ஒருநாள் தொடர் நிறைவு: கடைசிவரை தீர்வு கிடைக்காத விராட் கோலி!

ஒருநாள் தொடருக்கு முன்பு உலகக் கோப்பைக்கான அணி தொடர்பாக இந்திய அணி நிர்வாகத்துக்குச் சில கேள்விகள் இருந்தன...
ஒருநாள் தொடர் நிறைவு: கடைசிவரை தீர்வு கிடைக்காத விராட் கோலி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் வென்ற இந்திய அணி அடுத்த மூன்று ஆட்டங்களில் தோற்று தொடரிலும் தோல்வியடைந்துள்ளது. தொடரில் தோல்வியடைந்ததோடு உலகக் கோப்பை அணி தொடர்பான கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் இந்தத் தொடர் கடைசிவரை விடையளிக்காமலேயே முடிவடைந்துவிட்டது. 

இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை அந்த அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. எதிர்பாராத வெற்றியுடன் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட்டது ஆஸ்திரேலிய அணி. ஆனால் இந்திய அணி நிர்வாகமும் இந்திய ரசிகர்களும் இந்தத் தொடரினால் மேலும் குழப்பம் அடைந்துள்ளார்கள். 

ஒருநாள் தொடருக்கு முன்பு உலகக் கோப்பைக்கான அணி தொடர்பாக இந்திய அணி நிர்வாகத்துக்குச் சில கேள்விகள் இருந்தன.

1. ரோஹித் சர்மா, ஷிகர் தவனுக்கு அடுத்ததாக மாற்றுத் தொடக்க வீரர் யார்?
2. 4-ம் நிலை வீரர் ராயுடு தானா? அல்லது வேறொரு வீரரா?
3. தோனிக்கு அடுத்ததாக மாற்று விக்கெட் கீப்பர் யார்? தினேஷ் கார்த்திக்கா ரிஷப் பந்தா?
4. பும்ரா, புவனேஸ்வர், ஷமிக்கு அடுத்ததாக 4-வது வேகப்பந்து வீச்சாளர் யார்?

*

2015-ல் ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை நடைபெற்றது. அப்போது இந்திய அணித் தேர்வில் இதுபோன்ற குழப்பங்கள் இல்லை. அந்த அணி வீரர்கள்:

தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷர் படேல், மோஹித் சர்மா (இஷாந்த் சர்மா), முஹமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், ஸ்டூவர்ட் பின்னி. 

பலருக்கும் கடந்த உலகக் கோப்பைப் போட்டிக்கு ராயுடு தேர்வானது ஆச்சர்யமாக இருக்கும். அப்போது அவர் மாற்று விக்கெட் கீப்பராகவும் தேர்வானார். அம்பட்டி ராயுடுவா, உத்தப்பா என்கிற போட்டி நிலவியது. அக்‌ஷர் படேலா கரன் சர்மாவா, பின்னியா மோஹித் சர்மா என்கிற சிறு குழப்பங்கள் மட்டுமே இருந்தன. மற்றபடி தோனி சரியாகத் திட்டமிட்டு அணியை உருவாக்கியிருந்தார். காயம் காரணமாக இஷாந்த் சர்மா விலக, மோஹித் சர்மா உலகக் கோப்பை அணியில் இணைந்தார். உலகக் கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அணி குறித்து ஓரளவு தெளிவு இருந்தது. இதுபோன்ற நான்கைந்து கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலை அப்போது இல்லை. 

சரி மீண்டும் இந்த உலகக் கோப்பைப் பிரச்னைக்கு வருவோம். கேள்விகளை அலசிப் பார்க்கலாம்...

யாருப்பா அந்த நெ.4?

4-ம் நிலை வீரர் தொடர்பாக பல சொதப்பல்கள் நிலவிய நிலையில் அந்தக் கேள்விக்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை என்பது கோலியின் மோசமான தலைமைப்பண்பை வெளிப்படுத்துகிறது. நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ராயுடு. ஆனால் இந்தமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவருக்கு மூன்று ஆட்டங்களில் விளையாட மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர் உலகக் கோப்பை அணியில் தேர்வாக வாய்ப்புண்டா என்கிற குழப்பம் இன்னும் மிஞ்சுகிறது. அவர்தான் உலகக் கோப்பையிலும் விளையாடுவார் என்றால் ஐந்து ஆட்டங்களிலும் விளையாட வைத்திருக்கவேண்டும். அதை ஏன் கோலி செய்யவில்லை?

தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை அருமையாகப் பயன்படுத்திக்கொண்ட விஜய் சங்கர், 4-ம் நிலை வீரராகக் களமிறங்கவேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் கூறிவிட்டார்கள். ஆனால் கோலி அதைப் பற்றி யோசிக்கவில்லை. அதற்குப் பதிலாக ராகுலையும் ரிஷப் பந்தையும் ஆடவைத்து மேலும் குழப்பம் ஏற்படுத்தினார். இப்போது ராகுலுக்கே தெளிவான புரிதல் இருக்காது. தான் தொடக்க வீரரா, நடுவரிசை வீரரா என்று. 

விஜய் சங்கரை 4-ம் நிலை வீரராகக் களமிறக்கி, பாண்டியாவை 7-ம் நிலை வீரராகக் களமிறக்கினால் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் வலுவானதாக இருக்கும். பாண்டியாவும் விஜய் சங்கரும் எளிதாக இணைந்து 10 ஓவர்கள் வீசவும் முடியும். ஆனால் கோலிக்கு அப்படியொரு உலகக் கோப்பைத் திட்டம் இல்லை எனத் தெரிகிறது.

மாற்று தொடக்க வீரர் ராகுலா ரஹானேவா?

கேஎல் ராகுலின் திறமையை சில மாதங்களுக்கு முன்பு மெச்சியவர்கள் இப்போது அவரைப் பரிந்துரை செய்யத் தயங்குகிறார்கள். டெஸ்டில் ஆரம்பித்து தனக்குக் கிடைத்த பெரும்பாலான வாய்ப்புகளையெல்லாம் வீணாக்கியுள்ளார் ராகுல். எனினும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக கேஎல் ராகுல் தான் தேர்வு செய்யப்படுவார் என்பதில் யாருக்கும் பெரிய சந்தேகம் இருக்கமுடியாது. ஆனால் அவர் அதற்கான தகுதியைத் தானாக உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதுதான் வேதனை. அபாரமான திறமை உள்ளதே தவிர அதை நிரூபிக்கும்படியான ஆட்டத்திறனை அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தவேயில்லை. கடந்த 11 ஒருநாள் ஆட்டங்களில் (விளையாடியதே 14 தான்) ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார் ராகுல். அந்த ஒரு அரை சதமும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக எடுத்தது. இவ்வளவு மோசமாக விளையாடியுள்ள ஒரு வீரரை எதன் அடிப்படையில் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வு செய்யமுடியும்? ஆனால் கோலி செய்வார்.

ரஹானே மிகவும் துரதிர்ஷ்டவசமானவர். கடந்த வருடத் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டுமே தோல்வியடைந்தார். அதோடு ரஹானேவின் கதவு சாத்தப்பட்டுவிட்டது. அதற்கு முன்பு ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மட்டும் எக்கச்சக்க ரன்களை எடுத்துக் காண்பித்தார் ரஹானே. 10 ஆட்டங்களில் 7 அரை சதங்களும் ஒரு சதமும் எடுத்தார். இந்த ஒரு காரணத்துக்காக அவருக்கு மேலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ராகுலை நம்பி ரஹானேவைக் கழற்றிவிட்டுவிட்டது இந்திய அணி. 

மாற்று விக்கெட் கீப்பர் யார்?

2015 உலகக் கோப்பைப் போட்டியின்போது மாற்று விக்கெட் கீப்பராக ராயுடு தேர்வானார். இந்தமுறை ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இடையே பெரிய போட்டி நடக்கிறது. 

ரிஷப் பந்தை எப்படியாவது உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்குள் நுழைத்துவிடவேண்டும் என்கிற கோலியின் விருப்பம்தான் (சக டெல்லிக்காரர்) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு மோசமான தோல்வியை அளித்துள்ளது என்றுகூட கூறலாம். 

