பிளஸ் 1-இல் தேர்ச்சி பெறாத 28,167 மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்: தேர்வுத்துறை ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத 28,167 மாணவர்களுக்கு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மாற்றுச் சான்றிதழ் கொடுத்துள்ளனர். அரசுத் தேர்வுத்துறை நடத்திய


பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத 28,167 மாணவர்களுக்கு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மாற்றுச் சான்றிதழ் கொடுத்துள்ளனர். அரசுத் தேர்வுத்துறை நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது.
தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களையும், பிளஸ் 2 வகுப்பில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் கடந்த மார்ச் 2018 பிளஸ் 1 பொதுத்தேர்வுக்குத் தயாரிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, மார்ச் 2019 பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தயாரிக்கப்பட்ட பட்டியலை பதிவிறக்கம் செய்து, மாணவர்களின் பெயர்சேர்த்தல் விவரங்களையும் இணைத்து இணையதளத்தில் பதிவேற்றுமாறு தேர்வுத்துறை அறிவுறுத்தியிருந்தது. 
இதைத் தொடர்ந்து பள்ளிகளின் சார்பில் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து தேர்வுத் துறை ஆய்வு செய்தது. அப்போது பிளஸ் 1 பொதுத் தேர்வுக்குப் பின்னர் 28,167 மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டதும், அதன் காரணமாக அந்த மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதும் தெரியவந்தது. 
இதையடுத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 
பள்ளிக் கல்வித் துறை கடந்த 22.5.2017இல் வெளியிட்ட அரசாணையில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் சில பாடங்களில் தோல்வியடையும் மாணவர்கள் ஆண்டு விரயமின்றி பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லலாம் என்றும், தோல்வியடைந்த பாடங்களை ஜூன் மாதத்தில் நடைபெறும் உடனடி சிறப்புத் தேர்விலோ அல்லது இரண்டாம் ஆண்டு இறுதித் தேர்வின் போதோ அல்லது இரண்டிலுமோ பின்னடைவுப் பாடமாக கல்லூரிகளில் உள்ளது போன்ற நடைமுறையில் எழுதிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வியடைந்த மாணவர்களை பிளஸ் 2 வகுப்பில் சேர்க்காமல் அவர்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு பள்ளியை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
பிளஸ் 2 தேர்வெழுத தேர்வுத்துறை அனுமதி: அவ்வாறு பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் சென்ற தேர்வர்கள், செய்முறைத் தேர்வு இல்லாத பாடத் தொகுப்பில் பயின்ற மாணவர்களாக இருந்தால் அவர்களை தனித் தேர்வர்களாக பிளஸ் 2 தேர்வெழுத அனுமதிப்பதில் சிக்கல் எழாது. அதே நேரத்தில் செய்முறைத் தேர்வு உள்ள பாடங்கள் கொண்ட பாடத் தொகுப்பில் பயின்ற மாணவர்களாக இருப்பின் அவர்களுக்கு செய்முறைத் தேர்வினை நடத்துவதில் சிக்கல் ஏற்படும். 
எனவே மாணவர்களின் நலன் கருதி கடந்த மார்ச் 2018 ஆம் ஆண்டு பிளஸ் 1 பொதுத் தேர்வினை பள்ளி மாணவராக எழுதிய பின்னர் பள்ளியில் தொடர்ந்து பிளஸ் 2 படிக்காமல் மாற்றுச் சான்றிதழ் பெற்று பள்ளி இடைநின்ற மாணவராக இருப்பினும், அவர்களை ஏற்கெனவே பிளஸ் 1 படித்த பள்ளியின் மாணவராகவே கருதி அந்தப் பள்ளியின் மாணவர்கள் பெயர் பட்டியலில் சேர்த்து முதல் முறையாக மார்ச் 2019 பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதுவதற்கும், பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்த பாடங்கள், செய்முறைத் தேர்வுகள் ஆகியவற்றை அதே பள்ளியில் எழுதுவதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது. 
இந்தத் தகவலை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வரும் ஜன.5ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com