1964-க்கு பிறகு முதல் வெற்றி: ஆசியக் கோப்பை கால்பந்தில் தாய்லாந்தை வீழ்த்தியது இந்தியா

ஆசியக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 
புகைப்படம்: ஏஎஃப்சி மீடியா
புகைப்படம்: ஏஎஃப்சி மீடியா


ஆசியக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 

ஆசியக் கோப்பை கால்பந்தின் ஒரு பகுதியாக இன்றைய முதல் போட்டியில் இந்தியா, தாய்லாந்து அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தின. போட்டியின் 27-ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்திக்கொண்ட இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கோலாக மாற்றி அசத்தினார். இதனால், இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது. 

ஆனால், இந்த முன்னிலையை தாய்லாந்து அணி நீண்ட நேரம் நீடிக்கவிடவில்லை. போட்டியின் 33-ஆவது நிமிடத்தில் தாய்லாந்து அணியும் கோல் அடித்து பதிலடி தந்தது. அதன்பிறகு, போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. முதல் பாதியில் கூடுதலாக 1 நிமிடமும் வழங்கப்பட்டது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. 

தொடர்ந்து, 2-ஆவது பாதி ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால், இந்திய அணி போட்டியில் மீண்டும் முன்னிலை பெற்றது. 

இதைத்தொடர்ந்து, 63-ஆவது நிமிடத்தில் சேத்ரிக்கு ஹாட்ரிக் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பு பறிபோனது. எனினும், இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்தியது. 

68-ஆவது நிமிடத்தில், இந்திய அணியின் அனிருத் தாப்பா ஒரு கோல் அடிக்க இந்திய அணி 3-1 என வலுவான முன்னிலை பெற்றது. இதனால், தாய்லாந்து அணி நெருக்கடிக்குள்ளானது. 

இதே உத்வேகத்துடன் 80-நிமிடத்தில் மற்றொரு இந்திய வீரர் ஜேஜே லால்பேக்லுவா மேலும் ஒரு கோல் அடித்து அசத்த இந்திய அணி 4-1 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. இதில் இருந்து எழுச்சி காணாத தாய்லாந்து அணி போட்டி முடியும் வரை மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. 

கூடுதல் 3 நிமிடங்களும் வழங்கப்பட்டது. அதிலும், ஒரு கோல் கூட விழவில்லை. இதன்மூலம், இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்த தொடரில் இந்திய அணி 3 முக்கியப் புள்ளிகளை பெற்றுள்ளது. 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 1964-க்கு பிறகு ஆசியக் கோப்பை கால்பந்தில் இந்திய அணி முதன்முறையாக வெற்றியைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com