118. யாமாமாநீ யாமாமா - பாடல் 1

அண்ணாமலை சம்பவம்
118. யாமாமாநீ யாமாமா - பாடல் 1

     
பின்னணி:

நான்காவது தலயாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் அந்த நகரத்தில் பல நாட்கள் தங்கி பல வகையான பதிகங்கள் பாடினார் என்று பெரிய புராணம் உணர்த்துகின்றது, விகற்பம்=மாறுபாடு; சில பதிகங்கள் தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தன என்ற செய்தியை மூல இலக்கியம் என்ற தொடர் மூலம் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். மொழி மாற்றுப் பதிகத்தினை (1.117) அடுத்து மாலைமாற்று பதிகத்தினை நாம் இப்போது சிந்திப்போம்.

    செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களால் மொழி மாற்றும்
    வந்த சீர் மாலைமாற்று வழிமொழி எல்லா மடக்குச்  
    சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக்குறள் சாத்தி
    எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு

    நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்
    சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக
    மூல இலக்கியமாக எல்லாப் பொருட்களும் உற்ற
    ஞாலத்து உயர் காழியாரைப் பாடினர் ஞானசம்பந்தர் 

மாலை மாற்று என்பது பாட்டினை முன்னிருந்து படிப்பினும் மாற்றிப் பின்னிருந்து முன் படிப்பினும் ஒன்று போல் வருவது; மாலை=வரிசை; மாற்று=மாறுதலை உடையது; மாலை மாற்று வகையில் உள்ள சொற்கள், விகடகவி, மோருபோருமோ, தோடு ஆடுதோ என்பன இந்த வகையில் அமைந்த சொற்றொடர்கள், ஆங்கிலத்தில் PALINDROME என்று அழைக்கப் படுகின்றன. மிகவும் பிரசித்தமான ஆங்கிலத் தொடர் ABLE WAS I ERE I SAW ELBA, இந்த வகைக்கு சிறந்த உதாரணம். இந்த கூற்று பிரான்ஸ் நாட்டு நெப்போலியனின் கூற்று. தனது வீழ்ச்சி எல்பா தீவுக்குச் சென்ற பின்னர் தொடங்கியது என்பதை உணர்த்தும் வண்ணம் அமைந்த தொடர் (ERE=BEFORE). இந்த வகையில் அமைந்துள்ள இலக்கியத்திற்கு முன்னோடி திருஞான சம்பந்தர் அருளியுள்ள இந்த பதிகம் தான். மாதவ சிவஞான யோகிகள் காஞ்சி புராணத்திலும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருநாகைக் காரோணம் புராணத்திலும் இத்தகைய பாடல்களை அமைத்துள்ளதாக தெரிய வருகின்றது. மாலைமாற்று பதிகத்தினையும் மிறைக் கவி என்று கூறுவார்கள். மிறை என்றால் வருத்தம் என்று பொருள். மூளையை வருத்தி, சொற்களை சரியாக பிரித்து பொருள் காணவேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு அழைத்தனர், இந்த பதிகத்தின் அழகே மாலை மாற்று முறையில் அமைந்துள்ள தன்மையே. எனவே அந்த அமைப்பினை கெடுக்காமல், இந்த விளக்கத்தில், முதலில் கொடுக்கப் பட்டுள்ளது. பொருளினை உணர்ந்து கொள்வதற்கு ஏதுவாக, சொற்களை பிரித்து விளக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த வகை கவிதையிலும் தத்துவக் கருத்துக்களையும், இராவணனின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம், சமணர் பற்றிய குறிப்பு, பதிகத்தின் பலன் ஆகியவை கொடுக்கப் பட்டுள்ள தன்மை, இறைவனின் அருளால் திருஞான சம்பந்தர் பெற்ற புலமைத் திறனை உணர்த்துகின்றது. இங்கே அளிக்கப்பட்டுள்ள விளக்கம் புலவர் கந்தசாமிப் பிள்ளை அவர்கள் அளித்துள்ள விளக்கத்தினை ஆதாரமாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பதிகத்தின் பாடல்கள் பெரும்பாலும் நெடில் எழுத்துக்களை கொண்டவை.

