உங்கள் கால்பந்து கனவை நனவாக்க வேண்டுமா?

தமிழகத்தில் கால்பந்து என்பது மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக இதற்கு முன்பு இருந்ததில்லை.
உங்கள் கால்பந்து கனவை நனவாக்க வேண்டுமா?

தமிழகத்தில் கால்பந்து என்பது மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக இதற்கு முன்பு இருந்ததில்லை. சிறிய சந்து கிடைத்தாலும் அங்கு கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களையும், சிறுவர்களையுமே காண முடியும். ஆனால், இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்), ஐ லீக் ஆகிய உள்ளூர் கால்பந்து போட்டிகளின் வருகையால், கால்பந்து தற்போது பிரபலமடைந்து வருகிறது.

கிரிக்கெட்டில் ஐபிஎல் போல் கால்பந்தில் ஐஎஸ்எல் போட்டிகளைக் காண்பதற்காக தனி ரசிகர்கள் கூட்டம் இங்கே இருக்கிறது. தமிழகத்தை பொருத்தவரை சென்னையிலும், வேறு சில நகரங்களிலும் கால்பந்துக்கு தனி மதிப்பும், அந்த விளையாட்டை வாழ்க்கையாக நினைக்கும் இளைஞர்களும் இருந்து வருகிறார்கள். இருப்பினும், அவர்களுக்கான வாய்ப்புகள் அந்த அளவுக்கு பிரகாசமாக இருந்ததில்லை; இருப்பதுமில்லை.

ஐஎஸ்எல் மற்றும் ஐ-லீக்கில் அதிக எண்ணிக்கையில் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதும் வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பும், ஆதிக்கமும் அதிகமாக இருக்கிறது என்பதையும் நாம் அறிவோம். தனது குடும்பச் சூழல் காரணமாக விளையாட்டை ஒதுக்கி வைத்தவர்களும் இங்கே உண்டு. நிதியுதவி கிடைக்காமல் எந்தவொரு திறமையான கால்பந்து வீரரும் அடையாளம் இல்லாமல் போய்விடக் கூடாது என்ற நோக்கத்தில், கால்பந்தின் மீது தீராக் காதல் கொண்ட சில இளைஞர்களின் முயற்சியால் சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதுதான் எப்சி மெட்ராஸ் அமைப்பு.

திறமையான உள்ளூர் கால்பந்து வீரர்களை இனம் கண்டு அவர்களுக்கு பயிற்சியை அளித்து வரும் சீரிய பணியை மேற்கொண்டு வருகிறது இந்த கிளப்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பெருங்குடியில் கால்பந்து பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறது மெட்ராஸ் எப்சி அமைப்பு. சிக்கிம், மணிப்பூர், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து 32 இளம் மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கால்பந்து பயிற்சியை அளித்து வருகிறது. 13 வயதுக்குள்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும், 15 வயதுக்குள்பட்டவர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஏபிஎல் குளோபல் பள்ளியுடன் இணைந்து இந்த மாணவர்களுக்கு தரமான கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது.

‘கால்பந்தில் ஆர்வமுடைய இளைஞர்களை இனம் கண்டு, அவர்களை தொழில்முறை கால்பந்து வீரர்களாக உருவாக்க வேண்டும் என்பதே இந்த கிளப்பின் லட்சியம்’ என்று கிளப்பை கடந்த 2006-ஆம் ஆண்டு தனது நண்பர் ஜோசப் வாஸýடன் இணைந்து தொடங்கிய அரிந்தம் பிஸ்வாஸ் தெரிவித்தார்.

‘எப்சி மெட்ராஸ் கிளப் சார்பில் அடையாறு, தி.நகர், வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 20 கால்பந்து பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. 21 கால்பந்து பயிற்சியாளர்கள் இந்த கிளப்பில் இருக்கிறார்கள். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இரு சிறுவர்கள் மட்டுமே தொடக்க காலத்தில் இந்தக் கிளப்பில் கால்பந்து பயிற்சி பெற்று வந்தனர். இன்று, சுமார் 500 மாணவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.

கடந்த 2017-ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற போகா ஜூனியர் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் எப்சி மெட்ராஸ் யு-11 (11 வயதுக்குள்பட்டோர்) அணி வெற்றி பெற்றது. யு-13 அணி இரண்டாவது இடம் பிடித்தது.

துரைப்பாக்கத்தில் சர்வதேச தரத்திலான மைதானத்தில் கால்பந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை முழுவதும் 20 சிறந்த மைதானங்களை இந்த கிளப் உருவாக்கியுள்ளது. திறமையான கால்பந்து வீரர்களின் முழு கல்விச் செலவையும் இந்தக் கிளப் ஏற்றுக் கொள்கிறது.

எங்கள் கிளப்பில் பயிற்சி பெறுபவர்களில் பலர் தேசிய அணியிலும், வேறு சில முன்னணி கிளப் அணிகளிலும் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளுக்குள் இடம்பெறுவார்கள்'' என்றார் அரிந்தம்.

எப்சி மெட்ராஸ் கிளப்பை பிரெஷ்ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதமும், ஓய்வுபெற்ற நீதிபதி பத்ம நாபனும் ஆதரித்து வருகின்றனர். பல இளைஞர்களின் மனதிலும் நம்பிக்கை விதையை ஆழ பதித்திருக்கும் எப்சி மெட்ராஸ் கிளப்பின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com