118. யாமாமாநீ யாமாமா - பாடல் 8

அழகு என்று பொருள்
118. யாமாமாநீ யாமாமா - பாடல் 8

பாடல் 8:

    நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
    காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே

விளக்கம்:

    நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேகம் அதள் ஏரி அளாய உழி கா
    காழி உளாய் அரு இளவு ஏது அகவே ஏழிசை யாழ இராவணனே

நே=நேசம், உமது திருவடிகள் மீது அன்பு வைத்து வழிபடும்' ஆ=பசு, பதி பாசு பாசம் என்ற தொடரில் உள்ள பசு என்ற சொல் உயிர்களை குறிப்பது போன்று, இங்கே உயிர்களை குறிக்கும். விழ=தன்வயமின்றி விழுந்து கிடக்க; யா=கட்டிய; ஆசை=ஆசையாகிய கயிறு; இழியே=அவிழ்த்து விடுபவன்; வேகம்=வேகமாக ஓடும் விலங்கு, மான்; அதள்=தோல்; ஏரி=அணிந்தவன்; அளாய=துன்பங்கள்; உழி=;சூழ்ந்து இருக்கும் இடம்; கா=காப்பாயாக; அரு=மன்னிப்பதற்கு உரிய; இளவு=இளப்பம், இளக்காரமாக கருதப்படும் செயல்; ஏது=ஏதம் என்ற சொல்லின் மருவு, குற்றம் என்று பொருள்; ஆகவே என்ற சொல்லின் விகாரம் அகவே . 

உயிர்கள் பாசத்தால் கட்டுண்டு கிடக்கும் நிலையை, உயிர்களை பசு என்று குறிப்பிட்டு ஆசை என்ற கயிற்றினால் கட்டுண்டு கிடக்கும் பசு என்று நயமாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார். ஏர் என்றால் அழகு என்று பொருள்; அழகுடைய இறைவனை ஏரி என்று குறிப்பிடுகின்றார். இறைவனின் இருப்பிடத்தையே அசைக்க முயன்ற இராவணனது மிகப் பெரிய குற்றமே அவன் பாடிய ஏழிசை காரணமாக மன்னிக்கப்பட்ட போது, எங்களது சிறிய குற்றங்கள் மன்னிக்கத் தக்கவை அல்லவா என்று இறைவனிடம் சம்பந்தர் கேள்வி கேட்பது போன்று அமைந்த பாடல். தனது வாழ்நாள் முழுவதும் சிவத்தொண்டில் கழித்து சைவத்தின் பெருமையை நிலைநாட்டிய சம்பந்தர், எந்த குற்றமும் செய்யவில்லை. எனவே இந்த பாடல் குற்றங்கள் செய்துள்ள நாம், நமது குற்றங்களை இறைவன் மன்னித்து அருள வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் இறைவனிடம் இறைஞ்சி பாட வேண்டிய பாடல். 

வாயுவேகம் என்பதை விடவும் மனோவேகம் பலமடங்கு அதிகமானது. மனம் தான் நாம் செய்யும் எல்லா தவறுகளுக்கும் மூல காரணம். பல பொருட்கள் மீது கொண்டுள்ள பலவிதமான ஆசைகளால் மனம் தறிகெட்டு ஓடுகின்றது. நம்மால் அந்த மனதினை கட்டுப்படுத்த முடிவதில்லை. நமது மனம் கட்டுப்பட வேண்டும் என்றால் அதற்கு இறைவனின் அருள் வேண்டும். மிகவும் வேகமாக ஓடக்கூடிய மானை அடக்கிய இறைவன் ஒருவனால் தான் நமது மனதினை கட்டுப்படுத்த உதவி செய்ய முடியும் என்பதை உணர்த்தும் முகமாக, இங்கே இறைவன் மான் தோல் அணிந்திருக்கும் நிலையினை சம்பந்தர் குறிப்பிட்டார் போலும். ,      
    
பொழிப்புரை:

பெருமானே, உனது திருவடிகள் பால் அன்பு கொண்டு வணங்கித் துதிக்கும் பல அடியார்கள், ஆசை எனப்படும் கயிற்றினால் கட்டப்பட்டு தாங்கள் விரும்பியதை (உன்னைத் தொழுது வணங்கி போற்றுவது) செய்ய முடியாமல் தன்வயமற்று இருக்கின்றனர். ஆகையால் அவர்களது பாசக் கயிற்றினை நீர் தான் அவிழ்த்து அருள் புரிய வேண்டும். மிகவும் வேகமாக ஓட வல்ல மானை அடக்கி அதன் தோலை ஆடையாக அணிந்துள்ள அழகனே, நீர் தான் எங்களது மனதினை அடக்க உதவி புரிய வேண்டும். காழி நகரத்தில் வீற்றிருக்கும் தலைவனே, நாங்கள் பொறுக்க முடியாத வண்ணம் எங்களைச் சூழ்ந்துள்ள துன்பங்களிலிருந்து விடுவித்து காப்பாயாக. பலரும் இகழும் வண்ணம் நாங்கள் செய்த சிறிய குற்றங்களை, எங்களது சிறுமைத் தன்மையால் செய்த குற்றங்களை, கயிலாய மலையினை பெயர்த்து எடுக்கத் துணிந்து பெரிய குற்றம் செய்த அரக்கன் இராவணனையே மன்னித்த பெருமானே, நீர் தான் எங்களது குற்றங்களையும் மன்னித்து அருள் வேண்டும்.     
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com