காலிறுதியில் பெல்ஜியம், நெதர்லாந்து

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன.
வெற்றி மகிழ்ச்சியில் பெல்ஜிய வீரர்கள்.
வெற்றி மகிழ்ச்சியில் பெல்ஜிய வீரர்கள்.


உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன.
கடந்த நவ. 28-ஆம் தேதி முதல் புவனேசுவரத்தில் 14-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
திங்கள்கிழமை நடைபெற்ற கிராஸ் ஓவர் ஆட்டங்களில் வென்று பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின. இதன் தொடர்ச்சியாக கடைசி சுற்று கிராஸ் ஓவர் ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
மாலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வலுவான பெல்ஜியமும்-பாகிஸ்தானும் மோதின. உலகின் மூன்றாம் நிலை அணியான பெல்ஜியத்தின் அபார ஆட்டத்துக்கு பாகிஸ்தானால் பதிலளிக்க முடியவில்லை. 
10-ஆவது நிமிடத்தில் அலெக்சாண்டர் ஹெண்ட்ரிக்ஸ் முதல் கோலை அடித்தார். தாமஸ் பிரைல்ஸ் 13-ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார். பின்னர் 27-ஆவது நிமிடத்தில் செட்ரிக் சார்லியர் மூன்றாவது கோலை அடித்தார். முதல் பாதி ஆட்ட முடிவில் பெல்ஜியம் 3-0 என முன்னிலை வகித்தது. 
இரண்டாம் பாதி ஆட்டத்திலும் பெல்ஜிய அணியே ஆதிக்கம் செலுத்தியது. 35-ஆவது நிமிடத்தில் அதன் வீரர் கெளன்கார்ட் அற்புதமாக கடத்தித் தந்த பந்தை பயன்படுத்தி செப் டாக்கியர் நான்காவது கோலை அடித்தார். கடைசி நேரத்தில் பாக். அணி வீரர்கள் ஆட முயன்றாலும், அது விழலுக்கு இறைத்த நீரானது. பெல்ஜியத்தின் 5-ஆவது மற்றும் வெற்றி கோலை 53-ஆவது நிமிடத்தில் டாம் பூன், பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் அடித்தார்.
இறுதியில் பெல்ஜியம் 5-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. வரும் வியாழக்கிழமை நடக்கவுள்ள இரண்டாவது காலிறுதியில் ஜெர்மனியுடன் மோதுகிறது பெல்ஜியம். 4 முறை சாம்பியன் பாகிஸ்தான் சோகத்தோடு வெளியேறியது.
கனடாவை சாய்த்தது நெதர்லாந்து (5-0)
இரவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து-கனடா மோதின. இதில் துவக்கத்தில் கனடா அணி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. எனினும் நெதர்லாந்து வீரர் லார்ஸ் பால்க் முதல் கோலை அடித்தார். பின்னர் 19-ஆவது நிமிடத்தில் ராபர்ட் கெம்பர்மேன் இரண்டாவது கோலை அடித்தார். முதல் பாதி ஆட்ட நிறைவில் நெதர்லாந்து 2-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதி ஆட்டமும் அந்த அணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. வேன் டாம் மூன்றாவது கோலையும், பிரிங்க்மேன் 4-ஆவது கோலையும் அடித்தனர்.58-ஆவது நிமிடத்தில் வெற்றி கோலை அடித்தார் வேன்டாம். இதன் மூலம் 5-0 என நெதர்லாந்து வென்றது.

காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்
புதன்கிழமை காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. முதல் காலிறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவும்-இங்கிலாந்தும், இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும்-பிரான்ஸும் மோதுகின்றன. 
வியாழக்கிழமை நடைபெறும் முதல் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவும்-நெதர்லாந்தும் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனியும்-பெல்ஜியமும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஓய்வு நாளாகும். அரையிறுதி ஆட்டங்கள் 15-ஆம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

தாக்குதல் ஆட்ட பாணியை தொடருவோம்: கேப்டன் மன்ப்ரீத் சிங்
காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதும் நிலையில் இந்திய அணி தனது தாக்குதல் ஆட்ட பணியை தொடரும் என கேப்டன் மன்ப்ரீத் சிங் கூறியுள்ளார். காலிறுதி என்பது வாழ்வா, சாவா ஆட்டமாகும். இரண்டாம் வாய்ப்பு என்பதே இல்லை. வாய்ப்பை தவற விடக்கூடாது. எச்சரிக்கையாக செயல்பட்டு எதிரணிகளுக்கு வாய்ப்புகளை தரக்கூடாது. தாக்குதல் ஆட்டமே நமது பலமாகும். தற்காப்பு ஆட்டம் சில நேரங்களில் சோதனையாக மாறி விடுகிறது. எதிரணிக்கு தொடக்கம் முதலே அழுத்தத்தை உண்டாக்க வேண்டும். அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டால், பதக்கம் வெல்ல முடியும் என்றார்.

இன்றைய ஆட்டம்
காலிறுதி
ஆர்ஜென்டீனா-இங்கிலாந்து, 
மாலை 4.45.
ஆஸ்திரேலியா-பிரான்ஸ், 
இரவு 7.00.
நேரடி ஒளிபரப்பு: 
ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டி.டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com