விளையாட்டாக அங்கீகரிக்கப்படா விட்டாலும், தில்லிப் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் யோகாவுக்குத் தனி இடங்கள் ஒதுக்கீடு!

உலகமே யோகாவை அங்கீகரித்துள்ளது. இங்கு மட்டும் ஏன் இது சர்ச்சையாக மாறுகிறது எனப் புரியவில்லை...
விளையாட்டாக அங்கீகரிக்கப்படா விட்டாலும், தில்லிப் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் யோகாவுக்குத் தனி இடங்கள் ஒதுக்கீடு!

யோகா என்பது விளையாட்டுத்துறையைச் சார்ந்ததா?

இல்லை என்கிறது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம். எனினும் தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 11 கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவில் யோகா-வுக்கென தனியாகச் சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

2015-ல் மத்திய அரசு, யோகா-வை விளையாட்டுகளில் ஒன்றாக அங்கீகரித்தது. இதன்பிறகு இந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. யோகாவில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் போட்டிகள் நடத்துவது சாத்தியமில்லை. எனவே யோகாவை விளையாட்டுகளில் ஒரு பிரிவாக அங்கீகரிக்க முடியாது என 2016 டிசம்பரில் தன் நிலையை விளக்கியது மத்திய அரசு. மேலும் யோகா குறித்த அனைத்து விஷயங்களையும் ஆயுஷ் நிறுவனமே மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தது. 

எனினும் தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகள், யோகாவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து அதன் கீழ் சிறப்பு இடங்களை ஒதுக்கீடு செய்கின்றன. இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம், தில்லி பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. அதற்குக் கிடைத்த பதில்:

ஆமாம். விளையாட்டு ஒதுக்கீட்டுப் பிரிவில் யோகாவும் இடம்பெற்றுள்ளது. கடந்த வருடம் 19 கல்லூரிகள் யோகாவை விளையாட்டு ஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் சேர்த்து இடங்களை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்தன. விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்கும் முடிவுகள் கல்லூரிகள் வசமே உள்ளன என்று தில்லிப் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை கவுன்சிலின் இயக்குநர் அனில் கல்கால் தெரிவித்துள்ளார். தில்லிப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் விளையாட்டு ஒதுக்கீட்டுப் பிரிவில் மாணவர்களைச் சேர்க்கும் தேர்வுப் போட்டிகளை (trials) இந்த கவுன்சிலே நடத்துகிறது. 

எந்த விளையாட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்கிற முடிவுகளை கல்லூரிகளே எடுக்கின்றன. இந்த விளையாட்டைத்தான் அங்கீகரிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் சொல்லமுடியாது. யோகா உள்ளிட்ட விளையாட்டுகள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் அங்கீகாரம் பெறாதவை என்றும் அனில் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியதாவது: இந்தியப் பல்கலைக்கழங்களின் சங்கம் (Association of Indian Universities (AIU), யோகாவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. இந்தச் சங்கம்தான் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளை நடத்துகிறது. யோகாவுக்கு அங்கீகாரம் இல்லையென்றால் இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் எதற்காக யோகா போட்டியை நடத்துகிறது?

யோகா ஒரு விளையாட்டு இல்லை, அதற்குப் போட்டிகள் நடத்தப்படாது என்று அந்தச் சங்கம் அறிவித்துவிட்டால் நாங்களும் விளையாட்டுப் பிரிவின் கீழ் கல்லூரி இடங்களை ஒதுக்கீடு செய்யும்போது அதில் யோகாவைச் சேர்க்க மாட்டோம். கல்லூரிகள் யோகாவின் கீழ் இடங்களை ஒதுக்கீடு செய்ய விரும்பும்போது நாங்கள் என்ன செய்யமுடியும்? தேர்வுப் போட்டிகளை நடத்தித்தான் ஆகவேண்டும். யோகாவின் கீழ் ஏன் மாணவர்களைச் சேர்க்கிறீர்கள் என்று கல்லூரிகளைக் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.  

ஆனால் யோகாவுக்கென தனி ஒதுக்கீடு செய்யும் கல்லூரிகள், தில்லிப் பல்கலைக்கழகம் பக்கம் பிரச்னையைத் திருப்புகின்றன. 

தில்லிப் பல்கலைக்கழகம், இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகிய இரண்டையும் நிர்வாக அமைப்புகளாகக் கருதுகிறோம். யோகாவை விளையாட்டாகப் பட்டியலிடுவதால் நாங்களும் அதைப் பின்பற்றுகிறோம். யோகாவுக்கென தேர்வுப் போட்டிகளை நடத்தமுடியாது என தில்லிப் பல்கலைக்கழகம் சொல்லிவிட்டால் நாங்கள் ஏன் மாணவர்களை அப்பிரிவின் கீழ் சேர்க்கப்போகிறோம் என்று ஹன்ஸ்ராஜ் கல்லூரியைச் சேர்ந்த எம்.பி. சர்மா பேட்டியளித்துள்ளார். 

ஆனால், இந்தியப் பல்கலைக்கழங்களின் சங்கமும் யோகாவை ஒரு விளையாட்டாகக் கருதவில்லை என்று கூறியுள்ளது. பிறகு ஏன் போட்டிகளை நடத்துகிறார்கள்?

உடலையும் மனத்தையும் நன்குப் பராமரிக்க யோகா உதவுகிறது. இதை நாங்கள் விளையாட்டாக எண்ணவில்லை, அங்கீகரிக்கவில்லை. எனினும் திறமைகளை அங்கீகரிக்கவும் மேம்படுத்தவும் நாங்கள் யோகாவுக்கான போட்டிகளை நடத்துகிறோம். தில்லிப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு ஒதுக்கீடுக்கும் எங்களுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. தில்லிப் பல்கலைக்கழகம் தங்களுடைய சட்டவிதிகளைப் பின்பற்றுகிறது. நாங்கள், மாணவர்களின் நலனுக்காக இப்போட்டியை நடத்துகிறோம். உலகமே யோகாவை அங்கீகரித்துள்ளது. இங்கு மட்டும் ஏன் இது சர்ச்சையாக மாறுகிறது எனப் புரியவில்லை  என்று அச்சங்கத்தின் இணைச் செயலர் குர்தீப் சிங் கூறியுள்ளார்.

விளையாட்டு ஒதுக்கீட்டீன் கீழ் யோகாவையும் சேர்த்துக்கொண்டால், ஒலிம்பிக் அங்கீகரித்துள்ள விளையாட்டுகளில் ஈடுபடும் வீரர்கள் பலரும் இதனால் பாதிக்கப்படுவார்கள், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை இழக்க நேரிடும் என தில்லிப் பல்கலைக்கழகத்தின் பேராசியரான ராஜேஷ் ஜா கூறியுள்ளார். 

எனினும் இந்த வருடமும் ஹன்ஸ்ராஜ், கர்கி உள்ளிட்ட பல கல்லூரிகள் யோகாவுக்கான தேர்வுப்போட்டிகளை நடத்த தில்லிப் பல்கலைக்கழகத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளன. கடந்த வருடம் போல இந்த வருடமும் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் யோகாவில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களையும் கல்லூரியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com