வருமான வரி சோதனை நடந்து ஓராண்டாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: ஆர் கே.நகர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி 

அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரி சோதனை நடந்து ஓராண்டாகியும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று ஆர் கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா  வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. 
வருமான வரி சோதனை நடந்து ஓராண்டாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: ஆர் கே.நகர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி 

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரி சோதனை நடந்து ஓராண்டாகியும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று ஆர் கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா  வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதிக்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக சார்பில் அதிகமான அளவில் பணப் பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

அப்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனையின் போது, ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பணப் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான விபரங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கீதா மற்றும் சமக தலைவர் நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரிக்குமாறு வைரக்கண்ணு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தார். அந்த அம்மனுவின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் பேரில், சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யயப்பட்டிருந்தது.    

அதேசமயம் இந்த விவகாரம் தொடர்பாக அத்தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட மருது கணேஷ் மற்றும்  மற்றும் அருண் நடராசன் ஆகியோரும் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதுதொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.    

இந்த சமயத்தில் போலீசார் சரியான ஆதாரம் இல்லாமல் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். எனவே வழக்கின் எப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யுமாறு கோரி திருத்தணியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான நாராயணன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.   

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரி சோதனை நடந்து ஓராண்டாகியும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று ஆர் கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா  வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. 

இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்ட வழக்கில், எப்.ஐ.ஆர் மார்ச் மாதேமே ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பான மற்றொரு வழக்கானது நீதிமன்றத்தில் தொடரப்பட்டு அரசிடம் அறிக்கை கோரப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு இவ்வழக்கில் எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டது? இந்த வழக்கில் என்ன மாதிரியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது? என்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. அதுதொடர்பான விபரங்களை தமிழக அரசின் வழக்கறிஞர் திங்கள் மாலை தாக்கல் செய்ய வேண்டுமென்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
பின்னர் இந்த வழக்கானது மதியம் விசாரணைக்கு வந்தபோது குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக 884 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், ஆனால் தகுந்த ஆதாரம் இல்லாத காரணத்தால், எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டதாக அரசு தெரிவித்தது 

ஆனால் வழக்கு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஏன் இரு நீதிபதிகள் அமர்வுக்கு முன்போ அல்லது வழக்கினை முதலில் விசாரித்த தனி நீதிபதி அமர்விலோ தகவல் தெரிவிக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

அதேசமயம் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரி சோதனை நடந்து ஓராண்டாகியும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று வருமான வரித்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்ட விவகாரம் வருமான   வரித்துறைக்குத் தெரியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. 

எனவே குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக ஆரம்பம் முதல் காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, வழக்கினை விசாரித்த இரண்டு காவல்துறை இணை ஆணையர்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், இரு வாரங்கள் கால அவகாசம் வழங்கி வழக்கினை டிசம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com