இரத்தம் கொதிக்கிறது: சாத்தூர் கர்ப்பிணி பெண் விவகாரம் குறித்து ஸ்டாலின் ஆவேசம் 

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் குறித்து, 'இரத்தம் கொதிக்கிறது' என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 
இரத்தம் கொதிக்கிறது: சாத்தூர் கர்ப்பிணி பெண் விவகாரம் குறித்து ஸ்டாலின் ஆவேசம் 

சென்னை: சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் குறித்து, 'இரத்தம் கொதிக்கிறது' என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் தங்கபாண்டி (27) -முத்து (23) தம்பதி. இவர்களுக்கு, ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், முத்து தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். 

பத்து நாள்களுக்கு முன், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் சென்ற முத்துவுக்கு, ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதாகவும், அதனால் ரத்தம் ஏற்ற வேண்டும் எனவும் மருத்துவர் கூறியுள்ளார். அதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியிலிருந்து ரத்தம் வரவழைக்கப்பட்டு, முத்துவுக்கு ஏற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த நவம்பர் 30 ஆம் தேதி சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார். ஆனால், ரமேஷ் ரத்தத்தை பரிசோதிக்காமல் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் ரத்தம் எடுத்து, சேமித்து வைத்துள்ளனர். பரிசோதிக்காத இந்த ரத்தம், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு முத்துவுக்கு ஏற்றப்பட்டுள்ளது. 

இதனிடையே, ரத்த தானம் செய்த ரமேஷ் வெளிநாடு செல்வதற்காக, மதுரையில் மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார். அதில், ரமேஷுக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. உடனே, ரமேஷ் சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று தனக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பதாகவும், தான் அளித்த ரத்தத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் சிவகாசி அரசு மருத்துவமனையிலிருந்து சாத்தூர் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

பின்னர் நடந்த சோதனையில் முத்துவுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.  உடனே அவருக்கு கூட்டு மருந்து சிகிச்சை துவங்கபட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி ரத்த வங்கி ஊழியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுளள்னர். மருத்துவமனை மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

அதேசமயம் ரத்தம் கொடுத்த வாலிபர் ரமேஷ் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் குறித்து, 'இரத்தம் கொதிக்கிறது' என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

இரத்தம் கொதிக்கிறது! இந்த ஊழல் அரசின்கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன? உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை இரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்! குட்கா விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுதுறை பணிகளில் ஈடுபடுவாரா?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com