ரிஷப் பந்த் உலகக் கோப்பை அணியில் இடம்பெறவேண்டும் என்பதால்... 

* கடைசி 2 ஒருநாள் ஆட்டங்களில் தோனி விளையாடவில்லை.
* 4-ம் நிலைக்குப் பொருத்தமான வீரர் என்று அனைவராலும் சொல்லப்பட்ட விஜய் சங்கருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.
* தினேஷ் கார்த்திகை ஒருநாள் அணியிலிருந்து நீக்கியது.

எனினும் கோலியின் திட்டம் நிறைவேறவில்லை. ஓர் அரை சதம் எடுத்திருந்தாலும் ரிஷப் பந்த்தை அவரே உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தேர்வு செய்திருப்பார்.  

இப்போதும் ரிஷப் பந்த் தான் உலகக் கோப்பை அணியில் தேர்வாவார் என நினைக்கிறேன். எப்படியும் ஐபிஎல்-லில் ஓரளவாவது நன்றாக விளையாடுவார் ரிஷப் பந்த். அதை வைத்து இந்திய அணியில் மீண்டும் சேர்த்துவிடுவார்கள். டெஸ்டுகளில் அவர் ஏற்படுத்திய சாதனைகளைக் கொண்டு உலகக் கோப்பையிலும் அதிசயம் நிகழ்த்துவார் என்று சொல்லியே இதில் நைஸாக நுழைத்துவிடுவார்கள். உலகக் கோப்பை அணிக்குத் தேர்வாகிற வீரர் ஒருவர் தகுதியின் அடிப்படையில் தேர்வாகவேண்டும். ஆனால் ஒருநாள், டி20 எனக் கிடைத்த வாய்ப்புகளில் பெரும்பாலும் சொதப்பிய ரிஷப் பந்த், கோலியின் ஆதரவால் மட்டுமே உலகக்கோப்பை அணியில் தேர்வாகவுள்ளார். 

தினேஷ் கார்த்திக்கை எண்ணி எவ்வளவுதான் பரிதாபப்படுவது!

4-வது வேகப்பந்துவீச்சாளர் யார்?

2015 உலகக் கோப்பையின்போது இந்திய அணியில் புவனேஸ்வர், ஷமி, உமேஷ் யாதவ், மோஹித் சர்மா என நான்கு வேகப்பந்துவீச்சாளர்களும் ஸ்டூவர்ட் பின்னி என்கிற ஆல்ரவுண்டர் என ஒட்டுமொத்தமாக 5 வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். இந்தமுறை பும்ரா, புவனேஸ்வர், ஷமி என மூன்று பேர் மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். நான்காவது வேகப்பந்துவீச்சாளருக்காக கலீல் அஹமது, உமேஷ் யாதவ், சிராஜ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டும் அவர்களால் திறமையை நிரூபிக்கமுடியாமல் போனது. இதனால் ஃபார்மில் இல்லாத இந்த மூன்று பேரையும் தேர்வு செய்வது கடினம். அதேசமயம் இங்கிலாந்து போன்று வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஒரு நாட்டில் வெறும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதும் சரியாக இருக்காது. என்ன செய்யப்போகிறார் எம்எஸ்கே பிரசாத்?

இன்னும் ஒரு இடம் குறித்துதான் யோசிக்கவேண்டியுள்ளது என கோலி எதைப் பற்றி சொன்னார்?

ராகுல் அல்லது ரஹானே, ராயுடு வேண்டுமா வேண்டாமா, ரிஷப் பந்த் அல்லது தினேஷ் கார்த்திக், ஜடேஜா அல்லது சாஹல்?

இத்தனை கேள்விகளுக்கு மத்தியிலும் இந்திய அணியின் சில முடிவுகளை வைத்து இந்திய உலகக் கோப்பை அணி இப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ஒருவேளை, எப்போதும்போல கோலியின் கணக்கு இதிலும் வேறாக இருக்கலாம். 

உலகக் கோப்பைக்கான இந்திய உத்தேச அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், அம்பட்டி ராயுடு, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ஜாதவ், பாண்டியா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி, சாஹல், கேஎல் ராகுல், ரிஷப் பந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com