தைவான் தமிழ் சங்கத்தின் தைப்பொங்கல் விழா

தைவான் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை அன்று 'பியூஜென் கத்தோலிக் பல்கலைக்கழக' வளாகத்தில் நடைபெற்றது.
தைவான் தமிழ் சங்கத்தின் தைப்பொங்கல் விழா

தைவான் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை அன்று 'பியூஜென் கத்தோலிக் பல்கலைக்கழக' வளாகத்தில் நடைபெற்றது. 

விழாவில் தமிழ் சங்க தலைவர் முனைவர் யு ஹசி அவர்களும், இந்தியா தைப்பே குழும இயக்குனர் மதுசூதனன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தாய் தமிழ் மண்ணை விட்டு கடல்கடந்து சென்றாலும் தமிழர்கள் தங்களின் கலாச்சாரத்தினை மறக்காமல் கொண்டாடி மகிழ்கின்றனர். அவ்வண்ணமே கிழக்காசிய பிராந்திய அழகிய தீவு தைவானில் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கும் தைவான் தமிழ்ச் சங்கத்தின் தொடர் நிகழ்ச்சியாக, தன்னுடைய ஆறாம் ஆண்டு பொங்கல் விழாவினை வெகு விமர்சியாக பொற்றடை ஆண்டு  மார்கழி 22ஆம்  நாள்   (ஜனவரி 6ம் தேதி 2018) தைபேயில் உள்ள ஃபூ ஜென்  கத்தோலிக்க பல்கலைக்கழத்தில் தைவான் தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் யூசி அவர்கள் தலைமையில் துணைத்தலைவர்கள் முனைவர் சங்கர் ராமன் மற்றும் இரமேஷ் பரமசிவம் ஒருங்கிணைப்பில் இனிதாய் நடைபெற்றது. 


தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பொங்கல் கொண்டாட்டத்தில் தைவான் தமிழ் சங்கம் சார்பாக சங்க செயலாளர் முனைவர் ஆகு. பிரசண்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேச, சிறப்பு விருந்தினர்களால் குத்து விளக்கேற்றி பொங்கல் விழா இனிதே தொடங்கிவைக்கப்பட்டது.

தைவான் தமிழ் சங்கத்தின் தலைவரும், கவிஞருமான முனைவர் யுசி தலைமையுரை ஆற்றி  விழாவினை தொடக்கி வைத்தார். முதன்மை விருந்தினராக இந்தியா தைபே அசோசியேசன் முதன்மை இயக்குனர் அன்பிற்கினிய  ஸ்ரீதரன் மதுசூதனன்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும்  இப்பொங்கல் விழாவிற்கு  பெருமை சேர்க்கும் விதமாக  மரியாதைக்குரிய விருந்தினர்கள் தேசிய தைவான் பல்கலைக்கழக்தின் சர்வேதச மூலக்கூறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதுநிலை திட்டத்தின்  இயக்குனர்  முனைவர். சுன் வேய் சென்,   ஃபூ ஜென்  கத்தோலிக்க பல்கலைக்கழத்தின் சர்வதேச தொடர்பின் துணைத் தலைவர்  முனைவர்  மைக்கேல் டி.எஸ். லீ, தேசிய தைபே தொழில் நுட்ப பல்கலைக்கழக சர்வதேச EOMP முனைவர் பட்ட திட்டத்தின் முதன்மை பேராசிரியர் ஷென் மிங் சென் அவர்களும்  வாழ்த்துரை வழங்கினார்கள். 
 

இவ்விழாவின் சிறப்பு அம்சமாக தமிழ் மண்ணின் இயல், இசை, நாடகம் என்று முப்பரிமாணத்தில் பாரம்பரிய மற்றும் கிராமிய நடனம், சிறுவர்-சிறுமியரின் கலை நிகழ்சிகளுடன் அவர்களின்  ஆடை-அலங்கார அணிவகுப்பும் நடைபெற்றது. 


முத்தாய்ப்பாக முனைவர் மு. திருமாவளவன் எழுதிய “தைவானில் தமிழ்த்தூறல்” என்னும் கவிதை தொகுப்பு நூல்  தைவான் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், கவிஞர் யூ சி அவர்கள் வெளியிட துணைத்தலைவர் முனைவர் சங்கர் ராமன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும் எதிர்கால தமிழகத்தை  காக்க அனைவரும் அரசியல் பேசவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக “அரசியல் பேசாதே” எனும் நாடகம் நடைபெற்று பார்வையாளர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

பட்டிமன்றம்
முன்னதாக பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் விதமாக  சிறப்பு பட்டிமன்றம் ஒன்று ''தமிழை அதிகம் வளர்ப்பது தமிழக தமிழர்களா??? புலம் பெயர் தமிழர்களா???’’ எனும் தலைப்பில் நடைபெற்றது. முனைவர் இரா. சீனிவாசன் தலைமையில் தமிழக தமிழர்களே என முனைவர் மு. திருமாவளவன், கி.ராகவேந்திரா, முனைவர் வசந்தன் திருநாவுக்கரசு ஆகியோர் வாதாட இவர்களுக்கு எதிராக முனைவர்பட்ட ஆராய்ச்சியாளர்களான செல்வன் தயானந்தபிரபு, செல்வி பவித்ரா, செல்வன் தமிழ் ஒளி ஆகியோர் சிறப்பாக பேசினர். இறுதியாக தமிழை அதிகம் வளர்ப்பது புலம் பெயர் தமிழர்களே என நடுவர் தீர்ப்பளித்து நிறைவு செய்தார்.
 

இறுதியாக தைவான் தமிழ் சங்க துணை செயலாளர் சு.பொன்முகுந்தன், பொருளாளர் முனைவர் சந்தானமூர்த்தி நாச்சிமுத்து மற்றும் துணை பொருளாளர் முனைவர் பூபதி சுப்பிரமணி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், விழா ஏற்பாட்டாளர்கள் சார்பாக  நன்றி கூற தேசிய கீதத்துடன் பொங்கல் விழா இனிதே நிறைவடைந்தது.

இவ்விழாவினை தைவானின் அனைத்து நகரங்களில் இருந்தும் குறிப்பாக தாய்பெய், ஷிஞ்சு, தைச்சூங், கௌஷியாங் மற்றும் தைனன் நகரங்களில் இருந்து நானூறுக்கும் மேற்பட்ட தமிழ் நெஞ்சங்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- இரமேஷ் பரமசிவம்
துணை தலைவர், தைவான் தமிழ் சங்கம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com