இந்தியா - பாகிஸ்தான் மோதல்: வரலாற்றைப் புரட்டிப் போட்ட மியாண்டடின் கடைசிப் பந்து சிக்ஸர்!

கடைசிப் பந்தில் சேட்டன் சர்மா பந்தில் மியாண்டட் சிக்ஸர் அடித்த தினம் அது. இந்திய ரசிகர்கள் கதறிய தினம் அது...
இந்தியா - பாகிஸ்தான் மோதல்: வரலாற்றைப் புரட்டிப் போட்ட மியாண்டடின் கடைசிப் பந்து சிக்ஸர்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ஏப்ரல் 18, 1986 என்கிற நாளை மறக்கவேமுடியாது. 

கடைசிப் பந்தில் சேட்டன் சர்மா பந்தில் மியாண்டட் சிக்ஸர் அடித்த தினம் அது. இந்திய ரசிகர்கள் கதறிய தினம் அது.

ஆஸ்ட்ரல் - ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தாலும் சுனாமி போல இந்திய அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்தார் மியாண்டட். சதம் அடித்திருந்த அவர், கடைசிப் பந்தில் 4 ரன்கள் அடித்தால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றுவிடலாம் என்றொரு இக்கட்டான நிலைமை உருவானது. 

சேட்டன் சர்மா வீசிய ஃபுல்டாஸை சிக்ஸருக்கு அனுப்பி வெறித்தனமாக தனது வீரர்களை நோக்கி ஓடினார் மியாண்டட். அன்று முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குப் புதிய வரலாறை எழுதினார். இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்கள் பரபரப்பாகவும் எதிர்பார்ப்புடனும் அமைய மியாண்டடின் அந்த சிக்ஸர்தான் முதன்மையான காரணம். 

2018 ஆசியக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள இந்திய-பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. அதனையொட்டி மியாண்டடின் சிக்ஸ், எந்தளவுக்கு இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பார்க்கலாம்.

*

அதற்கு முன்பு பாகிஸ்தானுடனான ஆட்டம் என்றால் வென்றுவிடலாம் என்கிற நம்பிக்கை இந்திய அணிக்கு  இருக்கும். இந்த நிலையை ஒரு சிக்ஸர் மூலம் மாற்றிக்காட்டினார் மியாண்டட். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கே அந்த ஒரு சிக்ஸர் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். 

கடைசிப் பந்து சிக்ஸுக்கு முன்பு இந்தியா - பாகிஸ்தான் மோதல்கள்

ஆட்டங்கள்: 16
இந்தியாவின் வெற்றிகள்: 8
பாகிஸ்தானின் வெற்றிகள்: 7
முடிவில்லை - 1

அடுத்தப் பத்து வருடங்களில் நிலைமை தலைகீழானது. மியாண்டட் அடித்த சிக்ஸரால் பாகிஸ்தான் வீரர்களுக்கு அதற்குப் பிறகுக் கூடுதல் நம்பிக்கை பிறந்தது. 

கடைசிப் பந்து சிக்ஸுக்குப் பிறகு:  ஏப்ரல் 18, 1986 முதல் மார்ச் 09, 1996 வரை

ஆட்டங்கள்: 26
இந்தியாவின் வெற்றிகள்: 5
பாகிஸ்தானின் வெற்றிகள்: 20
முடிவில்லை - 1

அதாவது அந்த சிக்ஸுக்குப் பிறகு இரு அணிகளும் விளையாடிய 26 ஆட்டங்களில் 20-ல் வென்றுள்ளது பாகிஸ்தான் அணி. இந்திய அணியைப் புரட்டிப் போட்டார்கள் என்றும் சொல்லலாம். 

*

இந்தியா - பாகிஸ்தான் மோதல்கள்

மொத்தமாக

இந்தியாவின் வெற்றிகள்: 52
பாகிஸ்தானின் வெற்றிகள்: 73

ஆசியக் கோப்பை

இந்தியாவின் வெற்றிகள்: 5
பாகிஸ்தானின் வெற்றிகள்: 5

ஐக்கிய அமீரகத்தில்

இந்தியாவின் வெற்றிகள்: 7
பாகிஸ்தானின் வெற்றிகள்: 19

ஒருநாள் உலகக்கோப்பை

இந்தியாவின் வெற்றிகள்: 6
பாகிஸ்தானின் வெற்றிகள்: 0

சாம்பியன்ஸ் டிராபி

இந்தியாவின் வெற்றிகள்: 2
பாகிஸ்தானின் வெற்றிகள்: 3

2010-க்குப் பிறகு

இந்தியாவின் வெற்றிகள்: 7
பாகிஸ்தானின் வெற்றிகள்: 4

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com