செய்திகள்

வெளிநாடுகளில் கடைசியில் பேட்டிங் என்றால் நிச்சயம் தோல்வி தானா?: பயமுறுத்தும் புள்ளிவிவரங்கள்!

எழில்

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது.  இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டை 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களுடன் தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க், லயன் தலா 3 விக்கெட்டுகளையும் ஹேஸில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். லயனுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. இதையடுத்து 4 டெஸ்டுகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட், மெல்போர்னில் 26 அன்று தொடங்கவுள்ளது.

இந்தத் தோல்வியையடுத்து டெஸ்ட் ஆட்டத்தின் முடிவின் மூலமாகக் கிடைத்துள்ள புள்ளிவிவரங்கள்:

* வெளிநாடுகளில் இந்த வருடம் விளையாடிய டெஸ்டுகளில் இந்திய அணியால் 6-வது முறையாக இலக்கை எட்டமுடியாமல் போயுள்ளது. இந்த ஆறில் ஐந்து இலக்குகள் 300 ரன்களுக்கும் குறைவானவை. அந்த ஐந்து டெஸ்டுகளிலும் இந்திய அணியால் 70 ஓவர்கள் கூட விளையாடமுடியாமல் போயிருக்கிறது. 

* எந்தவொரு அணியும் ஒருவருடத்தில் இலக்கை எதிர்கொள்ளமுடியாமல் நான்கு முறைக்கு மேல் தோற்றதில்லை. 

* இந்த வருடம் இலக்கை எதிர்கொள்ளமுடியாமல் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் 19.86 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது இந்திய அணி. வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளே இந்த விஷயத்தில் இந்திய அணியை விடவும் மோசமாக விளையாடியுள்ளன.

இலக்குகளும் தோல்விகளும்

கேப்டவுன் - 208 ரன்கள் இலக்கு - இந்திய அணியின் ஸ்கோர் 135
செஞ்சுரியன் - 287 ரன்கள் இலக்கு - இந்திய அணியின் ஸ்கோர் 151
பிர்மிங்ஹம் - 194  ரன்கள் இலக்கு - இந்திய அணியின் ஸ்கோர் 162
செளதாம்ப்டன் -  245 ரன்கள் இலக்கு - இந்திய அணியின் ஸ்கோர் 184 
தி ஓவல் - 464 ரன்கள் இலக்கு - இந்திய அணியின் ஸ்கோர் 345
பெர்த் -  287 ரன்கள் இலக்கு - இந்திய அணியின் ஸ்கோர் 140

* இதுபோன்று இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறபோது முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் உதவுவதேயில்லை. இந்த வருடம் டாப் 3 பேட்ஸ்மேன்களின் சராசரி - 16.27. 18 இன்னிங்ஸில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் யாரும் 20 ரன்களைக் கூடத் தாண்டியதில்லை. விதிவிலக்காக ஒரேயொருமுறை கேஎல் ராகுல் தி ஓவலில் 149 ரன்கள் எடுத்தார். 

* 2003 டிசம்பரில் அடிலெய்ட் டெஸ்டில் இலக்கை வெற்றிகரமாகக் கடந்த இந்திய அணி அதன்பிறகு துணைக்கண்டங்களுக்கு வெளியே 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை ஒருமுறை கூட வெற்றிகரமாக எதிர்கொண்டதேயில்லை. அதுபோன்று சந்தர்ப்பம் கிடைத்த 21 டெஸ்டுகளில் 15-ல் தோற்று, 6 டெஸ்டுகளை டிரா செய்துள்ளது. 

* பெர்த் டெஸ்டில் இந்தியாவின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை விடவும் ஆஸ்திரேலியாவின் கடைசி 3 பேட்ஸ்மேன்கள் நன்கு விளையாடியுள்ளார்கள் என்பது இந்திய ரசிகர்களை மிகவும் கடுப்பேற்றக்கூடியது. ஆனால் அதுதான் உண்மை. 

இந்தியாவின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் - மொத்தமாக 50 ரன்கள்
ஆஸ்திரேலியாவின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் - 242 ரன்கள் 
ஆஸ்திரேலியாவின் கடைசி மூன்று பேட்ஸ்மேன்கள் - 71 ரன்கள்

* ஆஸி. கேப்டன் டிம் பெயினின் முதல் வெற்றி இது. டர்பன் டெஸ்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி விளையாடிய ஆறு டெஸ்டுகளில் ஒன்றில் கூட வெற்றியடையவில்லை. 5 டெஸ்டுகளில் தோற்று ஒரு டெஸ்டை டிரா செய்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகுத் தற்போது டெஸ்ட் வெற்றியை அடைந்துள்ளது.

* இந்த வருடம் அக்டோபர் மாதம், இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து பிறகு அந்த டெஸ்டில் தோற்றது. அதன்பிறகு நடைபெற்ற 13 டெஸ்டுகளில் டாஸ் வென்ற அனைத்து அணிகளும் பேட்டிங்கைத் தேர்வு செய்ததோடு டெஸ்டையும் வென்றுள்ளன. இது பெர்த்திலும் தொடர்ந்துள்ளது. இதனால் சமீபகாலமாக டெஸ்டில் டாஸை வெல்லும் அணி அந்த டெஸ்டையும் வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 

* கேப்டனாக தோல்வி பெற்ற டெஸ்டுகளில் அதிகச் சதமெடுத்தவர்கள்

6 சதங்கள் - விராட் கோலி ( 10 டெஸ்டுகளில் தோல்வி)
5 சதங்கள் - பிரையன் லாரா (26 டெஸ்டுகளில் தோல்வி)
4 சதங்கள் - ஸ்டீவ் வாஹ் (9 டெஸ்டுகளில் தோல்வி)

ஒரு டெஸ்டில் இந்திய அணியின் 8-11 நிலை பேட்ஸ்மேன்கள் எடுத்த குறைந்தபட்ச ரன்கள்

5 ரன்கள் - vs ஆஸ்திரேலியா, மெல்பர்ன் 2003
11 ரன்கள் - vs ஆஸ்திரேலியா, பெர்த் 2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT