நச்சுத்தன்மை காரணமாக ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகம் நிறுத்தம்: தமிழக அரசு முடிவு! 

மசூர் வகை பருப்புகளில் நச்சுத்தன்மை இருப்பதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, தமிழக உணவுத்துறையின் பரிந்துரையின் பேரில் ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகம் நிறுத்தப்படுவதாக... 
நச்சுத்தன்மை காரணமாக ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகம் நிறுத்தம்: தமிழக அரசு முடிவு! 

சென்னை: மசூர் வகை பருப்புகளில் நச்சுத்தன்மை இருப்பதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, தமிழக உணவுத்துறையின் பரிந்துரையின் பேரில் ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உளுந்தம்பருப்புக்குப் பதிலாக துவரம் பருப்பு, 'மசூர்' மற்றும் கோசி வகை பருப்புகளை வழங்குவது என்று தமிழக அரசு சமீபத்தில் முடிவு செய்தது. அதற்காக டெண்டர்களும் கோரப்பட்டது.

ஆனால் 'மசூர்' வகை பருப்பு உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது; எனவே மசூர் பருப்பு கொள்முதலுக்கு டெண்டர் கோரி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, கடலூரைச் சேர்ந்த ஆதி ஜெகநாதன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம்  பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

அதன்படி முதலில் பருப்பு கொள்முதலுக்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது. பின்னர் மசூர் வகை பருப்பினை கொள்முதல் செய்வதற்கு முன், அதனுடன் கோசி வகை பருப்பு  மற்றும் நிறமூட்டிகள் எதுவும் கலக்கப்படுகின்றனவா என்பதை முறையான ஆய்வக சோதனைகளின் மூலம் அரசு உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே மசூர் பருப்பு கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று கோரி, வழக்கினை முடித்து வைத்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில் அது தொடர்பான நடைமுறைகள் தொடர்ந்து வந்த நிலையில் மசூர் வகை பருப்புகளில் நச்சுத்தன்மை இருப்பதாகத் தொடர்ந்து பல்வேறு தரப்புகளில் இருந்து எழும் புகார்களைத் தொடர்ந்து, தமிழக உணவுத்துறையின் பரிந்துரையின் பேரில் ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கோரப்பட்டுள்ள டெண்டர்களின் படி மசூர் வகை பருப்புகளை  வாங்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com