நாயகன்..!

கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்ற நற்பெயரை தக்க வைத்துக்கொள்ள காரணமானவர்களில் ஒருவராகத் திகழ்பவர். அதை மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு நினைவூட்டியவர். 
நாயகன்..!

கேன் வில்லியம்ஸன், தற்போது கிரிக்கெட் உலகம் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு பெயர். கிரிக்கெட் ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்ற நற்பெயரை தக்க வைத்துக்கொள்ள காரணமானவர்களில் ஒருவராகத் திகழ்பவர். அதை மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு நினைவூட்டியவர். தோனிக்கு அடுத்தபடியாக அசாதாரண சூழ்நிலைகளிலும் அசராமல் அசட்டு சிரிப்புடன் கடந்து செல்வதில் ''கேப்டன் கூல்'' என்ற மகுடத்தைப் பெற்றவர். 

அணி எவ்வளவு இக்கட்டான நிலையில், தத்தளித்துக்கொண்டிருந்தாலும், தனது ஸ்திரத்தன்மையால் திறம்பட வழிநடத்தி வெற்றி மகுடத்தைச் சூடச் செய்தவர். 2019 உலகக் கோப்பையில், 2 சதங்கள், 2 அரை சதங்கள் உட்பட 82 சராசரியுடன் 578 ரன்கள் குவித்து நியூஸிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேற முக்கிய காரணமாக திகழ்ந்தவர்.

ரன் இயந்திரமாக செயல்படும் வில்லியம்ஸன், இதன்மூலம் ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற புதிய சாதனையை தன்வசப்படுத்திக்கொண்டார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் நியூஸிலாந்து அணியின் நங்கூரமாக நின்றவர். மிக இக்கட்டான ஆட்டங்களில் சற்றும் நிதானம் இழக்காமல் அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் அதிகப்படியான சவால் அளித்த வங்கதேச அணியுடனான லீக் ஆட்டத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 ரன்கள் சேர்த்தார். அடுத்தது ஆப்கானிஸ்தான் உடனான ஆட்டத்தில் 79 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தார். 

பின்னர் தென் ஆப்பிரிக்காவுடனான சவால் நிறைந்த ஆட்டத்தில் 106 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பந்துகள் மீதமிருக்க நியூஸிலாந்து அணிக்கு த்ரில் வெற்றியைப் பெற்றுத்தந்தார். மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் கேன் வில்லியம்ஸனின் இந்த சதம் கிரிக்கெட் வல்லுநர்களால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், மே.இ.தீவுகளுடனான லீக் போட்டியில் 148 ரன்கள் விளாசினார். இதில் மே.இ.தீவுகளின் பிரத்வயிட் எடுத்த மின்னல்வேக சதம் வீணானது. ரன் குவித்தது மட்டுமல்லாமல் மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் அமைதியாக செயல்பட்டு அணியை வில்லியம்ஸன் வழிநடத்திய விதம் தான் கடைசி ஓவரின் கடைசி பந்தில் நியூஸிலாந்து 5 ரன்களில் வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்தது.

பின்னர் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான லீக் ஆட்டங்களில் நியூஸிலாந்து அணி அடுத்தடுத்து தோல்வியடைந்தாலும், வில்லியம்ஸனின் பேட்டிங் மட்டுமே அந்த அணிக்கு கைகொடுத்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் அந்த அணி குறிப்பிட்ட சராசரியை தக்க வைத்துக்கொள்ளவும் முக்கிய காரணமாக அமைந்தது. இதுவே நியூஸிலாந்துக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் பெற்றுத்தந்தது.

இந்த நிலையில், லீக் சுற்றில் மழை காரணமாக மோதாத இந்தியாவும், நியூஸிலாந்தும் அரையிறுதியில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நடப்பு தொடரிலேயே மிகவும் பலமிக்க அணிகளில் ஒன்றாகவும், உலகக் கோப்பையை வெல்லும் அணியாகவும் கருதப்பட்ட இந்தியாவுக்கு இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து கடும் சவால் அளித்தது.

பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அனுபவ வீரர் ராஸ் டெய்லருடன் இணைந்த கேப்டன் கேன் வில்லியம்ஸன் பொறுப்புடன் ஆடி 67 ரன்கள் சேர்த்தார். இதுவே அந்த அணி சவால் அளிக்கும் விதமாக இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயிக்க முக்கிய காரணமாக அமைந்தது. இந்த ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் தோனி, ஜடேஜா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் போதும் சற்றும் பொறுமை இழக்காமல் நியூஸி.க்கு ஊக்கமளிக்கும் விதமாக தனது கேப்டன் பணியை திறம்பட கையாண்டார் கேன் வில்லியம்ஸன். 

இதனால் இரண்டாவது முறையாக இறுதியாட்டம் வரை முன்னேறிய நியூஸிலாந்து 'விதி'யின் சதியால் இம்முறை கோப்பையை இழந்தது. இப்போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் சூப்பர் ஓவர் உட்பட இருமுறை சம அளவில் ரன்கள் எடுக்க, அதிக பவுண்டரிகள் அடித்தவருக்கு தான் வெற்றி என்ற ஐசிசியின் விநோத விதியின் காரணமாக நியூஸிலாந்து கோப்பை இழந்தது. இந்த இக்கட்டான தருணத்திலும், தனது உணர்வுகளை வெளிக்காட்டாமல் சிறு புன்னகையுடன் அனைத்தையும் கடந்து சென்றார் கேன் வில்லியம்ஸன். 

இத்தனைக்கு மத்தியிலும் விதியின் மீது பழிபோடாமல், தங்களுக்கு கிடைத்த இரு வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை என்று தோல்வியை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார். கிரிக்கெட்டில் அனைவரும் உங்களைப் போன்ற ஜென்டில்மேனாக இருக்க வேண்டுமா என நிருபர்கள் கேள்வி எழுப்பிதற்கு, அனைவரும் தன்நிலை மாறாமல் தங்களுக்கான தனித்தன்மையுடன் இருப்பது தான் சிறந்தது. அதுதான் இந்த உலகின் அழகும் கூட. அவரவர் தங்களால் இயன்றவரை சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பதிலளித்து இந்த தொடரின் நாயகனாக மட்டுல்லாமல் கிரிக்கெட்டில் என்றும் ''நாயகன்'' என நிரூபித்தார்.

நாயகன் கேன் வில்லியம்ஸனுக்கு மைதானத்தில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மட்டுமல்லாது அவரது செயல்பாடுகளுக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது என்றால் அது மிகையல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com