கும்பக்கரை வனத்தில் அரியவகை பட்டாம்பூச்சிகள்!: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை மற்றும் கல்லாறு வனப்பகுதிகள் அரியவகை பட்டாம் பூச்சிகளின் வாழ்விடமாக மாறி வருகிறது. 
கும்பக்கரை வனத்தில் அரியவகை பட்டாம்பூச்சிகள்!: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை மற்றும் கல்லாறு வனப்பகுதிகள் அரியவகை பட்டாம் பூச்சிகளின் வாழ்விடமாக மாறி வருகிறது. 

பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி வனசரகத்தில் கும்பக்கரை அருவி, கல்லாறு மற்றும் தேவதானப்பட்டி , முருகமலை வனப்பகுதிகள் உள்ளன.

இப்பகுதிகள் கொடைக்கானல் வனஉயிரின சரணாலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்பகுதியில் காட்டெருமை, மான், சிறுத்தை மற்றும் பல்வேறு அரியவகை பறவைகள், விலங்கினங்கள் உள்ளன. இதில் கும்பக்கரை அருவி மற்றும் கல்லாறு பகுதியில் அரியவகை பட்டாம் பூச்சிகள் காணப்படுகின்றன.

தமிழகத்தின் 323 வகையான பட்டாம் பூச்சிகள் இருப்பதாக ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் எடுத்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக பட்டாம்பூச்சிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முயற்சியால் ஆங்காங்கே பட்டாம்பூச்சி குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

அதனடிப்படையில் அவர்கள் தற்போது கல்லாறு, கும்பக்கரை பகுதிகளில் ஆய்வு நடத்தினர். 

இந்த ஆய்வில் அரியவகை பட்டாம் பூச்சிகளான ஆர்கிட் டிட், நீல்கிரி டிட், ஆரஞ்ச் ஆலட், ஆரஞ்ட் டெய்ல் ஆல், ஒயிட் டிப்டு லைன் புளு, பழனி புஷ்புரோன், நீல்கிரி போர் ரிங், பெயின்டேட் கோர்ட்டிஸன், சில்வர் ஸ்ரிக் புளு போன்ற 134 அரியவகை பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் புளு மோர்மோன், நாவாப், மஞ்சள் நிற சிறிய வகை பட்டாம் பூச்சிகள் இப்பகுதியில் ஆயிரக்கணக்கில் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இப்பகுதி அதிகளவு பட்டாம் பூச்சிகளின் வாழ்விடமாக கொண்டு இருப்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு நன்மை: இதுகுறித்து தமிழ்நாடு பட்டர்பிளை அசோசியேஷனை சேர்ந்த பாவேந்தன் அப்பாவு வியாழக்கிழமை கூறியது: பட்டாம் பூச்சிகள் எங்கு அதிகளவு காணப்படுகிறதோ அங்கு சுற்றுச்சூழல் நல்ல நிலையில் இருக்கும். பட்டாம் பூச்சிகள் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய காரணியாக இருக்கின்றன. பட்டாம் பூச்சிகள் அதிகளவு இருப்பதால் இதனை சுற்றியுள்ள விவசாயிகளுக்கு நன்மையே கிடைக்கும். பொதுவாக பட்டாம்பூச்சிகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்கும் பகுதிகளிலே அதிகமாக வாழ்கின்றன. மேலும் இப்பகுதியில் பொதுமக்களை அனுமதிக்காமல் வனத்துறையினர் பாதுகாத்து வருவதால் பட்டாம் பூச்சிகள் அதிகளவு பெருகியுள்ளன என்றார்.

வனத்துறையினர் தெரிவித்தது: இங்கு பட்டாம்பூச்சிகளுக்கு தேவையான தாவரங்கள் உள்ளதால் கூட்டம், கூட்டமாக இங்கு சுற்றித் திரிகின்றன. மேலும் பட்டாம் பூச்சிகளுக்கு தேவையான தாவரங்களைக் கண்டறிந்து அதனை இப்பகுதியில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com