தமிழ்நாடு

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கும் ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டதா?

DIN

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட செய்தியின் ரணம் ஆறுவதற்குள்ளே.  சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தால் தனக்கு ஹெச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மற்றொரு பெண் புகார் அளித்துள்ளது மீண்டும் பொதுமக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த 3 ஆம் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் சென்றுள்ள கர்ப்பிணிப் பெண், அங்கு மருத்துவர் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்தம் வாங்கி வந்து, அதை செலுத்திய பிறகு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது.
 
ரத்தத்தை பரிசோதிக்காமலேயே கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தி அதன் மூலம் அப்பெண்ணுக்கு ஹெச்ஐவி நோய்த் தொற்று ஏற்பட்ட விவகாரம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி வைரஸின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிய ரத்த மாதிரி வியாழக்கிழமை சேகரிப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அப்பெண்ணுக்கு, வைரஸின் தாக்கத்தைக் குறைக்கவும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் தடுக்கவும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 9 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மகப்பேறு சிகிச்சைப் பிரிவுத் தலைவர் தலைமையில் 9 மருத்துவர்கள் இன்று காலை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தால் தனக்கு ஹெச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மற்றொரு பெண் அளித்துள்ள புகாரால் மீண்டு அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். அந்தப் பெண் நடந்த சம்பவத்தை விவரித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்று அளித்த பேட்டியில், குழந்தை பெறுவதற்காக சென்னை மாங்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தேன். கடந்த ஏப்ரல் மாதம் எனக்கு 'ரத்த சோகை' ஏற்பட்டதாகவும், இதனால் எனக்கு ரத்தம் செலுத்த வேண்டும் எனக் கூறி மாங்காடு மருத்துவமனை நிர்வாகம் கூறியது. உடனே மருத்துவமனை நிர்வாகமே, 108 ஆம்புலன்ஸ் மூலம் என்னை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. அங்கு 10 நாள்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுத்தேன்.

அதற்கு முன்னதாக எடுத்த பரிசோதனைகளில் எனக்கு ஹெச்ஐவி பாதிப்பு இல்லை என வந்தது. ஏப்ரல் 5 ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்து எனக்கு 2 பாட்டில்கள் ரத்தம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தேன். 

இதையடுத்து  நான்கு மாதங்கள் கழித்து கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி 8 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது பரிசோதனை செய்ததில் எனக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பதாக கூறினார்கள்.

இதனை தொடர்ந்து எனக்கு ஹெச்ஐவிக்கான நோய் எதிர்ப்பு மருந்துகளை மருத்துவர்கள் வழங்கியதாகவும், இதற்கான காரணம் கேட்ட போது ரத்தம் ஏற்றும் போது தொற்று வந்து இருக்கலாம் என மருத்துவர்கள் அலட்சியமாக பதில் அளித்தாகவும், மாங்காடு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைகளைத் தவிர வேறு எங்கும் நான் சிகிச்சை எடுக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது எனக் கூறி அழுதவர், பிறக்கும் குழந்தைக்காவது இந்த நோய் தொற்று இல்லாமல் குழந்தை பிறக்க சிகிச்சை எடுத்துக்கொண்ட எனக்கு கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி குழந்தை பிறந்தது.

ஏற்கனவே, எனக்கு ஒரு குழந்தை உள்ளது. அப்போது எனக்கோ, என் கணவருக்கோ எந்த பாதிப்பும் இல்லை என அரசு மருத்துவமனையே கூறிவிட்டது. அப்படி இருக்கையில் எனக்கு மட்டும் எப்படிப் பாதிப்பு வரமுடியும். மருத்துவமனையில் கேட்டால் எங்களுக்கு எப்படித் தெரியும் என அலட்சியமாக கூறுகிறார்கள்.

மருத்துவமனையின் அலட்சியத்தைச் சுட்டிக்காட்டி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகம், மாங்காடு மருத்துவமனை நிர்வாகம் என அனைவருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளேன். ஆனால், அதைப் படித்தார்களா இல்லையா எனக் கூட தெரியவில்லை. இதுவரை எனது வீட்டைத் தேடி யாரும் வரவில்லை. 

சமூகத்துக்குப் பயந்து தான் இத்தனை நாள் நான் வெளியில் சொல்லவில்லை. தற்போது என்னைப் போலவே இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டது தெரிந்ததை அடுத்து இனிமேலும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தற்போது இதைக் கூறுகிறேன்.

இந்த சம்பவத்திற்கு பின் நெருங்கிய உறவினர்களே, தன் உடன் பிறந்த சகோதரிகள் கூட தன்னை ஏற்றுக்கொள்ள தயராக இல்லை என்றும், மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தால் தனது வாழ்க்கையே பறிபோய் விட்டதாக அழுதவர், தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நியாயம் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

தற்போது இவருக்கு பிறந்து 3 மாதங்கள் ஆன ஆண் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.  

இருப்பினும் மருத்துவமனையின் அலட்சியத்தால் தற்போது மேலும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டுள்ள விவகாரம் பொதுமக்களிடையே பெறும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் அரசு மருத்துவமனையின் மீதான நம்பகத்தன்மையை அசைத்துப் பார்த்திருப்பதுடன், ரத்த வங்கிகளில் பின்பற்றப்பட்டு வரும் பாதுகாப்பு நடைமுறைகளை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இதனிடையே, ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக கூறும் பெண்ணுக்கு பாதிப்பு ஏதுமில்லை என மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் விஜயா செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்கள் மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சையின்போது அளித்த ரத்தத்தில் எச்ஐவி தொற்று ஏதும் இல்லை. அதேபோல, மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த பரிசோதனை செய்ததற்கும் ஆதாரமும் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். 

அந்த பெண்ணின் புகார் குறித்து மாங்காடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT