ஆஸ்திரேலியாவின் ஹாட்ரிக் கனவு கலைந்தது இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து-பெல்ஜியம்

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் பெல்ஜியம் 6-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், நெதர்லாந்து  4-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவையும் சனிக்கிழமை
ஆஸ்திரேலியாவின் ஹாட்ரிக் கனவு கலைந்தது இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து-பெல்ஜியம்

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் பெல்ஜியம் 6-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், நெதர்லாந்து  4-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவையும் சனிக்கிழமை வீழ்த்தின. 
இதையடுத்து பட்டத்துக்கான மோதலில் நெதர்லாந்து-பெல்ஜியம் அணிகள் ஞாயிற்றுக்கிழமை களம் காண்கின்றன. இதில் பெல்ஜியம் அணி உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முதல் முறையாக முன்னேறி வரலாறு படைத்துள்ளது. 
முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பெல்ஜியம். இந்த ஆட்டம் முழுவதையும் பெல்ஜியம் அணியே ஆக்கிரமித்திருந்தது. 
8-ஆவது நிமிடத்திலேயே அந்த அணியின் டாம் பூன் ஃபீல்டு கோல் அடித்து கணக்கை தொடங்கினார். 19-ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்துக்கு கிடைத்தது பெனால்டி கார்னர் வாய்ப்பு. அணியின் சைமன் கெளக்னார்டு அதை தவறாது கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பி, அணியின் கோல் எண்ணிக்கையை 2-ஆக உயர்த்தினார்.
இவ்வாறாக முதல் பாதியில் பெல்ஜியம் 2-0 என முன்னிலையில் இருந்தது. 2-ஆவது பாதியிலும் பெல்ஜியத்தின் கையே ஓங்கியிருந்தது. 42-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் செட்ரிக் சார்லியர் ஃபீல்டு கோல் ஒன்றை அடித்தார்.
தொடர்ந்து 45 மற்றும் 50-ஆவது நிமிடங்களில் கிடைத்த இரு பெனால்டி கார்னர் வாய்ப்புகளை அலெக்ஸாண்டர் ஹென்ட்ரிக்ஸ் தவறின்றி கோலாக்கினார். இதனால் பெல்ஜியம் 5-0 என வேகமாக முன்னேறியது. இறுதியாக, 53-ஆவது நிமிடத்தில் செபாஸ்டியன் டாக்கியர் அடித்த கோலால், அந்த அணி 6-0 என வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவை "ஷூட் அவுட்' செய்த நெதர்லாந்து

ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் மோதிய 2-ஆவது அரையிறுதி ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இதையடுத்து நடைபெற்ற "ஷூட் அவுட்' முறையில் நெதர்லாந்து 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன்மூலம், கடந்த 2014 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது நெதர்லாந்து.
அத்துடன் உலகக் கோப்பை போட்டியில் ஹாட்ரிக் பட்டம் வெல்லும் ஆஸ்திரேலியாவின் கனவையும் தவிடுபொடியாக்கியது. கடந்த 2010, 2014-ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக நடைபெற்ற 2-ஆவது அரையிறுதியில் முதல் பாதிக்குள்ளாகவே நெதர்லாந்து 2-0 என முன்னிலை பெற்றது. அந்த அணியின் கிளென் ஷுர்மன் 9-ஆவது நிமிடத்திலும், செவ் வான் ஆஸ் 20-ஆவது நிமிடத்திலும் ஃபீல்டு கோலடித்தனர்.
விடாது போராடிய ஆஸ்திரேலியா, பிற்பாதியில் 2 கோலடித்து ஆட்டத்தை சமன் செய்து த்ரில் ஆக்கியது. அந்த அணியின் டிம் ஹாவர்டு 45-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார். கடைசி நிமிடத்தில் கேப்டன் எடி ஆக்கென்டன் ஃபீல்டு கோலடித்து நெதர்லாந்துக்கு அதிர்ச்சியளித்தார்.
பின்னர் நடைபெற்ற ஷூட் அவுட் முறையில், 6 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் ஆஸ்திரேலியா 3 கோல்களே அடிக்க, நெதர்லாந்து 4 கோல்கள் அடித்து வென்றது.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதல்: இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.


இன்றைய ஆட்டம்

(வெண்கலப் பதக்கம்)
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா
மாலை 4.30 மணி
(தங்கப் பதக்கம்)
பெல்ஜியம்-நெதர்லாந்து
இரவு 7 மணி
நேரடி ஒளிபரப்பு: 
ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டி.டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com