ஸ்பெஷல்

6... 6... 6... : 5-ஆவது முறையாக அற்புதத்தை நிகழ்த்திய பாண்டியா

சுவாமிநாதன்


நியூஸிலாந்துக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்ட்லே பந்தில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து பாண்டியா மிரட்டினார். 

நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெல்லிங்கடனில் இன்று நடைபெற்றது. இதில், 44-ஆவது ஓவரில் ராயுடு ஆட்டமிழந்தவுடன் ஹார்திக் பாண்டியா களமிறங்கினார். இன்னிங்ஸின் கடைசி கட்டம் என்பதால் பாண்டியா அதிரடியாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

பொதுவாகவே சுழற்பந்துவீச்சாளர்கள் பந்தில் சிக்ஸர் அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள ஹார்திக் பாண்டியாவுக்கு, மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளராக ஆஸ்ட்லே பந்துவீசினார். ஆஸ்ட்லே வீசிய 45-ஆவது ஓவரில் அடக்கி வாசித்த பாண்டியா 47-ஆவது ஓவரின் 2, 3 மற்றும் 4-ஆவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பி மிரட்டினார். இந்த போட்டியில் பாண்டியா 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அணிக்கு முக்கிய பங்களிப்பை அளித்தார். அதற்கு அடித்தளமாக அமைந்தது ஆஸ்ட்லே ஓவரில் அவர் அடித்த அந்த ஹாட்ரிக் சிக்ஸர். இந்த போட்டியில் அவர் மொத்தம் 5 சிக்ஸர் அடித்தார். 

ஹாட்ரிக் சிக்ஸர் அடிப்பது பாண்டியாவுக்கு புதிதொன்றும் அல்ல. இதற்கு முன்னதாகவே, அவர் 4 முறை ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்துள்ளார். பேட்ஸ்மேன்களின் பொறுப்பு ரன் குவிப்பது என்றால், பாண்டியாவின் பொறுப்பு ஹாட்ரிக் சிக்ஸர் அடிப்பது என்று தனக்கு தானே இலக்கை நிர்ணயித்து அவர் களமிறங்குகிறாரா என்று தெரியவில்லை.   

முன்னதாக, அவர் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தது: 

  • 2017-இல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இமாத் வாசிம் வீசிய 48-ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இது அந்த இன்னிங்ஸில் கடைசி ஓவர் ஆகும். 
     
  • அதே சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மீண்டும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷதாப் கான் வீசிய  23-ஆவது முதல் 3 பந்துகளில் சிக்ஸர் அடித்து 2-ஆவது முறையாக ஹாட்ரிக் சிக்ஸரை பதிவு செய்தார். இந்த போட்டியில் 76 ரன்கள் எடுத்த பாண்டியா மொத்தம் 6 சிக்ஸர்கள் அடித்தார்.  
     
  • டெஸ்ட் போட்டியிலும் ஹாட்ரிக் சிக்ஸர்: 2017-இல் இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 96 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 108 ரன்கள் எடுத்தார். இதில், அவர் புஷ்பகுமாரா பந்தில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார். இந்த இன்னிங்ஸில் அவர் மொத்தம் 7 சிக்ஸர் அடித்தது குறிப்பிடத்தக்கது.   
     
  • அதே 2017-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில், தோனியுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். ஒருகட்டத்தில் அதிரடிக்கு மாறிய அவர் ஸாம்பா வீசிய 37-ஆவது ஓவரின் 3,4 மற்று் 5-ஆவது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இந்த போட்டியில் 66 பந்துகளில் 83 ரன்கள் குவித்த அவர் மொத்தம் 5 சிக்ஸர்கள் அடித்தார். 
     

இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் சிக்ஸர்களுக்கு பேர்போனவர்கள் என்றால் நவ்ஜோத் சிங் சித்து, சௌரவ் கங்குலி, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா போன்றவர்கள் நினைவுக்கு வருவார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் 5-ஆவது முறையாக ஹாட்ரிக் சிக்ஸர் அடித்துள்ளதால் ஹார்திக் பாண்டியா இந்த வரிசையில் அசாதாரணமாக இணைந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT