சூப்பர் ஃபோர்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மீண்டும் மோதல்; இறுதிச் சுற்று வாய்ப்பை உறுதி செய்ய போராட்டம்

ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
சூப்பர் ஃபோர்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மீண்டும் மோதல்; இறுதிச் சுற்று வாய்ப்பை உறுதி செய்ய போராட்டம்

ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இரு அணிகளும் சந்திக்கின்றன.
 ஐக்கிய அரபு நாடுகளின் துபை, அபுதாபியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. சூப்பர் ஃபோர் பிரிவுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றுள்ளன. சூப்பர் ஃபோர் பிரிவில் அனைத்து அணிகளும் ஒருமுறை மற்றொரு அணியுடன் மோத வேண்டும். தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை, இந்தியாவும், அபுதாபியில் நடந்த ஆட்டத்தில் ஆப்கனை, பாகிஸ்தானும் வென்றன. சனிக்கிழமை ஓய்வு நாளாகும்.
 இதன் தொடர்ச்சியாக வைரிகளான இந்திய-பாக். அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
 ஏற்கெனவே ஏ பிரிவு ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாக். அணியை நொறுக்கியது இந்தியா. ஆனால் ஹாங்காங்குடன் நடந்த ஆட்டத்தில் போராடி தான் இந்தியா வெல்லும் நிலை ஏற்பட்டது.
 பாக்.குடன் முதல் ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டால் அந்த அணி 162 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் ரோஹித்-ஷிகர் தவன் இணை சிறப்பாக ஆடி வெற்றிக்கு வித்திட்டனர். விராட் கோலி இல்லாத நிலையிலும் இந்திய அணி நம்பிக்கையுடன் ஆசிய கோப்பை போட்டியை எதிர்கொண்டு வருகிறது.
 இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவதை உறுதி செய்யும் முக்கிய ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்தியாவில் தொடக்கம் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் ஓரளவு வலுப் பெற்றுள்ளது. அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி ஆகியோர் தங்கள் பொறுப்பை உணர்ந்து ஆடி வருகின்றனர்.
 ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா காயத்தால் விலகிய நிலையில் அணியில் சேர்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா தனது சேர்க்கையை நியாயப்படுத்தி உள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக 4 விக்கெட்டை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சில் பும்ரா, புவனேஸ்வர் சரியான அளவில் வீசி வருகின்றனர்.
 சுழற்பந்து வீச்சாளர்கள் சஹால், குல்தீப் யாதவ், கேதார் ஆகியோரும் தங்கள் பந்துவீச்சால் எதிரணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
 அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர் பாக்கர் ஸமான் இதுவரை சோபிக்கவில்லை. இமாம் உல் ஹக், பாபர் ஆஸம் ஆகியோர் தங்களது பார்மை மீண்டும் பெற்றுள்ளனர்.
 அதே நேரத்தில் மூத்த வீரர் ஷோயிப் மாலிக் அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக ஆடி வருகிறார். கேப்டன் சர்ஃப்ராஸ் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். பந்துவீச்சிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மந்தமான நிலையிலேயே உள்ளது.
 இந்த ஆட்டத்தில் வென்று இறுதிச் சுற்று வாய்ப்பை உறுதி செய்ய இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் பரபரப்பாக இருக்கும்.
 ஷிகர் தவன் புதிய சாதனை: அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார்
 இந்திய அணியில் ஓரே இன்னிங்ஸில் அதிக கேட்ச்சுகள் பிடித்தவர் பட்டிலில் இணைந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
 துபையில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்குடன் சற்று தடுமாறி வென்ற இந்திய அணி அதன் பின்பு பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு எதிராக அபாரமாக விளையாடி வென்றது.
 பேட்ஸ்மேன்கள், பெüலர்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்த நிலையில் ஆட்டத்தின் வெற்றிக்கு பீல்டர்களும் முக்கிய பங்கு வகித்தனர்.
 இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் சரிவர சோபிக்காத ஷிகர் தவன் ஆசிய கோப்பையில் பேட்டிங்கிலும் சரி, பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் ஃபோர் ஆட்டத்தில் நஸ்முல் உசேன், ஷகிப், மெஹிதி, முஸ்தபிஸுர் ஆகியோர் கேட்சுகளை பிடித்து அவுட்டாக்கினார். இதன் மூலம் ஓரே இன்னிங்ஸில் 4 கேட்ச்சுகளை பிடித்த இந்திய வீரர் என்ற சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
 கவாஸ்கர், சச்சின், திராவிட், கைப்,அஸாருதீன், விவிஎஸ்.லக்ஷ்மண் ஆகியோர் இப்பட்டியலில் ஏற்கெனவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com