வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

ஏலகிரியில் வீர ராஜேந்திரன் காலத்து எழுத்துடை நடுகற்கள் கண்டெடுப்பு

By  திருப்பத்தூர்| DIN | Published: 01st July 2018 12:41 AM

ஏலகிரி மலையில் வீர ராஜேந்திரன் காலத்து எழுத்துடை நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 ஏலகிரிமலை தொன்போஸ்கோ கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் சு.ராஜா இந்த நடுகல்லை கண்டெடுத்துள்ளார்.
 இதுகுறித்து அவர் கூறியதாவது: இக்கல்வெட்டு மங்களம் பகுதியில் உள்ள காட்டில் கண்டெடுக்கப்பட்டது. இது, 80 அங்குல உயரமும், 45 அங்குல அகலமும் உள்ளது. இக்கல்லில் உள்ள வீரனின் இடது கையில் நெடிய வில்லும், கூரிய வாளும் உள்ளன. கைகளிலும், கால்களிலும் கடகங்கள் உள்ளன. கால்களுக்கு இடையில் சங்கு உள்ளது. வீரனின் இருபக்கமும் சிறிய உருவிலான மனித வடிவங்கள் காணப்படுகின்றன. வீரனின் இடப்பக்கத்தில் இருந்து தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு முற்று பெறவில்லை.
 இது, வீர ராஜேந்திரன் காலத்தில் நிகரிலி சோழ மண்டலத்தில் தகடூர் (தருமபுரி) நாட்டில் இருந்த பயி நாட்டில் ஏலகுன்றில் (ஏலகிரி) இருந்துள்ளது. அப்போது, பாலாற்றுப் பகுதியில் சிற்றரசன் ஒருவன் ஆட்சியில் இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் அறிஞர் ராஜவேல் சுப்ரமணி உதவியுடன் அறிய முடிகிறது.
 மற்றொரு நடுகல்...
 மங்களம் வயல் பகுதியில் குதிரையைக் கொன்று வீரமரணம் அடைந்த வீரனுக்கும் எழுத்துடன் கூடிய மற்றொரு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இக்கல்லானது 85 அங்குலம் உயரமும், 28 அங்குலம் அகலமும் உள்ளது. நடுகல்லின் இடது பக்கத்தில் குதிரையும், வீரனின் வலது கையில் வில்லும், இடது கையில் அம்பும் உள்ளன. இடைக்கச்சில் வாள் உள்ளது. நடுகல்லின் மேற்பகுதி உடைந்து காணப்படுகிறது. இந்த நடுகல்லில் ஒரு சில எழுத்துகள் மட்டுமே காணப்படுகின்றன. வீரனின் கை, கால், கழுத்திலும் எவ்வித அணிகலங்களும் காணப்படவில்லை. எனவே இந்நடுகல் மிகப் பழைமையானதாக அறிய முடிகிறது. இந்நடுகல் சேதமடைந்த நிலையில் உள்ளது.
 இதே பகுதியில் இடது கையில் தாமரை மலருடனும், கால்களில் கடகங்கள் அணிந்தும் வீரமாசதி கல்லும் தனியே காணப்படுகிறது. இக்கல் 28 அங்குல நீளமும், 15 அங்குல அகலமும் உள்ளது. இதனோடு இந்த ஊரிலேயே மலை அடிவாரத்தில் தனியாக கல்லெடுக்காமல் பாறையிலேயே செதுக்கப்பட்ட வீரமாசதி கல்லும் உள்ளது. இக்கல்லில் உள்ள பெண் உருவானது 25 அங்குலம் உயரமும், 24 அங்குலம் அகலமும் உள்ளது. இடது கையில் வாளும், வலது கையில் தாமரை மலரும் காணப்படுகிறது என்றார் அவர்.

More from the section

அமைச்சர் தங்கமணிக்கு ஒரு வாரம் கெடு விதித்த மு.க.ஸ்டாலின்
கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் உதயகுமார்
பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த திமுக வரலாறு குறித்து பேசலாமா?: தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி 
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது: வைகோ
நான் எதற்கும் பயந்து ஓடிப்போகிறவன் கிடையாது: கருணாஸ்