செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்திய விவகாரம்: 1,000 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ்

DIN | Published: 17th August 2018 01:39 AM


பொதுத் தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதது தொடர்பாக 1,000 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகின. இதையடுத்து பொதுத் தேர்வுகளை நன்றாக எழுதியும், சரியாக மதிப்பெண் கிடைக்காத மாணவர்களுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய தேர்வுத் துறை சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 2,500 -க்கும் மேற்பட்டவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். அவர்களின் மறுமதிப்பீடு முடிவுகள் சில நாள்களுக்கு முன்னர் வெளியாகின. அதில் 1,000 மாணவர்களின் விடைத்தாளில், கூட்டல் மற்றும் மதிப்பீடு பிழைகளால் மதிப்பெண் மாறியது.
இந்த விடைத்தாள்களை தேர்வுத் துறை ஆய்வு செய்து அவற்றை திருத்திய ஆசிரியர்கள், சரிபார்த்த விடை திருத்தும் மைய தலைமை அதிகாரிகள், துறை அலுவலர்கள் குறித்த பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுத் தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதது தொடர்பாக 1,000 ஆசிரியர்கள், துறை அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஆசிரியர்கள் மெத்தனமாகவும், அஜாக்கிரதையாகவும் விடைத்தாள்களை திருத்தியுள்ளனர் எனவும், இதற்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸுக்கு சரியாக விளக்கம் அளிக்காதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தேர்வுத் துறையில் இருந்து ஆசிரியர்களின் பட்டியல், பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
 

More from the section

கடன் தொல்லையால் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் உயரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
ஆம்பூர் அருகே மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த குரங்குக்கு இறுதிச் சடங்கு செய்த இளைஞர்கள்
ஹிமாசல் மழை -வெள்ளம்: 62 தமிழர்கள் சிக்கித் தவிப்பு