தமிழ்நாடு

தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம் மகாகவி பாரதி: இல.கணேசன்

DIN


தனது கவிதைகள் மூலம் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்திய மகாகவி பாரதி, தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்குவதாக பாஜக மூத்த தலைவரும், பொற்றாமரை அமைப்பின் தலைவருமான இல.கணேசன் புகழாரம் சூட்டினார்.
சென்னையில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 
இதையொட்டி திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் சக்தி நாட்டிய நிகழ்ச்சி, பாரதி இயல் கருத்தரங்கம் ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன. 
இந்தக் கருத்தரங்குக்கு வானவில் பண்பாட்டு மையத்தின் தலைவர் வ.வே.சு. தலைமை வகித்தார். இதில், பாரத சமுதாயம் வாழ்கவே என்ற தலைப்பில் 
இல.கணேசன் பேசியது: 
நமது நாட்டின் கலாசாரம் இன்றளவும் அழியாமல் இருப்பதற்கு காரணம் நமது சமுதாயத்தின் கட்டமைப்புதான் என்று பாரதி கூறுகிறார். அவரது கவிதைகள் அனைத்துமே மக்களைப் பண்படுத்துவதாக உள்ளது. தற்போது, நமது நாடு குறித்து பல்வேறு கருத்துகள் பரப்பப்படுகின்றன. 
ஆனால், இந்திய நாட்டின் எல்லைகள், பண்பாடு ஆகியவை குறித்து தனது படைப்புகள் மூலம் அப்போதே பாரதி தெளிவுபடுத்திவிட்டார். ஜாதி, மதம் என்ற பாகுபாடு இல்லாமல் இங்கு வசிக்கும் அனைவருக்கும் இந்த நாடு சொந்தமானது. அதேபோல், இதைக் காக்கும் கடமையும் அனைவருக்கும் உண்டு என்பது பாரதியின் உறுதியான நம்பிக்கையாகும். தனது கவிதைகள் மூலம் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்திய மகாகவி பாரதி தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம் என்றார் இல.கணேசன்.
இதைத் தொடர்ந்து, நடைபெற்ற கருத்தரங்கில் ஆண்மை தவறேல் என்ற தலைப்பில் பேராசிரியர் பர்வீன் சுல்தானாவும், ஆயிரம் தெய்வங்கள் என்ற தலைப்பில் இசைக்கவி ரமணனும் பேசினர். இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், மூத்த வழக்குரைஞர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT