46 சிக்ஸர்கள் அடித்த இங்கிலாந்து - மே.இ. அணிகள்: பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி கண்ட இங்கிலாந்து!

இங்கிலாந்து 418 ரன்களும் மே.இ. அணி 389 ரன்களும் எடுத்தன. இதை விட கொண்டாட்டமான தினம் ஒரு ரசிகனுக்குக் கிடைக்காது...
46 சிக்ஸர்கள் அடித்த இங்கிலாந்து - மே.இ. அணிகள்: பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி கண்ட இங்கிலாந்து!

ஒருநாள் ஆட்டத்தைப் பார்க்க மைதானம் செல்கிறீர்கள். அதிகபட்சமாக எத்தனை சிக்ஸர்களைப் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்? 5 சிக்ஸர்களைப் பார்த்தாலே அன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் என எண்ணிக்கொள்ளலாம். 

ஆனால் கிரனடாவில் நேற்று நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் - இங்கிலாந்து இடையிலான ஆட்டத்தில் 46 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இங்கிலாந்து அணி 24 சிக்ஸர்களும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 22 சிக்ஸர்களும் அடித்தன. இங்கிலாந்து 418 ரன்களும் மே.இ. அணி 389 ரன்களும் எடுத்தன. இதை விட கொண்டாட்டமான தினம் ஒரு ரசிகனுக்குக் கிடைக்காது.

டாஸ் வென்ற மே.இ. அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நம்பமுடியாத அளவுக்கு சிக்ஸர் மழை பொழிந்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான பேர்ஸ்டோவும் ஹேல்ஸும் அதிரடியாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்தார்கள். பேர்ஸ்டோவ் 56 ரன்களும் ஹேல்ஸ் 82 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். அதன்பிறகுதான் ஆட்டம் மேலும் களைகட்டத் தொடங்கியது. கேப்டன் மார்கனும் விக்கெட் கீப்பர் பட்லரும் சதங்கள் அடித்து இங்கிலாந்து அணி 400 ரன்கள் தாண்ட பேருதவி செய்தார்கள். மார்கன் 88 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 103 ரன்களும் பட்லர் 77 பந்துகளில் 12 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 150 ரன்களும் எடுத்தார்கள். 

இந்த இமலாய ஸ்கோரை கடைசிவரை விரட்டியது மே.இ. அணி. கிறிஸ் கெயில் மீண்டும் சிக்ஸர் சரவெடி வெடித்தார். அவர் 97 பந்துகளில் 14 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 162 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியைப் பயங்கரமாக மிரட்டினார். அவர் ஆட்டமிழந்தபோது மே.இ. அணி 34.1 ஓவர்களில் 295 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வெயிட் 50 ரன்களும் நர்ஸ் 43 ரன்களும் எடுத்து இலக்கின் மிக அருகில் சென்றார்கள். ஆனால் மே.இ. அணி 6 விக்கெட் இழப்புக்கு 387 ரன்களுடன் 18 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்கிற நிலையில் இருந்தபோது ஆட்டத்தில் மிகப்பெரியத் திருப்பத்தைக் கொண்டுவந்தார் ரஷித்.

அவர் தன்னுடைய கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மே.இ. அணி கனவு வெற்றியைத் தகர்த்தார். நர்ஸ், பிராத்வெயிட், பிஷூ, தாமஸ் என நால்வரும் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்கள். இதனால் மே.இ. அணி 48 ஓவர்களில் 389 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடுமையாகப் போராடிய மே.இ. அணி கடைசியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இங்கிலாந்துத் தரப்பில் ரஷித் 5 விக்கெட்டுகளும் வுட் 4 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. கடைசி ஒருநாள் ஆட்டம் சனியன்று நடைபெறவுள்ளது. 

இப்படியொரு பரபரப்பான ஆட்டமும் சிக்ஸர் மழையும் ரசிகர்களுக்கு இன்னொருமுறை அமைவது கடினம் தான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com