடியேன், உனது திருவடி நிழலில் பொருந்தி இருக்கும் வண்ணம் அருள் புரியவேண்டும் என்று உயர்ந்த மதில்களை உடைய புகலி நகரில் வீற்றிருக்கும் இறைவனே, நான் உன்னை வேண்டுகின்றேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com