தமிழ்நாடு

அழிவின் விளிம்பில் கடற்பசுக்கள்: கடலுக்கு அடியில் புற்களை வளர்த்து பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை

DIN

அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை உயிரினமான கடற்பசுக்களை பாதுகாக்க, கடலுக்கடியில் புற்களை வளர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கடற்பசுக்கள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மன்னார் வளைகுடா மற்றும் பாக்.ஜலசந்தி கடற்பகுதியில் 3,600 அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அழிந்துவரும் நிலையில் உள்ள உயிரினமாக கடற்பசு இருந்து வருகிறது. கடலில் வாழும் தாவரங்களை மட்டும் உண்டு வாழும் கடற்பசுக்கள் பாலுôட்டி வகையை சேர்ந்தது. கடற்பசுக்கள் 6.5 அடி முதல் 13.5 அடி வரை வளரும். அதிகபட்சமாக 700 கிலோ எடை வரை இருக்கும். ஒரு பெண் கடற்பசு இனப்பெருக்கம் செய்ய 6 முதல் 17 ஆண்டுகள் வரை ஆகிறது. ஒரு கடற்பசு சுமார் 13 முதல் 15 மாதங்கள் வரை கருவுற்றிருந்து ஒரு குட்டியை ஈன்றெடுக்கிறது. சுமார் 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒரு குட்டியை மட்டும் ஈன்றெடுக்கக் கூடியது.

சுமார் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடிய இந்த அரியவகை உயிரினமானது மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதியில் சுமார் 158 மட்டுமே இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அழிவின் விளிம்பில்: கடலில் ஆழமில்லாத, அமைதியான பகுதிகளில் வசிக்கும் இவற்றின் முக்கிய உணவு கடலுக்கடியில் வளரும் புற்களாகும். கடற்பசுக்கள் மூச்சு விடுவதற்காக மட்டுமே கடலின் மேல்மட்டத்துக்கு வந்து செல்லக்கூடியது. அப்போது கப்பல்களில் மோதியும், மீனவர்கள் பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட வலைகளில் சிக்கியும் கடற்பசுக்கள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இறைச்சிக்காக கடற்பசுக்களை சிலரை வேட்டையாடுவதும், இந்த அரியவகை உயிரினம் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டு விட்டது. கடல் மாசுபடுவதால் கடற்பசுக்களின் முக்கிய உணவான கடற்புற்கள் வளர்வது பாதிக்கப்படுவதும் அந்த இனத்தின் அழிவுக்கு முக்கிய காரணியாக உள்ளது. இதனால் கடற்பசுக்களை பாதுகாக்க, கடலின் அடிப்பகுதியில் புற்களை வளர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

வேட்டையாடினால் சிறை: இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வன உயிரினக் காப்பாளர் டி.கே. அசோக்குமார் கூறியது: கடற்பசுவை வேட்டையாடினால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. மீன் வலைகளில் கடற்பசு சிக்கிக் கொண்டால் அதை உடனே மீட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்தியாவிலேயே மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 158, அந்தமான் தீவுப்பகுதியில் 81, குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடாவில் 15 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பதாக இந்திய வன உயிரினக் கழகம் தோராயமாக கணக்கிட்டிருக்கிறது.

கடற்புற்கள் வளர்ப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, மண்டபம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காரியாசல்லித்தீவு ஆகிய பகுதிகளில் கடற்புற்கள் அதிகளவில் உள்ளன. இங்கு புற்களை அதிகளவில் விளைவிக்க கடற்புற்களின் மீது, பிளாஸ்டிக் குழாய் மூலம் சதுரமாக வடிவமைத்து அதில் குறுக்கும், நெடுக்குமாக சணல் கயிறு கட்டி, அந்தக் கயிற்றில் கடற்புற்களை வெட்டி கட்டி வைக்கிறோம். ஆழம் குறைந்த, அமைதியான கடல் பகுதியில் இந்த சட்டங்களில் இருந்து அதிகளவில் கடற்புற்கள் அதிகளவில் விளைகின்றன. இப்பணியை செய்ய மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஆண்டுதோறும் ரூ. 3.78 லட்சம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின்படி கடற்பசுக்களைப் பாதுகாப்போம் என்ற செயலி ஒன்றை உருவாக்கி, கடல் பசுக்களின் முக்கியத்துவத்தை மீனவர்களுக்கும், கடற்கரையோரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கும் அவர்களது செல்லிடப்பேசிகளில் பதிவு செய்து கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கடல் புற்களை அதிக அளவில் வளர்த்து கடற்பசுக்களை பாதுகாத்தல் போன்ற பணிகளை செய்து வருகிறோம்.

கடந்த 2014 முதல் 2017 வரை 12 கடற்பசுக்கள் பாறையில் மோதி உயிரிழந்துள்ள. இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் ஒரு கடற்பசு வேட்டையாடி கொல்லப்பட்டுள்ளது. இதனால் கடற்பசுக்களை பாதுகாக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT