மண் வாசனை... குயீன்ஸ்லாந்துவாழ் தமிழ் மக்களின் பொங்கல் விழா

'மொழி எம் உரிமை, எம் இனம், எம் அடையாளம்' என்ற வீர முழக்கத்துடன் தாய்த்தமிழ்ப்பள்ளியும், குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றமும் இணைந்து நடத்திய பொங்கல் விழா,  
மண் வாசனை... குயீன்ஸ்லாந்துவாழ் தமிழ் மக்களின் பொங்கல் விழா

'மொழி எம் உரிமை, எம் இனம், எம் அடையாளம்' என்ற வீர முழக்கத்துடன் தாய்த்தமிழ்ப்பள்ளியும், குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றமும் இணைந்து நடத்திய பொங்கல் விழா,  திருவள்ளுவராண்டு 2049 தை முதல் நாள் (14/01/18) அன்று, ரொபெல்ல பூந்திடலில் வெகு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

கடந்த நான்கு வருடங்களாக, எங்கள் குயீன்ஸ்லாந்து மாநில  பொங்கல் விழாவை தைத்திருநாளிலிருந்து ஓரிரு வாரங்கள் கழித்து ஏதேனும் ஒரு வாரயிறுதியில் கொண்டாடுவது வழமை. இம்முறையும் அவ்வாறு அத்திடலிலேயே நடத்த முடிவுசெய்து, திடலை பதிவுசெய்ய முனைந்தபோது, ஏற்கனவே வேறு ஏதோவொரு அமைப்பு, நாம் வழக்கமாக நிகழ்த்தும் வாரயிறுதிகளை முன்னதாகவே முன்பதிவு செய்ததை அறிந்தோம். இதனால் தைத்திருநாள் அன்றே விழாவை கொண்டாட நேர்ந்ததை ஒரு வரப்பிரசாதமென்றே சொல்லவேண்டும்.

"எனக்கென கொண்டாடும் விழாவை, என்னொளி மாநிலத்தில், என் நாளன்றே (ஞாயிறன்றே) கொண்டாடுங்கள்" எனக் கதிரவன் உத்தரவிடுகிறான் எனக்கருதி பொங்கலன்றே விழாவை நடத்த முடிவுசெய்தோம். எத்தகைய அருமையான முடிவு அது என்பதை, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அழகாகப் புரிந்திருக்கும்.

ஆகா...! எத்தகைய அருமையான, அழகிய நாளது! 
காலையிலேயே சுமார் இருபது குடும்பங்கள், வரிசையாகப் பானைகளை வைத்து பொங்கி, பொங்கல் சமைத்தது, ஒரு ஆரவாரமான ஆரம்பத்தைத் தந்தது. 

சுவைமிகுந்தப் பொங்கலைத் தேர்ந்தெடுக்கும் வைபவமும் நேர்த்தியாக நடந்து முதல் மூன்று இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசளிக்கப் பட்டன.

காலை 10 மணியளவில், ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின், மெல்பர்ன் தலைமையகத்திலிருந்து, எமது விழாவினைப் பற்றி அறிந்து, பத்து நிமிட தொலைபேசிவழி  ஆங்கில நேர்காணலை நேரலையாக  ஒலிபரப்பிய பொழுது, 'எம் மொழி, எம் கலாச்சாரம், எம் அடையாளம்' என்ற பெருமிதத்தில் நெஞ்சு விம்மியது.

மற்றைய நிகழ்ச்சிகள், மதியம் மூன்று மணிக்கு மேல் ஆரம்பமாகின. கொளுத்திக் கொண்டிருந்த கதிரவன், தனக்குத் தரப்படும் மரியாதையை ஏற்கும்முகமாகத் தன் தீவிரத்தை சற்றே குறைத்தான். "நானும் இயற்கையின் ஒரு அங்கம்தானே, எனவே என் திறமையும் காட்ட வேண்டும்" என்று வாயுபகவான் நினைத்தானோ என்னவோ... இதமான மந்த மாருதமும் வீச ஆரம்பித்து, இதம் தந்தது. 

சிறுவர், பெற்றோர், பெரியோர் என வந்து குழுமிய மக்கள் பண்டிகையைக் கொண்டாட ஆரம்பித்தனர். ஒலிபெருக்கியில் இடைவிடாது ஒலித்த தமிழ் பாடல்கள் நாம் பிறந்த தமிழ் பேசும் நாடுகளிலேயே விழா கொண்டாடப்படுவது போன்ற பெருமிதத்தை ஊட்டியது. மைதானத்தைச் சுற்றிக் காணப்பட்ட, பலவித திண்பண்டக் கடைகள், விளையாட்டு சவாரிகள் என்பன ஒரு திருவிழாக் கோலத்தை ஏற்படுத்தின.

அதுமட்டுமா...?

அனைவரும் விளையாடி மகிழத்தக்க வகையில், பலவித விளையாட்டுகளை, விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வயது வித்தியாசமின்றி அனைவரும் விளையாடி மகிழ்ந்தது, மகிழ்ச்சியைத் தந்தது.

