நகராட்சி நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்! 

நகராட்சிப் பகுதி நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தவறான தகவலைத் தெரிவித்திருப்பதாக, அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நகராட்சி நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்! 

சென்னை: நகராட்சிப் பகுதி நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தவறான தகவலைத் தெரிவித்திருப்பதாக, அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை கடந்த மார்ச் 31-ஆம் தேதிக்குள் மூட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் 2,800 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் 1,183 மதுக்கடைகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில், சண்டீகர் அரசு தனது எல்லைக்குள் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றி, மதுக்கடைகளைத் திறந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றியது சரியானது என தெரிவித்தது. மேலும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றாவிட்டாலும் மதுக்கடைகளை திறக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த உத்தரவு தமிழகத்திற்கு பொருந்துமா எனக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்க கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்து. இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, "நகராட்சிப் பகுதிகள் மட்டும்தான் சண்டீகரில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதா?என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விளக்கம் தேவைப்படுகிறது' என்றார்.

இதற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, "இது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏன் கவலைப்பட வேண்டும்? எங்களது உத்தரவு சண்டீகரின் நகராட்சிப் பகுதிக்கும் பொருந்தும் என்றால், அது நாட்டின் ஏனையப் பகுதிகளுக்கும் அந்த உத்தரவு பொருந்தும்' என்றார். அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதி டி.ஓய். சந்திரசூட், "உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் இடம் பெற்றுள்ள "பிற நகராட்சிப் பகுதிகள்' என்ற சொற்றொடருக்கான விளக்கம், நாட்டிலுள்ள பிற நகராட்சிப் பகுதிகள் என்பதாகும்' என்றார்.

இந்நிலையில் இதே விவகாரம் தெடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு தொடர்ந்திருந்த வழக்கானது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி,'நகராட்சிப் பகுதி நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தவறான தகவலைத் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்து விட்டு, அதில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விளக்கம் தேவைப்படுகிறது என்று கூறியிருப்பது பொறுப்பற்ற செயல்' என்று அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com