பாடல் 1

    யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
    காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா;

விளக்கம்:

    யாம் ஆமா நீ யாம் ஆம் மாயாழீ காமா காண் நாகா
    காணா காமா காழீயா மாமாயா நீ மா மாயா

யாம்=உயிர்களாகிய நாங்கள் கடவுள் என்றால்; ஆமா=அது பொருந்துமா, பொருந்தாது; நீ=நீயே கடவுள் என்றால் யாம் ஆம்=ஆமாம், அது மிகவும் பொருத்தமானது. மா=பெரிய; மாயாழீ=பெரிய பேரி எனப்படும் யாழினை வாசிக்கும் இறைவன்; காமா=அனைவரும் விரும்பும் வண்ணம் அழகு உடையவனே. காண் நாகா=அனைவரும் காணும் வண்ணம் பாம்பினை அணிந்தவன்; காணாகாமா=கை கால் முதலிய உறுப்புகள் உட்பட அவனது உடலினை எவரும் காணாத வண்ணம், உருவம் அற்றவனாக, காமனை மாற்றியவனே, காழீயா=சீர்காழி தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனே, மா=இலக்குமி தேவி; மாயா=மாயன் என்று அழைக்கப்படும் திருமால்; மா=கரியது (மலத்தினை கரிய நிறம் கொண்டதாக கூறுவது மரபு) மாயா=மாயை போன்ற மலங்களிளிருந்து; நீ=நீ எம்மை விடுவிப்பாயாக. வெளிச்சம் இல்லாது இருள் சூழ்ந்த நிலையில் நாம், எந்த பொருளையும் காண முடியாத வண்ணம் இருள் நிறைந்து நிற்பதை உணருகின்றோம். அதனால் அந்த இருளை அகற்றுவதற்கு தீபத்தினை ஏற்றி இருளை அகற்ற நாம் முயற்சி செய்கின்றோம். இருளினை கருமை நிறம் கொண்டதாக நாம் அனைவரும் உருவகம் செய்கின்றோம். ஆனால் மாயை தான் இருப்பதையும் நமக்கு உணர்த்தாமல், நாம் காண வேண்டிய, உணர வேண்டிய மெய்ப் பொருளை, காண முடியாமல் உணர முடியாமல் செய்வதால், இருளினும் கொடியதாக கருதப்பட்டு, இருளினைப் போன்று கரிய நிறம் உடையதாக கூறப்படுகின்றது. 

உயிர்கள் என்று பிரமன் திருமால் உட்பட அனைத்து உயிர்களும் இங்கே குறிப்படப் படுகின்றன. அனைத்து உயிர்களுடனும் மலம் இயல்பாகவே கலந்துள்ளது. மலத்தின் கலப்புகள் அற்றவன் பெருமான் ஒருவனே என்பதால், பாசம் அணுகாத பெருமான் ஒருவனே இறைவனாக இருக்க முடியும். தனது அழகினால் அனைவரையும் சொக்கவைக்கும் தன்மை கொண்டதால் தான் மதுரையில் பெருமான் சொக்கன் என்றும் சொக்கேசன் என்றும் அழைக்கப்படுகின்றார். 

திருநீறு அணிந்துள்ள திருமேனியில் பாம்பு சென்று அடையும் நிலை, நல்லன மற்றும் தீயன ஆகிய அனைத்தும் பெருமானைச் சென்று சார்ந்து நிற்கும் என்பதை உணர்த்துகின்றது என்று கூறுவார்கள். பெருமானின் சன்னதி அனைத்துப் பொருட்களின்  தன்மையையும், நல்லனவாக மாற்றிவிடுகின்றது. செருக்குடன் பாய்ந்து வந்த கங்கை நதி தனது ஆற்றலை இழந்து புண்ணிய தீர்த்தமாக மாறுகின்றது, பாவங்கள் செய்த சந்திரன் தனது களங்கம் நீங்கப் பெற்று தூய வெண் மதியாக மாறுகின்றான். முரட்டு குணத்துடன் பாய்ந்த வந்த மான் கன்று, தனது இயல்பான குணத்தினைப் பெற்று துள்ளி விளையாடும் மான் கன்றாக மாறி நிற்கின்றது. அவனது சன்னதியில் சந்திரனும் பாம்பும் தம்மிடையே உள்ள பகையினை மறந்து ஓரிடத்தில் தங்கியுள்ளன. நல்லவராகிய பெருமானின் அருகே அனைவரும் நல்லவரே. இந்த நிலை நமக்கு அப்பர் பெருமான் அருளிய நாகேச்சரம் தலத்து பாடல் (5.52.1) நினைவுக்கு கொண்டு வருகின்றது. பெருமானைச் சென்றடைந்த நாகம் நல்ல நாகமாக மாறிவிடுகின்றது என்று இங்கே கூறுகின்றார். 

    நல்லர் நல்லதோர் நாகம் கொண்டு ஆட்டுவர்
    வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
    பல் இல் ஓடு கை ஏந்திப் பலிதிரி
    செல்வர் போல் திரு நாகேச்சரவரே  .   

தனது தவத்தினை கலைக்க முயற்சி செய்த மன்மதனை விழித்தே அழித்த சிவபெருமான், பின்னர் அவனது மனைவி இரதி தேவி வேண்ட, அவளுக்கு இரங்கி மன்மதனுக்கு உயிர் அளித்தாலும், இரதி தேவியின் கண்களுக்கு மட்டுமே மன்மதன் தென்படுவான் என்றும் ஏனையோர்கள் அவனது உருவத்தை காண முடியாத வண்ணம் இருப்பான் என்றும் கூறுகின்றார். இந்த நிகழ்ச்சி பெருமானின் நெற்றிக்கண்ணின் வலிமை மற்றும் அவரது கருணை ஆகிய இரண்டையும் நமக்கு உணர்த்துகின்றது.  

இந்த பாடலில் மாமாயா என்று இலக்குமி தேவியின் கணவர் திருமாலாக (மாயன் என்பது திருமாலின் பெயர்களில் ஒன்று) பெருமான் இருக்கும் நிலையினை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் மூன்று பாடல்களில் பெருமான், பிரமனாக இருந்து படைத்தல் தொழில் புரிவதையும் திருமாலாக இருந்து காத்தல் தொழில் புரிவதையும் உருத்திரனாக இருந்து அழித்தல் தொழில் புரிவதையும் சம்பந்தர் உணர்த்துகின்றார்.. மனிதர்கள், தேவர்கள் உட்பட அனைத்து உயிர்களும் உலகில் நிலை பெற்று வாழும் பொருட்டு அவர்களை காத்தருள வேண்டும் என்ற எண்ணத்தில் பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள திருமாலின் மனதினில் நிலை பெற்று இருக்கும் சிவபெருமான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல்  பாடலில் பிரமன் தனது தொழிலினைச் சரிவரச் செய்வதற்காக சிவபெருமானை வேண்டுவது போன்று, திருமாலும் தனது தொழிலினை சரிவரச் செய்யும் வண்ணம் பெருமானை வேண்டுகின்றார் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. திருமால் புரியும் யோக நித்திரை அறிதுயில் என்று சொல்லப் படுகின்றது தூங்குவது போன்று காட்சி அளித்தாலும் உலகில் நடப்பது அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர் திருமால் என்பதால் அவர் கொண்டுள்ள நித்திரை யோக நித்திரை என்று அழைக்கப்படுகின்றது.   

    மலை பல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள் 
    நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும்
    அலைகடல் நடு அறிதுயில் அமர் அரி உரு இயல் பரன் உறை பதி
    சிலை மலி மதிள் சிவபுரம் நினைபவர் திருமகளொடு  திகழ்வரே
     

பொழிப்புரை:

உயிர்களாகிய நாங்கள் கடவுள் என்றால் அது பொருத்தமாகுமா, அந்த கூற்று சிறிதும் பொருந்தாது. ஆனால் நீயே கடவுள் என்று பெருமானை நோக்கி சொன்னால் அது மிகவும் பொருத்தமான கூற்று ஆகும். பேரி யாழ் எனப்படும் சிறந்த யாழினை வாசிப்பவனே, காண்போர் அனவைரும் சொக்கி மயங்கும் வண்ணம் கட்டழகு படைத்தவனே, தன்னை வந்தடைந்த தீயவையும் நல்லனவாக மாறிவிடும் என்பதை உணர்த்தும் வண்ணம் பாம்பினைத் தனது திருமேனியில் ஏந்தியவனே, உமது நெற்றிக்கண்ணின் சிறப்பையும் உமது கருணையின் தன்மையையும் ஒருங்கே உணர்த்தும் வண்ணம் மன்மதனை இரதி தேவி தவிர்த்து வேறு எவரும் காணாத வண்ணம் மாற்றியவனே, சீர்காழி தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனே, இலக்குமி தேவியின் கணவனும் மாயன் என்று அழைக்கப்படும் திருமாலின் உள்ளத்தில் இருந்து படைத்தல் தொழில் புரியும் இறைவனே, கரியதாகிய ஆணவம் கன்மம் மற்றும் மாயை எனப்படும் மலங்களிலிருந்து எம்மை நீ விடுவிப்பாயாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com