8 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னையில் புதிய உலக சாதனை படைத்த இடக்கை சுழற்பந்துவீச்சாளர்!

8 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னையில் புதிய உலக சாதனை படைத்த இடக்கை சுழற்பந்துவீச்சாளர்!

இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கும் 29 வயது ஷபாஸ் நதீம்...

இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கும் 29 வயது ஷபாஸ் நதீம் இன்று புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

ஜார்கண்ட் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே போட்டி சென்னையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 10-வது ஓவரின் கடைசிப் பந்தில்தான் முதல் விக்கெட் விழுந்தது. அதன் பிறகு விக்கெட் மழைதான். அதிலும் முதல் 8 விக்கெட்டுகளையும் இடக்கை சுழற்பந்துவீச்சாளர் ஷபாஸ் நதீம் வீழ்த்தி அசத்தினார்.  8-3-9-8 என்று ஒருகட்டத்தில் நதீம் பந்துவீச்சின் நிலைமை இருந்தது. இதனால் அவர் மீதமுள்ள 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 10 விக்கெட்டுகளுடன் மகத்தான சாதனை படைப்பாரா என்கிற ஆவல் ஏற்பட்டது. ஆனால் கடைசி இரு விக்கெட்டுகளை அனுகுல் ராய் வீழ்த்தினார்.

10 ஓவர்கள் வீசி 4 மெயிடன்களுடன் 10 ரன்கள் மட்டும் கொடுத்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தி உலக சாதனை படைத்தார் நதீம். இந்த எளிதான இலக்கை ஜார்க்கண்ட் அணி, 3 விக்கெட் இழப்புகளுடன் 14.3 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

நதீமின் 8/10 என்பது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சாகும். 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சமிந்தா வாஸ், மைக்கேல் ஹோல்டிங், டெரெக் அண்டர்வுட், நதீம் ஆகியோர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர், வாஸ் மட்டுமே. 

இந்திய ஏ அணியில் தொடர்ந்து இடம்பிடித்து சிறப்பாக விளையாடி வரும் நதீம், இதற்குப் பிறகு இந்திய அணியிலும் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் சிறந்த பந்துவீச்சு

8/10 ஷபாஸ் நதீம் (ஜார்கண்ட் vs ராஜஸ்தான்)
8/15 ராகுல் சங்வி (தில்லி vs ஹிமாசல் பிரதேசம்)
8/19 சமிந்தா வாஸ் (இலங்கை vs ஜிம்பாப்வே)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com