அப்பொழுது, விழா பற்றிய தொலைபேசி நேர்காணலை, SBS ஒலிபரப்புச் சேவையின் அறிவிப்பாளர் சஞ்சயன், திடலின் பின்னணி ஒலிகளுடன் பதிவுசெய்து , பின்னர் ஒலிபரப்பியது, மீண்டும் நம் பொங்கல் விழாவின் பெருமையை, ஆஸ்திரேலியாவாழ் தமிழ் சமூகம் முழுவதும் எடுத்துச் சென்றது. எடுத்துச் சொன்னது. 

திடலின் ஒரு புறத்தே, நடைபாதையில் அழகிய கோலப்போட்டி நடந்தது. உழவுக்கும், தொழிலுக்கும், உழவருக்கும் வந்தனை செய்யுமாறு எடுத்துரைத்தன வண்ணமிகு சித்திரங்கள். ஆறு கோலங்களின் அணிவகுப்பு விழாவிற்கு மேலும் மெருகூட்டியது. 

மாலை 5.30 மணிக்கு மேல், விழாவின் பிரதம அதிதிகளாக இப்ஸ்விச் நகர பிதா, இப்ஸ்விச் பாராளுமன்ற உறுப்பினர், மற்றைய அதிதிகள் ஆகியோர் மேடையில், மங்களகரமாகக் குத்துவிளக்கு ஏற்றி கலைநிகழ்ச்சிகளை ஆரம்பித்துவைத்தனர்.

 பிஜி இந்திய சமுகத்தைப் பிரதிப்பலித்து, பெண்மணி கவிதா பரதநாட்டிய நிகழ்வின் மூலம் கலை நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்த திருமதி.பிரியா சிவகுமாரனின் இனியகுரலில், 'சின்னஞ்சிறு கிளியே' என்ற மகாகவியின் பாடல் தென்றலாய்த் திடல் முழுவதும் தழுவிச் சென்றது. தென்றலைத் தொடர்ந்தது இடிமுழக்கம். இடியாய் ஒலித்த நம் பறை முழக்கம். 

"பறை, கலை, இயற்கை, மக்கள்" என்ற சதுர்வேதம் போன்ற வார்த்தைகளுடன், சகோதரர் லாரன்ஸ் அண்ணாதுரையின் தலைமையிலான ஆஸ்திரேலியத் தமிழர் கலையகத்தினர் தம் முழக்கத்தைத் தொடங்கினர். அவர்கள் குழுவோடு, எங்கள் குயீன்ஸ்லாந்து மாநிலத்தவர்களும் சேர்ந்து, செவிப்பறைகள் அதிர, அதிர்ந்த, நாடி நரம்புகளை முறுக்கேற்றும் பறையொலியுடன், மயிலாட, காளையாட, திருமுருகன் விளையாடத் திடல் முழுவதும் ஊர்வலம் வந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.  தொடர்ந்து மேடையேறி இசையும் அசைவுமாக, மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்த, அடிலேய்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆஸ்திரெலிய தமிழர் கலைக் குழுவினருக்கு, குயீன்ஸ்லாந்துவாழ் தமிழ் மக்களின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். 

பிரியாவின் பாடல் தென்றலாகத் தழுவிச் சென்றது எனில், நிலவொளியாக, சிறுமழையாக நெஞ்சம் நனைத்தது இளைஞர் ஹரியின் "இளைய நிலா பொழிகிறது" எனும் இதமானத் தமிழ்ப்பாடல். புயலாகத் தொடர்ந்தது அவர் தம் குழுவினருடன் பாடி ஆடிய 'போக்கிரிப் பொங்கல்' பாடல். பின், மயூராலயா நடனப் பள்ளியின் நால்வர் குழுவினரின் அழகிய பரத நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி, அவையோரை மகிழவைத்தது.

பொற்கரையின் சங்கமம் கலைக் குழுவினர், வேப்பிலை, காவடி, கரகத்துடன் அம்மனை அழைத்து ஆட, அம்மனாய் சூலத்துடன் சேர்ந்தாடினார் குழு அங்கத்தவரொருவர். சிறார்கள் அம்மனை அழைத்து ஆட, 'ஆளப் போறான் தமிழன் உலகம் எல்லாமே' என்ற பிரபலத் திரைப்படப் பாடலுக்கு, சங்கமத்தின் இரு யுவதிகளையும், நான்கு இளைஞர்களையும் கொண்ட வாலிபர் குழு துள்ளலிசையுடன் துள்ளியாடி எல்லோரையும் மகிழ்வித்தனர்.

இறுதியங்கமாக மீண்டும் ஆஸ்திரேலியக் கலைக் குழுவின் இசையுடனும், பரிசளிப்பு விழாவுடனும் மேடை நிகழ்வுகள் நிறைவேறின.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாய், வான்முற்றம் முழுவதும் வண்ணக் கலவையாய் கோலமிட்டு ஒளிர்ந்தது இறுதி நிகழ்வான வாண வேடிக்கை. 

காணவந்தோரின் களிமிக்க ஒலிகளுடன் இனிதே நிறைவேறியது எங்கள் பொங்கல் திருவிழா! தமிழர் நமது தனிவிழா!

தமிழ் என்பது அறம்!
அது எங்கள் வரம்! 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com