இந்திய வாலிபாலுக்கு புதிய உத்வேகம் தருமா புரோ வாலிபால் லீக் 2019?

இந்தியாவில் வாலிபால் விளையாட்டுக்கு புரோ வாலிபால் லீக் (பிவிஎல் 2019) புதிய உத்வேகம் தருமா என அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய வாலிபாலுக்கு புதிய உத்வேகம் தருமா புரோ வாலிபால் லீக் 2019?


இந்தியாவில் வாலிபால் விளையாட்டுக்கு புரோ வாலிபால் லீக் (பிவிஎல் 2019) புதிய உத்வேகம் தருமா என அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நமது நாட்டில் கிரிக்கெட்டுக்கு உள்ள முக்கியத்துவம் ஏனைய விளையாட்டுகளுக்கு இல்லாத நிலை உள்ளது. தேசிய விளையாட்டான ஹாக்கியும், உலகளவில் பிரபலமான கால்பந்தும் இன்னும் தேவையான வளர்ச்சியைப் பெறவில்லை. இதற்கிடையே பிசிசிஐ சார்பில் இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகள் (ஐபிஎல்), ஹாக்கி லீக், புரோ கபடி லீக், பிபிஎல் (பாட்மிண்டன் லீக்) டேபிள் டென்னிஸ் (யுடிடி) உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.
இதனால் அந்தந்த லீக் போட்டிகளில் ஆடும் அணிகளின் வீரர்கள் அவர்களின் திறமை, தகுதிக்கு ஏற்ப அதிக தொகை கொடுத்து ஏலத்தில் பெறப்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருகிறது. மேலும் பிரபலமான அயல்நாட்டு வீரர்களும் லீக் போட்டிகளில் பங்கேற்று ஆடுவதால், நமது இளம் வீரர்களுக்கும் தேவையான அனுபவம் கிடைத்து வருகிறது.
வெளிநாடுகளில் வாலிபாலும் பிரபலமான ஆட்டமாக திகழ்கிறது. ஆசிய அளவில் சீனா, கொரியா, ஜப்பான், ஈரான், கத்தார் போன்ற நாடுகள் பிரபலமாக உள்ளன. மேலும் அமெரிக்கா, பிரேஸில், கியூபா, ஆர்ஜென்டீனா, ரஷியா, போன்றவையும் சர்வதேச அளவில் வலிமையாக உள்ளன.
131-ஆவது இடத்தில் இந்தியா
இந்தியா கடந்த 1952-இல் ரஷியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8-ஆவது இடத்தைப் பெற்றது. ஆசிய அளவில் முதல் 8 இடங்களில் உள்ளது இந்திய அணி.
அதிகபட்சமாக கடந்த 1986 சியோல் ஆசியப் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றது.
இந்திய அணி சர்வதேச தரவரிசையில் தற்போது 131 -ஆவது இடத்தில் உள்ளது.
வாலிபால் ஆட்டத்தை மேம்படுத்த இந்திய வாலிபால் கூட்டமைப்பு (விஎஃப்ஐ) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
புரோ வாலிபால் லீக் 2019
தொழில்முறை வாலிபால் வீரர்களை உருவாக்க ஏதுவாக விஎஃப்ஐ புரோ வாலிபால் லீக் போட்டிகளை பிவிஎல் நடத்த தீர்மானித்தது. வரும் 20ó19 பிப்ரவரி மாதம் முதல் பிவிஎல் ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. முதலில் 2018 அக்போடர் மாதம் தொடங்கப்படுவதாக இருந்த பிவிஎல் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதற்காக பேஸ்லைன் வென்ட்சர்ஸ் என்ற நிறுவனம் லீக் போட்டிகளை நடத்த தேர்வு செய்யப்பட்டது. போட்டிகளை ஒளிபரப்பு சோனி டிவியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்து. சர்வதேச வாலிபால் சம்மேளனமும் இதற்கு ஒப்புதல் தந்துள்ளது.
