சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை 

கேரளாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்ததாகக் தொடரப்பட்ட வழக்கில், பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை 

சென்னை: கேரளாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்ததாகக் தொடரப்பட்ட வழக்கில், பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர். இவர் 2012-ஆம் ஆண்டில் தனது வீட்டு வேலைக்கு ஆள் தேவை என்று,தனது நண்பர் அன்பரசன் என்பவர் மூலம், கேரளாவில் இருந்து சத்யா என்ற சிறுமியை வரவழைத்தார். 2012-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி சத்யா எம்.எல்.ஏ ராஜ்குமார் வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டார். 

ராஜ்குமார் வீட்டில் தங்கியிருந்த சத்யா ஜூன் 25ம் தேதி தனது தந்தை சந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனக்கு பெரம்பலூரில் இருக்க பிடிக்கவில்லை. உடனே ஊருக்கு அழைத்து செல்லுங்கள் என கூறினார். அதற்கு சந்திரன் 29ம் தேதி வந்து அழைத்துச் செல்வதாகக் கூறினார். இந்நிலையில் 28ம் தேதி ராஜ்குமாரின் நண்பரான ஜெய்சங்கர், சந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சத்யாவுக்கு உடல்நிலை சரியில்லை. தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். வந்து அழைத்து செல்லுங்கள் எனக்கூறினார். 

அதன்படி, பெற்றோர் வந்து பார்த்த போது சத்யா சுயநினைவு இல்லாமல் இருந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக 30ம்தேதி திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சத்யாவுக்கு 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர் சிகிச்சைக்காக கேரளா கொண்டு சென்றனர். வழியில் சத்யாவின் உடல்நிலை மிகவும் மோசமானதால், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை 4ம் தேதி சேர்த்தனர். ஆனால் அங்கு  சிகிச்சை பலன் அளிக்காமல் ஜூலை 6ம் தேதி சத்யா இறந்தார். 

இது தொடர்பாக சத்யாவின் தந்தை சந்திரன், பெரம்பலூர் போலீசில் ஜூலை 7ம் தேதி புகார் கொடுத்தார்.  அதன்பேரில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

பின்னர் கேரளா கொண்டு சென்று சத்யாவை அடக்கம் செய்வதற்கு முன் அவரது உடலில் சிறு, சிறு காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சத்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மறுபிரேத பரிசோதனை நடத்தும்படி பீர்மேடு போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அங்கு வழக்குப்பதிவு செய்து மறு பிரேத பரிசோதனையும் நடந்தது. 

பின்னர் போலீசாரின் நேரடி விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அடிப்படையில் ஏற்கனவே சந்தேக மரணம் என்றிருந்த வழக்கானது, ஆட்களைக் கடத்தல் (366 ஏ), கற்பழிப்பு (376) மற்றும் ,  கொலை (302) ஆகிய பிரிவுகளின் கீழ் மாற்றியமைத்து பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் , அவரது நண்பர் ஜெய்சங்கர் உள்ளிட்ட 7 பேரின் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் ராஜ்குமார் மற்றும் ஜெய்சங்கர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் 

ராஜ்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் இந்த வழக்கானது சென்னையில் அமைந்துள்ள எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கில் ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது.  

தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது:

சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கர் ஆகியஇருவருக்கும், மூன்று பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. அத்துடன் ராஜ்குஜாருக்கு ரூ. 42 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட மீதமுள்ள ஐந்து பேரில் ஒருவர் வழக்கின் போதே மரணமடைந்து விட்டார். அவர்களில் எஞ்சியுள்ள நன்கு பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். 

இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com