கோலாகலமாக நடைபெற்ற ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 20வது ஆண்டு விழா

ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கம் 1998ம் ஆண்டு தொடங்கி 21ம் ஆண்டை நோக்கி வெற்றிகரமாகப் பயணிக்கிறது.
கோலாகலமாக நடைபெற்ற ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 20வது ஆண்டு விழா

ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கம் 1998ம் ஆண்டு தொடங்கி 21ம் ஆண்டை நோக்கி வெற்றிகரமாகப் பயணிக்கிறது. ஐதராபாத் பகுதி வாழ் தமிழர்கள் தொடர்ந்து நம் மொழி, கலாசாரத்தை கட்டிக்காக்கும் வகையிலும், அடுத்த தலைமுறை நம் தமிழ் மொழியைப் போற்றும் வகையிலும், நல்ல பல நிகழ்ச்சிகளை, திட்டங்களை ஆண்டுதோறும் நம் சங்கம் முன்னெடுத்து வருகிறது. 

ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 20வது ஆண்டு விழா டிசம்பர் மாதம் 23ம் தேதி சனிக்கிழமை அன்று சரியாக மாலை 6.00 மணிக்கு சிகிந்தராபாத், பத்மராவ் நகரில் உள்ள கெளத காமகோடி கல்யாண நிலையத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் தாய் வாழ்த்து பாடிய பின்னர் நிகழ்ச்சியின் நன்கொடையாளர்கள் மதுசூதனன், சீனிவாசராவ், தமிழ்ச்சங்க தலைவர் சாய்காந்த், பொதுச்செயலாளர் கிருபானந்தம், செயற்குழு உறுப்பினர்கள் செல்வதிரவியம், ராஜ்குமார், இராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்ற விழா இனிதே தொடங்கியது.

ஹபீப் நிகழ்ச்சியை கவிதைத் தமிழில் தொகுத்து வழங்க சுமார் 800க்கு மேல் பார்வையாளர்கள் கலந்து கொண்ட ஆண்டு விழாவின் முதல் நிகழ்வாக தமிழ்ச் சங்க தலைவர்  சாய்காந்த் அவர்கள் நிகழ்ச்சியின் நன்கொடையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், விழாக்கலைஞர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு அறிக்கையை பொதுச் செயலாளர் கிருபானந்தம் வாசித்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையாளர் R.V.சந்திரவதனன் அவர்கள் கலந்துகொண்டு பார்வையாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து வளர்த்து வரும் கலைஞர் சதீஷ் பலகுரல் நிகழ்ச்சி நடைபெற்றது, அடுத்து பிரபல நடன கலைஞர் அம்பிகாவின் ரிங் நடனம் அரங்கு நிறைந்த ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பின்னர் செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் செயல் திட்டங்கள், சீரிய முறையில் ஆற்றிவரும் தமிழ்ப் பணியை எடுத்துக் கூறினார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக பிரபல நகைச்சுவை நடிகர் மதுரை முத்து அவர்களின் அசலான நகைச்சுவை விருந்து அவையினரின் பெரும் கரகோசத்தையும் பெற்றது.  அரங்கேறிய அத்தனை நிகழ்ச்சிகளும் யாவர் மனதையும் கொள்ளை கொண்டு விட்டதென்றே சொல்ல வேண்டும்.

சிறப்புவிருந்தினர் தெலுங்கானா மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையாளர் R.V.சந்திரவதனன், கலைஞர்கள்  மதுரை முத்து, செல்வி. அம்பிகா, சதீஷ், நன்கொடையாளர்கள் மதுசூதனன், சீனிவாசராவ், ஜெயபால், சிவகுமார், முன்னாள் செயற்குழு உறுப்பினர் முத்துவேல் மற்றும் முஸ்தபா ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவப்படுத்தியது ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கம்.

பொருளாளர் போஸ் அவர்கள் நன்றியுரை கூற விழா திட்டமிடப்பட்ட நேரத்தில் இனிதே நிறைவுற்றது. விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நகைச்சுவை விருந்தோடு அறுசுவை இரவு உணவும் வழங்கப்பட்டது.

செயற்குழு உறுப்பினர்கள் தர்மசீலன், நேரு, ராஜ்குமார், இராமலிங்கம் செல்வதிரவியம் மற்றும் நிகழ்ச்சி உதவி தேவிகாராணி, கனிசீலன், அருணா, கெளரி, சாந்தா தத், ராமதிலகம், குமாரராஜன், குணசேகர், கார்த்திகேயன், வீடியோ உதவி ஷ்ரவன், புகைப்பட உதவி கவுதம் மற்றும் பிற தோழமைகளின் அயராத உழைப்பும், பங்களிப்பும், ஒத்துழைப்பும் மட்டுமே பேருதவியாக இருக்கிறது என்பதை மட்டற்ற பெருமகிழ்வுடனும், நன்றியுடனும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு தொடர்ந்து எங்களுடன் பயணிக்கும் நல்லிதயம் கொண்ட தோழமைகளுக்கும், இயன்ற பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நல்கி நமது நிகழ்ச்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் அன்பு உள்ளங்களுக்கும் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

தொடரும் ஆண்டுகளிலும் உங்களின் நட்பும், ஆதரவும் நமது தமிழ்ச் சங்கத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்ற நம்பிக்கையுடன்.

- ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com