இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம் பிடிப்பாரா?: பயிற்சியாளர் பதில்!

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறையின்படி இங்கிலாந்து அணியில் விளையாட அடுத்த மாதம் முதல் தகுதி பெறவுள்ளார் 23 வயது ஆர்ச்சர்... 
இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம் பிடிப்பாரா?: பயிற்சியாளர் பதில்!

இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் ஜோஃப்ரா ஆர்சரைச் சேர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: கடந்த மூன்று, நான்கு வருடங்களாக கிட்டத்தட்ட ஒரே மாதிரியான 17 வீரர்களைக் கொண்டே இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. உலகக் கோப்பை அணிக்கான 15 பேரில் ஜோஃப்ரா ஆர்ச்சரை அணியில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. இந்த முடிவு புதிரின் கடைசிக்கட்டமாக உள்ளது என்று கூறியுள்ளார். 

கடந்தவருட ஐபிஎல் ஏலத்தில், ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ. 7.20 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. இதுவரை எந்தவொரு சர்வதேச ஆட்டத்திலும் விளையாடாமல் டி20 லீக் போட்டிகளிலும் கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியே புகழ்பெற்றுள்ளார் ஜோஃப்ரா.

இவர் ஏன் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பது சுவாரசியமான கதை.

மேற்கிந்தியத் தீவுகளின் ஒன்றான பார்படாஸில் பிறந்த ஜோஃப்ரா ஆர்ச்சரின் தாய் மேற்கிந்தியத் தீவுகள் பகுதியைச் சேர்ந்தவர். தந்தையின் தாய்நாடு இங்கிலாந்து. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுவதற்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் விளையாடவே விருப்பம் கொண்டார் ஆர்ச்சர். அவருக்கு முன்பு மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கிறிஸ் ஜார்டன், பிறகு இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். அவர்தான் ஆர்ச்சருக்குப் பெரிய ஊக்கமாக இருந்தார். 2013-ல் பத்தொன்பது வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பிடித்தார் ஆர்ச்சர். பிறகு காயமடைந்ததால் அவரால் பார்படாஸ் அணியில் தொடர்ந்து நீடிக்கமுடியவில்லை. தனக்கான ஊக்கம் கிடைக்காமல் இருந்த நிலையில் அவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தார் கிறிஸ் ஜார்டன்.

பார்படாஸ் அணியின் வலைப்பயிற்சியில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சைக் கண்ட ஜார்டன், இங்கிலாந்து கவுண்டி அணியான சஸ்ஸக்ஸ் நிர்வாகத்தினரிடம் ஆர்ச்சரைப் பற்றிக் கூறினார். இதையடுத்து சஸ்ஸக்ஸ் அணியில் ஆர்ச்சர் இடம்பிடித்தார். 2016-ல் அந்த அணிக்காக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடினார். வேகப்பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாகவும் விளையாடியதால் அதிகக் கவனம் பெற்றார். அவரை டி20 கிளப்புகள் மொய்க்க ஆரம்பித்தன. ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ், பங்களாதேஷ் பிரிமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என முக்கியமான டி20 போட்டிகளில் விளையாடியவர், கடந்த வருடம் ஐபிஎல் போட்டியிலும் அறிமுகமானார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறையின்படி இங்கிலாந்து அணியில் விளையாட அடுத்த மாதம் முதல் தகுதி பெறவுள்ளார் 23 வயது ஆர்ச்சர். 

கிரிக்கெட் உலகின் பெரிய போட்டியாக உள்ளது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையாகும். கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை நடக்கிறது.  இதில் மொத்தம் 10 அணிகள் குரூப் பிரிவில் ரவுண்ட் ராபின் முறை ஆட்டங்களில் பங்கேற்கும். முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஜூலை 14-இல் இறுதி ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

முதல் 3 உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்திலேயே நடைபெற்றன. அதன்பிறகு 1999-ல் நடைபெற்றது. உலகக் கோப்பை சாம்பியன் போட்டிகளை அதிக முறை நடத்தியும், 1979, 1987, 1992-ஆம் ஆண்டு இறுதிச் சுற்றுக்கும் முன்னேறிய இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பை பட்டம் எட்டாகக் கனியாகவே உள்ளது. தற்போது ஒருநாள் ஆட்ட தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ள நிலையில் சொந்த மண்ணில் பட்டம் வெல்ல காத்திருக்கிறது. மொர்கன், ஜோ ரூட், ஜேஸன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர், போன்ற அதிரடி வீரர்களுடன் உள்ளது இங்கிலாந்து. வரும் மே. 30-இல் இங்கிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் இடையே லண்டன், கென்னிங்டன் ஓவலில் தொடக்க ஆட்டம் நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com