குட்கா ஊழல்: அமைச்சருக்கு சிபிஐ அழைப்பாணை

குட்கா ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கு தில்லி சிபிஐ அதிகாரிகள் அழைப்பாணை

குட்கா ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கு தில்லி சிபிஐ அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
  கடந்த 2016-இல் வருமானவரித் துறையினர் சென்னை செங்குன்றத்தில் உள்ள  குட்கா கிடங்கியில் சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த ரகசிய டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணையராக அப்போது இருந்த இப்போதைய டிஜிபி தே.க.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டிஜிபி எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் லஞ்சம் வாங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
 இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி தே.க.ராஜேந்திரன்,  ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சிபிஐ அதிகாரிகள்  விசாரணை செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தில்லி சிபிஐ அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
இதன்படி, இருவரும் டிசம்பர் 15-ஆம் தேதி (சனிக்கிழமை)  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். இவர்களிடம் விசாரணை நடத்த தில்லி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com