நஷ்ட ஈடு விவகாரம்: இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களிடம் ஐசிசி நாளை விசாரணை

 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ மீது சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலில் குற்றம்சாட்டியது.
நஷ்ட ஈடு விவகாரம்: இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களிடம் ஐசிசி நாளை விசாரணை

இந்தியா, பாகிஸ்தான் இடையே திட்டமிட்டபடி கிரிக்கெட் தொடர்களை நடத்தவில்லை. இதுதொடர்பாக 2014-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2015-ஆம் ஆண்டு முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே 6 தொடர்களை நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இவற்றில் 4 தொடர்களை பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்கள் தொடர்பாக இந்திய அரசு அனுமதி அளிக்காத காரணத்தால் அவற்றில் பங்கேற்க முடியாது என பிசிசிஐ மறுத்துவிட்டது.

ஆனால், பாகிஸ்தானில் விளையாட முடியவில்லை என்றால் இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் இத்தொடர்களை நடத்தலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கு சம்மதிக்கவில்லை.

இதன்காரணமாக, 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ மீது சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலில் குற்றம்சாட்டியது. மேலும் இதுதொடர்பாக ஐசிசி மற்றும் பிசிசிஐ-க்கு பிசிபி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

இந்நிலையில், இதுதொடர்பாக ஐசிசி தலைமையகத்தில் 3 நாட்கள் விசாரணை நடைபெறவுள்ளது.  இதில் ஐசிசி-யைச் சேர்ந்த மைக்கெல் பெலாஃப் க்யூசி, ஜேன் பால்சன் மற்றும் டாக்டர் அன்னபெல் பென்னட் ஆகிய 3 அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் விசாரிக்க உள்ளது. 

இதில், இந்திய தரப்பில் துபையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹெர்பெட் ஸ்மித் ஃப்ரீஹில்ஸ், பிரிட்டன் வழக்கறிஞர் க்யூசி இயன் மில்ஸ் மற்றும் பாகிஸ்தான் தரப்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதி கவாஜா அகமது ஹுசைன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வழக்கறிஞர் சல்மான் நாசர், லண்டனைச் சேர்ந்த க்ளிஃபோர்ட் சான்ஸ் ஆகியோர் வாதிட உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com