தவறான எல்பிடபிள்யூ முடிவுக்கு ஆதரவளித்தாரா மூன்றாம் நடுவர்?: இந்தியா -நியூஸி டி20 ஆட்டத்தில் சர்ச்சை!

மூன்றாம் நடுவர் முடிவு தெரிவித்தபிறகு அதை மாற்றமுடியாது என்பதால்...
தவறான எல்பிடபிள்யூ முடிவுக்கு ஆதரவளித்தாரா மூன்றாம் நடுவர்?: இந்தியா -நியூஸி டி20 ஆட்டத்தில் சர்ச்சை!

எதற்காகத் தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டதோ அதன் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு சம்பவம் இந்தியா - நியூஸிலாந்து மோதிய டி20 ஆட்டத்தில் நடைபெற்றுள்ளது.

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். 6-வது ஓவரின் கடைசிப் பந்தில் கிருனாள் பாண்டியாவின் பந்தை எதிர்கொண்டார் மிட்செல். அப்போது, பந்து காலில் பட்டதால் அவர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். உடனே அவர் கள நடுவரின் முடிவை டிஆர்எஸ் மூலம் மேல்முறையீடு செய்தார். அப்போது காண்பிக்கப்பட்ட ஹாட்ஸ்பாட் காட்சியில் பந்து பேட்டின் பின்னால் உரசிச் சென்றது நன்குத் தெரிந்தது. இதனால் கள நடுவரின் முடிவை மூன்றாம் நடுவர் மாற்றியமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்னிக்கோ காட்சியில் அதுபோல துல்லியமாக வெளிப்படவில்லை. பந்து பேட்டை உரசாததுபோலவும் இருந்தது. இதனால் மூன்றாம் நடுவருக்கு ஹாட்ஸ்பாட் காண்பித்த காட்சியில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து களநடுவரின் முடிவை ஏற்கும் விதத்தில் மிட்செல் ஆட்டமிழந்ததாக அறிவித்தார். 

இந்தக் காட்சிகளை மைதானத்தில் உள்ள பெரிய திரையில் பார்த்த மிட்செலும் கேப்டன் வில்லியம்சனும் ஆச்சர்யமடைந்தார்கள். உடனே இதுகுறித்து நடுவர்களிடம் முறையிட்டார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் பரபரப்படைந்தார்கள். இந்த நிலைமையில் இந்திய வீரர்களும் குழப்பமடைந்தார்கள். நடுவர்கள் ஒருவருக்கொருவர் விவாதித்தார்கள். மூன்றாம் நடுவர் முடிவு தெரிவித்தபிறகு அதை மாற்றமுடியாது என்பதால் மிட்செல்லை இறுதியாக வெளியேறச் சொன்னார்கள். இந்த நிலையில் அப்பீலை ரோஹித் சர்மா வாபஸ் வாங்குவாரா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. கடைசியில் வேறு எதுவும் செய்ய இயலாது என்பதால் மிகுந்த ஏமாற்றத்துடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார் மிட்செல்.  

இதனிடையே, ஹாட்ஸ்பாட் காண்பிப்பதை உறுதியாக நம்பமுடியாது. அதன் முடிவை ஸ்னிக்கோ உறுதியாகத் தெரிவிக்காததால் தான் மூன்றாம் நடுவர் மிட்செல்லை அவுட் என அறிவித்தார் என்றும் கருத்துகள் நிலவுகின்றன. மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் ஏற்படும் சந்தேகங்களைக் களைவதற்காகத்தான் டிஆர்எஸ் என்கிற தொழில்நுட்பம் அறிமுகமானது. ஆனால் அதனால் ஏற்படும் குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com