தடைக்கு பின் களமிறங்கிய ராகுல்: இந்தியா ஏ வெற்றி  

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக களமிறங்கிய ராகுல்...
கோப்புப்படம்
கோப்புப்படம்


இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக களமிறங்கிய ராகுல் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பாண்டியா, ராகுல் ஆகியோர் பெண்கள் தொடர்பாக கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்ப, ஆஸ்திரேலியாவில் இருந்த இருவரும் உடனே நாடு திரும்ப பிசிசிஐ உத்தரவிட்டது. 

இருவர் மீதான விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்வதாக கடந்த 11-ஆம் தேதி பிசிசிஐ அறிவித்தது.
 மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பிசிசிஐ சிஓஏ மனு செய்தது. ஆனால், பிப்ரவரி 5-ஆம் தேதி தான் இதுதொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது.

அணியின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதால், இதற்கிடையே விசாரணை நடைபெறும் வரை இருவர் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யலாம் என பிசிசிஐ தற்காலிக தலைவர் சிகே.கன்னா கருத்து தெரிவித்திருந்தார். மேலும் இதுதொடர்பாக சட்ட ஆலோசகர் பிஎஸ். நரசிம்மாவுடன் சிஓஏ ஆலோசனை மேற்கொண்டனர்.

இதையடுத்து, தீர்ப்பாயம் நியமிக்கப்படும் வரை இருவர் மீதான இடைநீக்க நடவடிக்கை உடனே ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஹார்திக் பாண்டியா நியூஸிலாந்தில் உள்ள இந்திய அணியில் இணைந்தார். அதே நேரத்தில் ராகுல் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்தியா ஏ அணியில் இணைந்தார். 

இந்நிலையில், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் ராகுல் இன்று களமிறங்கினார். தடையில் இருந்து திரும்பியதால், அவருடைய ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அவர் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்தியா ஏ அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 5 போட்டிகள் ஒருநாள் தொடரில் இந்தியா ஏ அணி 3-0 என அசைக்க முடியாத முன்னிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com