6 நகர அணிகள்
புரோ வாலிபால் லீக் போட்டியில் மொத்தம் 6 நகரங்களைச் சேர்ந்த அணிகள் இடம் பெறுகின்றன. ஆமதாபாத் டிபன்டர்ஸ் (போன்ஹோமி ஸ்போர்ட்ஸ்), காலிக்கட் ஹீரோஸ் (பீகான் ஸ்போர்ட்ஸ்), சென்னை ஸ்பார்டன்ஸ் (கல்ஸ் குழுமம்), யு மும்பா வாலி (ரோன்னி யு ஸ்போர்ட்ஸ்), ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ் (ஏஜைல் செக்யூரிடிஸ்), கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ் (தாமஸ் முத்தூட்) கேரளம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், கோவா, தமிழகம், புதுச்சேரி, குஜராத் மாநிலங்களில் வாலிபாலுக்கு அதிக வரவேற்பு உள்ளது. மேலும் பஞ்சாப், உத்தரபிரதேசம், தில்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் வாலிபால் பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது. ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டியில் வாலிபாலை இந்தியாவில் லட்சக்கணக்கானோர் கண்டு களித்துள்ளனர்.
பிப்ரவரி 2-இல் தொடக்கம்
கொச்சியில் ராஜிவ்காந்தி உள்விளையாட்டரங்கம், சென்னையில் ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம் என இரண்டு மைதானங்களில் வரும் பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் லீக் போட்டிகள் தொடங்குகின்றன. ஒவ்வொரு அணியிலும் 12 வீரர்கள் (2 அயல்நாட்டு வீரர்கள்) உள்பட ஒரு முன்னோடி இந்திய வீரர், மற்றும் 21 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் 2 வீரர்களும் இடம்பெறுவர். 
லீகில் மொத்தம் 18 ஆட்டங்கள் நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை ரவுண்ட் ராபின் முறையில் மோதும். முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
சோனி டிவி லீகின் அனைத்து 18 ஆட்டங்களையும் தனது சேனல்களில் ஒளிபரப்பும். 
டிச. 14-இல் வீரர்கள் ஏலம்
புரோ வாலிபால் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 14-ஆம் தேதி நடக்கிறது. அதிகபட்சமாக வீரர்களை வாங்குவதற்கு ரூ.75 லட்சம் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறந்த 6 வெளிநாட்டு வீரர்களை எஃப்ஐவிபி உதவியுடன் அழைத்து வர விஎஃப்ஐ நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக வீரர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நல்ல வீரர்களை சிறந்தவிலை கொடுத்து வாங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இரண்டாவது ஏலம் ஜனவரியில் நடைபெறும்.
117 இந்திய வீரர்கள்
வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள பிவிஎல் முதல் ஏலத்துக்கு ஒலிம்பிக் தங்கம் வென்ற டேவிட் லீ தலைமை தாங்குகிறார். ஏலத்துக்காக 117 இந்திய வீரர்கள் 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய முன்னோடி வீரர்களாக அகின், உக்கரபாண்டியன், தீபேஷ், குரீந்தர் சிங், வினித்குமார், ஜெரோம் வினித், எஸ்.பிரபாகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச வீரர்கள் ரூடி வெர்ஹோப் (கனடா), பால் லாட்மேன், கார்ஸன் கிளார்க் (யுஎஸ்ஏ), நோவிகா ஜெலிக்கா (செர்பியா), டோமிஸ்லோவ் காஸ்கோவிக் (துருக்கி).
இதுதொடர்பாக விஎஃப்ஐ வட்டாரங்கள் கூறியதாவது:
பிவிஎல் போட்டிகள் இந்திய வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க சிறந்த வாய்ப்பாக அமையும். இந்த லீக் ஆட்டத்தின் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும்.உலகளவில் சிறந்துள்ள வெளிநாட்டு வீரர்களை நமது நாட்டு வரவழைக்கும் அதே வேளையில் உள்ளூர் வீரர்களின் திறமையும் வெளிப்படும் எனத் தெரிவித்தன.
இந்திய சீனியர் அணியின் கேப்டன் உக்கரபாண்டியன் கூறுகையில்: புரோ வாலிபால் லீக் (பிவிஎல்) மூலம் இளம் வாலிபால் வீரர்களின் திறமை வெளிவரும். அயல்நாட்டு வீரர்களோடு ஆடுவதால் புதிய நுட்பங்கள், ஆட்டத்தின் உத்திகளை அறியலாம். இந்திய வீரர்களும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க இயலும் எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே கடந்த 2011-இல் அறிமுகம் செய்யப்பட்ட இந்தியன் வாலிபால் லீக் (ஐவிஎல்) ஓரே சீசனோடு முடிந்து விட்டது. ஆனால் தற்போது பெரிய வணிக நிறுவனங்கள் கைகோர்த்துள்ளதால் பிவிஎல் சிறந்த வரவேற்பை பெறும் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com