குறைந்த ஐபிஎல் ஆட்டங்கள், 3 மாடங்களின் பிரச்னைகள்: பரிதாபமான சென்னை சேப்பாக்கம் மைதானமும் சிஎஸ்கே ரசிகர்களும்!

கடைசி 13 ஆட்டங்களில் (ஏப்ரல் 22, 2013 முதல்) சிஎஸ்கே அணி 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஓர் ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது...
குறைந்த ஐபிஎல் ஆட்டங்கள், 3 மாடங்களின் பிரச்னைகள்: பரிதாபமான சென்னை சேப்பாக்கம் மைதானமும் சிஎஸ்கே ரசிகர்களும்!

நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2019 (12-வது சீசன் போட்டி) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையில் சிஎஸ்கேவும், இந்திய கேப்டன் கோலி தலைமையில் ஆர்சிபி அணிகளும் களமிறங்குகின்றன. சென்னை அணி 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், பெங்களூரு இதுவரை 1 முறை கூட பட்டம் வெல்லவில்லை. கோலியும், தோனியும் மோதும் ஆட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளும் இதுவரை விளையாடிய 23 ஆட்டங்களில் சென்னை அணி 15 ஆட்டங்களிலும் ஆர்சிபி 7 ஆட்டங்களிலும் வென்றுள்ளன (ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை). 2014-ல் சிஎஸ்கே அணியைக் கடைசியாகத் தோற்கடித்தது ஆர்சிபி. அதற்குப் பிறகு இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஆறு ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணியே வெற்றி கண்டுள்ளது. 

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி 13 ஆட்டங்களில் (ஏப்ரல் 22, 2013 முதல்) சிஎஸ்கே அணி 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஓர் ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. 2015-ல், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை அணி 158 ரன்கள் எடுத்தது. மும்பை அணி, 19.2 ஓவர்களில் அந்த இலக்கை அடைந்தது. இந்தளவுக்கு சிஎஸ்கே அணிக்குச் சாதகமாக உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சில வருடங்களாகக் குறைவான ஐபிஎல் ஆட்டங்களே நடைபெற்றுள்ளன. 

2014, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் சென்னை சேப்பாக்கத்தில் ஓர் ஐபிஎல் ஆட்டமும் நடைபெறவில்லை. 2018-ல் ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே என கடந்த சில வருடங்களாக ஐபிஎல் அணிகளில் உள்ளூரில் குறைந்த ஆட்டங்களை விளையாடிய அணியாக உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். மேலும் கிரிக்கெட் மீது அதீத காதல் கொண்டுள்ள சென்னை ரசிகர்களுக்கும் இது பேரிழப்புதான். சென்னையில் குறைந்த ஐபிஎல் ஆட்டங்கள், சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று மாடங்களைப் பயன்படுத்த முடியாத நிலை என அவர்களை ஏமாற்றும் பல விஷயங்கள் நடந்துள்ளன. 

சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் உள்ள ஐ, ஜே, கே ஆகிய மாடங்களில் அமர பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதற்கான ஒப்புகைச் சான்றிதழை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பெற்றிருக்கவில்லை. ஆகவே, அந்த 3 பார்வையாளர் மாடங்களில் ரசிகர்கள் அமர அனுமதி இல்லை. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் விதிகளின்படி, மைதானத்தில் உள்ள அந்த பார்வையாளர் மாடங்களுக்கு இடையிலான இடைவெளி 8 மீட்டராக இருக்க வேண்டும். ஆனால், ஐ,ஜே,கே ஆகிய மூன்று மாடங்களுக்கு இடையிலான இடைவெளி 5.4 மீட்டர்களாக மட்டுமே உள்ளது. அதனால், அந்த மாடங்களுக்கு சிஎம்டிஏ அனுமதி வழங்கவில்லை. இந்தப் பிரச்னையால் அந்த மூன்று மாடங்களிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட 12,000 இருக்கைகள் வீணாகின்றன.

இனிமேலாவது எந்தத் தடங்கலும் ஏற்படாமல் சென்னையில் அதிக ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவேண்டும், மூன்று மாடங்களின் பிரச்னைகள் தீரவேண்டும் என எண்ணுவோம். 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விகிதம் 

vs சன்ரைசர்ஸ் 2-0 (100%) 
vs ஆர்சிபி 6-1 (85.71%) 
vs ராஜஸ்தான் 5-1 (83.33) 
vs கொல்கத்தா 6-2 (75%) 
vs தில்லி 5-2 (71.43%) 
vs பஞ்சாப் 3-2 (60%) 
vs மும்பை 2-3 (40%)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com