தமிழ்நாடு

முதல்வரின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினேன்: திமுக செயற்குழுவில் கண்ணீர் விட்ட ஸ்டாலின் 

DIN

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்யும் விவகாரத்தில் முதல்வரின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினேன் என்று திமுக செயற்குழுவில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் உணர்ச்சி பொங்கப் பேசினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றும் பொருட்டு, திமுகவின் அவசர செயற்குழு கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் செவ்வாய் காலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்யும் விவகாரத்தில் முதல்வரின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினேன் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் உணர்ச்சி பொங்கப் பேசினார்.

அவர் பேசியதன் முழுமையான விபரம் வருமாறு:

நீங்கள் அனைவரும் உங்கள் தலைவரை இழந்திருக்கிறீர்கள்; ஆனால் நான் எனது தந்தையையும் இழந்திருக்கிறேன்.   சமீபத்தில் ஈரோட்டில் நடந்த திமுகவின் மண்டல மாநாட்டில் விரைவில் திமுக தலைமையில் ஆட்சி அமைத்து, அதை தலைவரிடம் சமர்ப்பிப்போம் என்று உறுதி எடுத்தோம். ஆனால் அதை அவர் உயிருடன் இருக்கும் போதே நிறைவேற்ற முடியாத வருத்தத்துடன் கண்ணீர் வழிய இங்கு நிற்கிறேன்.

மெரினாவில் அண்ணா நினியாவிடத்தில் தனது உடல் அடக்கம்  செய்யப்பட  வேண்டும் என்பது தலைவரின் விருப்பம். அதை நிறைவேற்றத்தான் நாம் போராடினோம். தலைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இறுதி நிமிடங்களில், இனி உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர்.

அப்பொழுது நாங்கள் கழக முன்னோடிகளுடன் ஆலோசித்து நண்பர்கள் வழியாக அரசுக்கு செய்தி அனுப்பினோம். அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்வது குறித்து எங்கள் விருப்பத்தை தெரியபடுத்தினோம். ஆனால் சாதகமான பதில் எதுவும் உடனே கிடைக்கவில்லை. 

பின்னர் நாங்கள் முதல்வரை நேரில் சந்தித்து இதுதொடர்பாக வேண்டுகோள் விடுக்கலாம். அவர் சம்மதித்து விடுவார் என்று எண்ணி நேரில் சந்திக்க முடிவெடுத்தோம். ஆனால் நான் திமுகவின் செயல் தலைவர்; தலைவரின் மகன் என்பதால் நேரில் சந்திக்க வேண்டாம் என்று கூறப்பட்டது. ஆனால் தலைவருக்காக எனது மானம், சுய கவுரவம் என எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறி சந்திக்கச் சென்றேன்.

அங்கு அவர்கள் நடைமுறைகள் இல்லை என்றும், சட்ட ஆலோசனைகள் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அப்போது நான் வெட்கத்தை விட்டு முதல்வரின் கைகளைப் பிடித்துக் கொண்டு தலைவரின் விருப்பத்தை நிறைவேற்றக் கெஞ்சினேன். அவர்கள் பார்ப்போம் என்று கூறியதை நம்பி திரும்பிச் சென்றோம்.

அன்று மாலை 06.10 மணியளவில் தலைவரின் மரணம் நிகழந்தது. உடனடியாக துணைப்பொதுச்செயலாளார் துரைமுருகன் வாயிலாக அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றைக் கொடுத்து அனுப்பினோம்,. ஆனால் அவர் 10 நிமிடத்தில் திரும்பி வந்து விட்டார்.  அதனை பின்னர் இடம் ஒதுக்க மறுத்து மாற்று இடம் ஒதுக்கும் தலைமைச் செயலாளரின் அறிவிப்பு தொலைக்காட்சியில் வெளியானது.

பின்னர் அங்கு இருந்த திமுக வழக்கறிஞர் குழுவிவின் மூத்த உறுப்பினர் மற்றும் மூத்த வழக்கறிஞரான வில்சன் இதுதொடர்பாக வழக்குத் தொடரலாமா என்று கேட்டார், செய்து விட முடியுமா என்று நான் கேட்டேன். பின்னர் வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும்  சண்முகசுந்தரம் ஆகியோரின் சீரிய முயற்சியினால், மறுநாள் காலை 10.30 மணியளவில் நமக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது. அந்த சோக தருணத்தின் நடுவே எனக்கு கிடைத்த ஒரே மகிழ்ச்சி செய்தி அது மட்டும்தான். அதற்காக நமது வழக்கறிஞர் குழுவுக்கு வாழ்த்துக்கள். அவர்கள்தான் இதற்கு முழு காரணம்.

முன்னதாக 1993 -ல் திமுகவின் பெயர் , கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றுக்கு ஆபத்து வந்தது. நாம் அதனைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பின்னர் அது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நடந்த வழக்கு விசாரணையில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அப்பொழுது தலைவர் கூறும் பொழுது, "இந்தத் தீர்ப்பு மட்டும் நமக்கு சாதகமாக வராவிட்டால்  அண்ணாவின் சமாதியின் அருகில் எனது உடல் புதைக்கப்பட்டு, நீங்கள் எனக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பீர்கள்" என்று உணர்வு பொங்கக் கூறினார். அதே போல தலைவர் உடலை அடக்கம் செய்யும் வழக்கில் தீர்ப்பு எதிராக வந்திருந்தால், எனக்கு நீங்கள் எல்லாரும் அஞ்சலி செலுத்தும் நிலை ஏற்பட்டிருக்கும். தலைவர் உயிருடனிருக்கும் போது நிறைய போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றது போல, இறப்புக்குப் பின்னரும் வென்றிருக்கிறார்.

மறைந்த தலைவரை நான் உங்கள் உருவத்தில் பார்க்கிறேன்.அவருக்கு நமது இதய அஞ்சலிகளை செலுத்தும் அதே நேரத்தில், அவரது வழி நின்று கட்சியைக் காப்பாற்ற வேண்டும். உங்களது கடமையினைச் செய்ய வேண்டும் என்று நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT